Published:Updated:

இன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் தரிசனம்: குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

ராகினி ஆத்ம வெண்டி மு.
இன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் தரிசனம்: குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
இன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் தரிசனம்: குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலில், சுவாமியைத் தரிசிக்க பக்தர்கள் மேற்கொள்ளும் யாத்திரையின் நிறைவு நாளான இன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், சிவபெருமான் பனிலிங்க வடிவில் தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். குறிப்பிட்ட 48 நாட்களைத் தவிர்த்து, மற்ற நாட்களில்  ஆண்டுதோறும் இந்தக் கோயில் பனியால் மூடப்பட்டே இருக்கும். அதனால், பனி இல்லாத இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே சிவ தரிசனம் கிடைக்கும் என்பதால், பனிலிங்கமாகக் காட்சிதரும் சிவபெருமானைத் தரிசிக்க, இந்தியா மட்டுமன்றி பல வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்வது அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.

அமர்நாத் கோயிலில், ஒரு நாளுக்கு மட்டும் சராசரியாக சுமார் 9,000 பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய இந்தப் புனித யாத்திரையின்மூலம், இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களை, ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக தரிசனத்திற்கு அழைத்துச்சென்று வருகின்றனர். இந்நிலையில், 48 நாள்கள் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படும் அமர்நாத் யாத்திரையின் நிறைவு நாளான இன்று, பக்தர்களின் வருகை அதிகரித்தே காணப்படுகிறது.