Published:Updated:

பேப்பர் போட்டதிலிருந்து.. ஃபேர்வெல் வரை.. ஆபீஸ் கலாட்டா!

தமிழ்ப்பிரபா
பேப்பர் போட்டதிலிருந்து.. ஃபேர்வெல் வரை.. ஆபீஸ் கலாட்டா!
பேப்பர் போட்டதிலிருந்து.. ஃபேர்வெல் வரை.. ஆபீஸ் கலாட்டா!

அலுவலகத்தில் செய்யும் வேலை ஏதாவதொரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால், சிறைக்கைதி தப்பிப்பதற்குத் திட்டம் தீட்டுவதுபோல அங்கு இருந்தபடியே ரகசியமாக சில விஷயங்களைச் செய்வோம். ``வேலை செட் ஆகலை. பேப்பர் போடப்போறேன்" என்று நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களிடம் சொல்லாமல் கமுக்கமாக இருந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்துவோம். நண்பர்களிடம் வேலைக்குச் சொல்லிவைப்பது, சீக்கிரம் அலுவலகத்துக்கு வந்து ரெஸ்யூம் பிரின்ட் அவுட் எடுத்து வைப்பது, வெளியில் எங்கேயாவது வேலை கிடைப்பது மாதிரி தெரிந்தால் டீம் லீடர், மேனேஜர் போன்றோரின் கேள்விகளுக்கு எகத்தாளமாகப் பதில் சொல்வது, தைரியமாக Youtube, ஃபேஸ்புக் பார்த்து சத்தம் போட்டுச் சிரிப்பது போன்றவை நம்மையும் அறியாமல் நாமே செய்யும் சில செயல்பாடுகள். இன்னொரு பக்கம், வேலையைவிட்டுப் போக முடிவு எடுத்த  உடனே பல்வேறு காரணங்களால் அலுவலகத்தில் அமர்ந்து முன்புபோல மனமுவந்து வேலையைச் செய்யத் தோன்றாது. ஒருமாதிரி மசமசவென இருப்போம். வேலைக்கான முயற்சிகளில் ஈடுபடும் சமயங்களில் க்ளீன் ஷேவிங், பக்காவான ஃபார்மல் டிரெஸ் போன்ற தோரணைகளில் வருவதைக் கண்டு சிலர் மோப்பம் பிடித்துக் கிண்டல்செய்வர்.  அவர்களிடம், "அதெல்லாம் ஒண்ணும் இல்லை'' என்று சமாளிக்கவேண்டிய இக்கட்டான காலகட்டம் அது.

அந்தக் காலகட்டத்தைத் தாண்டி புதிய வேலை கிடைத்து Offer லெட்டர் உறுதியானதும், பணிபுரியும் நிறுவனத்துக்குள் செல்லும்போது உடம்பில் மிதப்பு கூடியிருக்கும். `உங்ககிட்ட one to one-ல பேசணும்' என்று மேனேஜருக்கு skype-ல் தகவல் சொல்லும்போதே மந்தையிலிருந்து ஓர் ஆடு தப்பித்துச் செல்கிறது என்பது அவருக்குத் தெரிந்துவிடும். இருந்தாலும், தகவலைக் கேட்ட பிறகு அதிர்ச்சி ஆவார். விக்ரமும் வேதாவும் சந்திப்பதைப் போன்ற தனியறையில் மீட்டிங் ஆரம்பிக்கும். “வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு வேற ப்ளான் வெச்சிருக்கேன். உங்களால்தான் அது முடியும்” என்று ஆசைவார்த்தைகளைக் கூறுவார்.  `நீ சொன்னதை நம்பி நம்பி, இத்தனை வருஷங்களா நான் வீணாப்போனதெல்லாம் போதும். போய்யா' என்கிற வார்த்தைகளை மனதுக்குள் சொல்லிப் பொறுமிக்கொண்டாலும், வெளியே சிரித்தபடி ``இல்லை சார், அங்கே நல்ல பே தர்றாங்க. என்னோட இப்போதைய கண்டிஷனுக்கு அங்கே போறதுதான் நல்லது" என்று சொல்லி, ராஜினாமாவை வெற்றிகரமாக நிறைவேற்றி வெளியே வருவோம். 

