வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (06/08/2017)

கடைசி தொடர்பு:10:21 (06/08/2017)

'ஒரு கத சொல்ட்டா சார்?' - டாம் அண்ட் ஜெர்ரி சொல்லும் நண்பேன்டா கதை

எலிக்கும் பூனைக்குமான சண்டைக்கு நம் சண்டைகளை விட வயது அதிகம். அந்த 'நீயா நானா' குடுமிப்பிடியை கேலிச் சித்திரத்தின் வாயிலாக தந்தவர்கள்தான் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோஸப் பர்பேரா. நம் குழந்தைப் பருவத்தை நினைத்து நெகிழவும், மகிழவும் இந்தக் கார்ட்டூனைப் போல உதவும் கருவி வேறில்லை. டாம் என்றழைக்கப்படும் பூனை, ஜெர்ரி என்றழைக்கப்படும் எலியைத் துரத்தித் துரத்தி பல்பு வாங்கும். நிஜ வாழ்க்கையில் பூனைதான் எல்லோருக்கும் பெட், எலியைக் கண்டால் கட்டையை தூக்கிப் போட்டு கொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் எல்லோருக்குமே தோன்றும். ஆனால் இந்த கார்ட்டூனில் எல்லோருக்கும் ஃபேவரைட் நம்ம ஜெர்ரிப் பயதான். அத்தகைய டாம் அண்ட் ஜெர்ரி உருவான கதையைதான் இக்கட்டூரையில் காணப்போகிறோம். தற்பொழுது மீசை வைத்த 90ஸ் கிட்ஸுக்கு சமர்ப்பணம். 

ஹன்னா, பர்பேரா டாம் அண்ட் ஜெர்ரி

'டாம் அண்ட் ஜெர்ரி' உருவான கதை :

டாம் ஜெர்ரி

ஒரு நாள் ஹன்னா அவரது வீட்டுக் கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பூனை இவரை நோக்கிப் பாய்ந்தது. இதைப் பார்த்த பதட்டத்தில் வீடு முழுக்க தலை தெறிக்க ஓடியிருக்கிறார். பதட்டம் குறைந்ததும், 'நம்ம ஏன் இதையே கார்ட்டூன் கான்செப்டா மாத்தக் கூடாது?' என்ற தெளிவு பிறக்க, டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் பூனைக்கும் எலிக்கும் உயிர் கொடுத்தார். கான்செப்ட்டை உடனே ஸ்க்ரிப்டாக மாற்றும் வேலையில் பர்பேரா உதவியுடன் இறங்கினார். எலியை வில்லனாக பார்த்த மக்களிடையே ஹீரோவாக காட்டிவிடலாம் என்ற முயற்சியில் இருவரும் மும்மரமாக வேலையைத் தொடங்கினர். எலியைத் துரத்தும் போது பூனை வாங்கும் அடி, அந்த சமயத்தில் நடக்கும் ரகளைகள், சுற்றியிருக்கும் பொருட்கள் உடைவது, பூனைக்கு ஏற்படும் அடியால் அதனுடைய உடலமைப்பு மாறுவது என பல கோணங்களில் யோசித்து சுடச்சுட ஒரு ஸ்க்ரிப்ட்டை உருவாக்கினார்கள். அதே சூட்டில் அக்கேலிச் சித்திரத்துக்கு 'Puss Gets The Boot' என்று பெயரும் வைத்தனர். 1940ல் எம்.ஜி.எம்மின் உதவியோடு கார்ட்டூன் திரையிடப்பட்டது. ஆனால் தொடக்கமே தோல்விதான். முயற்சியை கைவிடாமல் கார்ட்டூனுக்கு வேறு பெயர் வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அதற்காக போட்டி ஒன்றை நடத்தினர். அதில் பங்கேற்ற ஜான் கார் என்பவர் சொன்ன பெயர்தான் 'டாம் அண்ட் ஜெர்ரி'. கேட்டவுடன் பச்சக்கென பிடித்துவிட பெயர் வைத்து பிள்ளையார் சுழி போட்டார்கள். பெயர் மாற்றங்களுக்கு ஏற்ப ஸ்க்ரிப்ட்டையும் ப்ரொடக்‌ஷன் வேலைகளையும் மெருகேற்றி 'டாம் அண்ட் ஜெர்ரி' என்ற பெயரில் கார்ட்டூனை ஒளிபரப்ப அது முதல் பாலிலேயே ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது.  டாமுக்கு ஜாஸ்பர் என்றும், ஜெர்ரிக்கு ஜிங்க்ஸ் என்றும் வேறு பெயர்களும் உள்ளன. 

