Published:Updated:

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி, பனிமய மாதா பேராலய 435-ம் ஆண்டு 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு  நாளை தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த  26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது, தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா. இந்த விழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், ஏழை எளியோர் வளம் பெறவும், மாணவ மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், படகுத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்புத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலி நடந்து வருகிறது.

இன்று 9-வது நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம் இந்த பனிமயமாதா அன்னை ஆலயம் மட்டும்தான். அதேபோல் மற்ற ஆலயங்களில் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும்தான் தினமும் 8 திருப்பலிகள் நடக்கின்றன. இந்த ஆலயத்தில் கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லிம் மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பதுதான் கூடுதல் சிறப்பு.  10-ம் நாள் திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெருவாரியான பூக்களை இந்து மக்கள் தான் வழங்கி வருகின்றனர்.


 

நாளை சனிக்கிழமை 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. நாளையுடன் நிறைவு பெறுகிறது பனிமய அன்னை பேராலய திருவிழா.