Published:Updated:

குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி வழக்கில் காவல்துறைக்கு உத்தரவு!

இரா.தமிழ்க்கனல்
குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி வழக்கில் காவல்துறைக்கு உத்தரவு!
குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி வழக்கில் காவல்துறைக்கு உத்தரவு!

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் மாணவி வளர்மதி மீதான வழக்கு விசாரணையில், அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராவார் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற வழக்குகளில் அரசாங்கம் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்துக்காக துண்டறிக்கை விநியோகித்து, குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சேலம் இதழியல் மாணவி வளர்மதி. இந்த குண்டர்சட்ட வழக்கை ரத்துசெய்யவும் இடைக்காலமாக  வளர்மதிக்கு ஜாமீன் அளிக்கவேண்டும் என்றும் அவரின் தந்தை மாதையன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் இன்று பதிலளிக்குமாறு சேலம் மாநகர போலீஸ் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி இன்று பதில் அளிக்கவேண்டிய போலீஸ் தரப்பு, இவ்வழக்கில் அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் வாதாட உள்ளதாகவும் பதிலளிக்க மேலும் அவகாசம் தருமாறும் கேட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் கொண்ட அமர்வு, வரும் 21-ம் தேதியன்று இவ்வழக்கில் விசாரணை நடக்கும் என்றும் அன்றைக்குள் பதிலளிக்கத் தயாராக வருமாறும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.