Published:Updated:

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரையாவது சமன் செய்யுமா தென் ஆப்ரிக்கா?

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரையாவது சமன் செய்யுமா தென் ஆப்ரிக்கா?
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரையாவது சமன் செய்யுமா தென் ஆப்ரிக்கா?

இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது தென் ஆப்ரிக்கா. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், சாம்பியன்ஸ் டிராபி, மூன்று டி20  போட்டிகள்   கொண்ட தொடர்  ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்திருந்தது. 

ஒருநாள் தொடரில் தோல்வி, சாம்பியன்ஸ் டிராபியிலும் அரை இறுதிக்குக் கூடத் தகுதி பெறவில்லை, டி20 தொடரும் இங்கிலாந்துக்கே. இப்படி வரிசையாக தோல்வி மேல் தோல்வி சந்தித்துக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்க அணி  டெஸ்ட் தொடரையாவது வென்று பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு பதிலடியாக தென் ஆப்ரிக்கா 340 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக நாட்டிங்காம் டெஸ்ட் மேட்ச்சை வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 239 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் அபாரமான வெற்றியைச் சுவைத்திருக்கிறது. இதன் மூலம் 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. 

தென் ஆப்ரிக்க அணிக்கு இது மிக முக்கியமான டெஸ்ட் போட்டியாகும். இந்த மேட்சில் தோற்றாலோ, டிரா செய்தாலோ தொடரை இழக்க வேண்டியதுதான். மான்செஸ்டரில் நடக்கும் இந்த டெஸ்ட் மேட்சில் வென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தது. கடந்த ஒன்றை வருடமாக டெஸ்ட் தொடரை இழக்காத தென் ஆப்ரிக்க அணி  இந்த முறை இங்கிலாந்தில் தோற்றால் ஐசிசி தரவரிசையில் ஒரு இடம் சரியக்கூடும். இதுவரை இங்கிலாந்து மண்ணில் தோல்விகள் துரத்தினாலும் கடைசி போட்டியில் வென்று ஆறுதலோடு ஊருக்கு கிளம்ப எத்தனிக்கிறது. அதற்கு இடம் கொடுக்குமா ரூட் படை?