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி :

கதாபாத்திரங்களை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது அதில் சில மாற்றங்களை புகுத்தி ரசிகர்களுக்கு போரடிக்காமல் பார்த்துக்கொண்டனர். இந்த ரகளையான மாற்றங்கள் காரணமாகவே ஷோ ஆல்டைம் ஹிட்டானது. இந்த ஜெனரேஷன் குழந்தைகளுடன் பேச்சுக் கொடுத்தால், 'ஷேப் ஆஃப் யூ தெரியுமா?', 'டெஸ்பாஸிட்டோ தெரியுமா?', 'அட்லீஸ்ட் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலாவது தெரியுமா ப்ரோ?' என்று கேட்கும் கேள்விகளை சமாளிக்கவே முடியவில்லை. 'நான் கடைசியா பார்த்த கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி பா'னு சொன்னா எகத்தாளச் சிரிப்புதான் பதிலுக்குக் கிடைக்கும். 90ஸ் கிட்ஸ் இன்னமும் போர் அடிச்சா பாக்குற கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரிதான். என்ன மக்களே உண்மை தானே?. எத்தனை விருதுகளை வாங்கிக் குவித்திருந்தாலும், நாளுக்கு நாள் அசராமல் தங்களை அப்டேட் செய்துகொண்டே இருந்ததுதான் டாம் அண்ட் ஜெர்ரி நம்மை இவ்வளவு தூரம் பாதிக்கக் காரணம். 

டாம் அண்ட் ஜெர்ரியில் இவர்களும் ஹீரோதான் :

டாம் அண்ட் ஜெர்ரி

பல எபிசோடுகளுக்குப் பின் புது புது கதாபாத்திரங்கள் சேரத் தொடங்கியது. ஸ்பைக் என்ற புல் டாக்கும் எல்லோருக்கும் ஃபேவரட்டாக இருந்தது. ஜெர்ரி ஆபத்தில் மாட்டிக் கொண்டால் முதலில் வந்து நிற்பது ஸ்பைக்தான். திடகாத்திரமான உடற்கட்டு, கூர்மையான பற்கள், கழுத்தில் ரவுடி செயின், இதுதான் ஸ்பைக்கின் தோற்றம். கொஞ்ச நாள் கழித்து ஸ்பைக்கோடு சேர்த்து குட்டி ஸ்பைக்கும் கலக்கியது. பிறகு, ஜெர்ரியின் நண்பனாகவும், சமயத்தில் எதிரியாகவும் வரும் பூனை கேரக்டர்தான் பட்ச்.  புத்திசாலி ஜெர்ரியோ டாமுக்கும், பட்ச்சுக்கும் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும். மஞ்சள் குருவியாக வரும் குவாக்கர், ஆரஞ்ச் வண்ணப் பூனை லைட்னிங், இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கதாபாத்திரம் டாமின் முதலாளி அம்மா மேமி ஷூஸ். மேமி வீட்டில்தான் டாம் செல்லப் பிராணியாக வளரும். மேமி வீட்டில் அட்ராஸிட்டி செய்யும் ஜெர்ரியைப் பிடித்தால் டாமுக்கு சிக்கன் பீஸ், இல்லையென்றால் அடித்து துவைத்துவிடுவார் மேமி. ஒரு கட்டத்தில் டாமும் ஜெர்ரியும் கூட்டு சேர்ந்து சிக்கனை கைப்பற்றிய எபிசோடுகள் எல்லாம் கூட இருக்கிறது. முக்கியமாக முதலாளி அம்மா மேமியின் முகத்தைக் காட்டாமலே கடைசி வரை கால்களை மட்டுமே காட்டி வந்ததுதான் இந்த கார்ட்டூனில் பயன்படுத்திய நுணுக்கம். லேட்டஸ்ட்டாக இப்படித்தான் மேமியின் முகம் இருக்கும் என்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகியது.  

என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான் :

டாம் அண்ட் ஜெர்ரி

இந்த கட்டுரையின் முக்கியமான நோக்கமே இன்று ஃப்ரெண்ட்ஷிப் டே. பல எபிசோடுகளில் இவங்க ரெண்டு பேரும் அடிச்சு மல்லுக்கட்டுவதைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்திருந்தாலும், ஒரு சில எபிசோடுகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து கலக்கிய நிகழ்வுகள் நெகிழ வைக்கும். அதுதான் நமக்கான மாரல் மக்களே. என்னதான் நண்பன் கூட அடிச்சு உருண்டாலும் ஆபத்துனு வந்தா கைகொடுக்கிற முதல் ஆள் நாமதானே! ரெகுலரா கொலம்பஸ் கொலம்பஸ், முஸ்தபா முஸ்தபானு எல்லாம் பாடாம டாம் அண்ட் ஜெர்ரி வழியா இந்த நண்பர்கள் தினத்தை கொண்டாடுவோம் மக்கா!


டிரெண்டிங் @ விகடன்