அதற்குப் பிறகு நோட்டீஸ் பீரியட் 30 நாள்களா, 60 நாள்களா என்பதைப் பொறுத்து, தேனிலவு காலம் ஆரம்பம் ஆகும். போகிறவனைப் பழிவாங்க வேண்டுமென்று, சில உயர் அதிகாரிகளின் வஞ்சனைக்குப் பலி ஆகாதவர்களுக்கு அந்த நோட்டீஸ் பீரியட் காலம் என்பது சொர்க்கம். டீம் மீட்டிங்கின்போது தைரியமாக ஏப்பம்விடுவது, காது குடைவது, சீரியஸாக சிஸ்டம் முன் அமர்ந்து வேலைசெய்பவனை கிண்டல் செய்வது என வேறு கம்பெனிக்குப் போகிற களிப்பில் புத்துணர்ச்சி முகாமுக்கு வந்த யானை மாதிரி 60 நாள்களும் சுற்றித் திரியலாம்.
 
நோட்டீஸ் பீரியடின் கடைசி நாளன்று `Farwell' என்றொரு சடங்கு செய்து அனுப்புவார்கள்.  அதில் கலந்துகொள்வதற்கு நிறைய ஞாபகமறதியும் சகிப்புத்தன்மையும் தேவை. தவிர, விழா நாயகன் / விழா நாயகி செய்த ராஜ துரோகத்தை எல்லாம் மறந்துவிட்டு ‘He is One of the Great Person I’ve ever met’ என்று புளுகவேண்டும். அவரும் அதற்கு முழுவதும் பாத்திரமானவர்போல மெல்லிதாகச் சிரிப்பார்.
 
பொதுவாக, ஆணுக்கு நடத்தப்படும் Farewell நிகழ்ச்சியில், உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்காது. அதுவே பெண்ணுக்கு என்றால், அவளின் ஆருயிர்த் தோழிகள் அந்த வாரம் முழுக்க சௌகார் ஜானகி, வைஷ்ணவி மாதிரி சோகம் கவிந்த முகத்தோடு வலம்வருவார்கள்.  ‘போற இடத்துலயாவது அவ சந்தோஷமா இருக்கணும்’னு தோழி பிரியும் கடைசி நாளன்று மண்சோறு தின்னவும் தயங்க மாட்டார்கள்.
 
இது ஒரு பக்கமிருக்க, மேனேஜர் என்னவென்றால் ‘It is tough to find a replacement for you’ என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்வார். பார்வையாளனான நமக்கு, `அய்யோ சாரே, அவன் பேப்பர் போட்டுட்டு போறதே உங்களால்தான்' என்று சொல்ல வாய் நமநமக்கும். ஆனால், நினைத்ததையெல்லாம் சொல்லிவிட வாழ்க்கையொன்றும் அத்தனை சுலபம் இல்லையே!
 
கடைசியாக Farewell ஆசாமி ஏற்புரை நிகழ்த்துவார். 30 to 40 சதவிகிதச்  சம்பள உயர்வோடு வெளியேறும் சந்தோஷத்தைக் காட்டிக்கொள்ளாதவாறு ரியாலிட்டி ஷோவில் ரிஜெக்ட் ஆகி செல்வதுபோல பேசுவார்.  இங்கு வேலைசெய்த சமயத்தில் ஏற்பட்ட Unforgettable நிகழ்வுகளை எல்லாம் தொகுப்பாகச் சொல்வார். அதில் அப்ரைசலின்போது நடந்த அடிதடிகள் எல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு. எல்லாம் முடிந்ததும் Farewell நடந்த மீட்டிங் ரூமிலிருந்து வரும் ஒவ்வொருவரும் ஒரு துன்பியல் நாடகத்தைப் பார்த்துவிட்டு வருவதுபோல கனத்த மனதோடு மெள்ள அசைந்து வருவார்கள். அதில் பெரும்பாலானோரின் எண்ண ஓட்டம் `நமக்கு எப்போது விடிவுகாலம்' என்பதாகவே இருக்கும்.