மீம்ஸ் மூலம் இயற்கை விவசாயம்... லைக்ஸ் அள்ளும் Learn Agriculture பக்கம்..!

Learn Agriculture

ஃபேஸ்புக் தொடங்கி அனைத்து சமூக வலைதளங்களிலும் மாஸ் ஹிட் என்றால் அது மீம்ஸ்தான். பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத விஷயங்களை ஒரேயொரு புகைப்படத்தில் செய்துவிடுகிறார்கள் மீம் கிரியேட்டர்கள். அதேசமயம் இவை பெரும்பாலும் சிரிக்கவைக்கவும் அடுத்தவர்களை கலாய்ப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. ஒரு சிலர்தான் இதை ஆக்கபூர்வமாகவும் அடுத்தவருக்கு அறிவு புகட்டவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தின் அத்தியாவசியம் குறித்தும், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்கம்தான் "Learn agriculture".  இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் சந்தோஷை சந்தித்துப் பேசினோம்.....

எல்லாரும் மத்தவங்கள சிரிக்க வைக்க மீம்ஸ் போடும்போது, நீங்க மட்டும் வேளாண்மை சார்ந்து மீம்ஸ் போட என்ன காரணம்?

நான் அண்ணாமலைப் பல்கலையில இளங்கலை வேளாண்மை படிச்சேன் படிக்கும்போதே இயற்கை வேளாண்மையைப் பற்றி விவசாயிகளிடத்துல விழிப்புஉணர்ச்சி ஏற்படுத்தனும்னு ரொம்ப ஆசை. படிப்பு முடிஞ்சதும் நம்மாழ்வார் இயற்கை முறை வேளாண் பயிற்சியில கலந்துகிட்டு இயற்கை வேளாண்மையைப் பத்தி எல்லாமே கத்துக்கிட்டேன். அத விவசாயிகளிடமும் மற்றவர்களிடமும் சொல்லணும்னு எடுத்த முயற்சிதான் இது. 

இயற்கை விவசாயத்துக்காக மீம்ஸ் தவிர வேற என்னவெல்லாம் செஞ்சு இருக்கீங்க?

ஆரம்பத்துல மீம்ஸ் மட்டும்தான் போட்டுட்டு இருந்தேன். அதுவும் ஒரு நாளைக்கு ஒன்னு அந்த மாதிரிதான். நாம இன்னும் நிறைய செய்யணும்னு தோணுச்சு. அதனாலதான் நண்பர்களோட உதவியோட இப்ப "Learn agriculture"னு ஒரு யூ-ட்யூப் சேனலையும் உருவாக்கியிருக்கோம். இதுவரைக்கும்  வேளாண்மை சார்ந்து கிட்டத்தட்ட ஐந்நூறு மீம்ஸுக்கும் மேல போட்டிருப்போம். நமக்குத் தெரிஞ்ச விஷயத்த நாலுபேருக்கு சொல்லிக் கொடுப்பதுதான கல்வியோட அடிப்படை!

மீம்ஸ்

மீம்ஸ் ஆல்பம் பார்க்க

நீங்க எடுத்துகிட்ட முயற்சியில எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கீங்கனு நினைக்குறீங்க?

வெற்றினு நான் எதையும் சொல்லிக்க விரும்பல. ஆனா நான் தனியா போய் வேளாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கும்போதெல்லாம் நான் சின்னபையன்னு விவசாயிகள் மத்தியில அவ்வளவா எடுபடவே இல்ல. அதன் காரணமாத்தான் நான் மீம்ஸ்கள சாதனமா பயன்படுத்திகிட்டேன். ஆரம்பத்துல நான் சொல்றத கேட்க யாருமே இல்ல. ஆனா இப்போ என்னுடைய பேஜ்க்கு ஆயிரக்கணக்குல ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நிறைய விவசாயிகள் மெஸேஜ் மூலமா நிறைய ஆலோசனை கேக்குறாங்க. இதுவே பெரிய சாதனையா நினைக்குறேன்

நீங்க என்ன வேலை பாக்குறீங்க?

வேலைக்கு எல்லாம் போற மாதிரி எனக்கு ஐடியா இல்ல. என் சொந்த ஊரு திருவாரூர் மாவட்டத்துல இருக்குற நன்னிலம். அங்க கொஞ்சம் நிலம் வாங்கி இயற்கை முறையில விவசாயம் செய்யணும். எல்லாரும் வேற வேற வேலைக்குப் போயிட்டா யாரு பாஸ் விவசாயம் செய்றது?

இது உங்களோட தனிப்பட்ட முயற்சியா?

நிச்சயமா நண்பர்களோட உதவி இல்லாம இது சாத்தியம் இல்ல. எல்லாருமே எனக்கு முழுசா சப்போர்ட் பன்றாங்க. ஐ.டி துறையில வேலை பார்க்குற நிறைய நண்பர்கள் ஆர்வமா இதுல பங்கெடுத்துக்குறாங்க. அதுமட்டும் இல்லாம எங்களுக்கு எல்லா மாவட்டதுல இருக்கிற "அக்ரி அக்ட்டிவிஸ்ட்" கூடவும் தொடர்பு இருக்கு. விவசாயிகள் சந்தேகம்னு கேட்டா அவங்களுக்கு அருகில் இருக்குற ஆளுங்க மூலமா தீர்த்து வைக்குறோம். இது ஒரு டீம் வொர்க் தான் நிச்சயமா தனிப்பட்ட முயற்சி இல்ல.

உங்களுடைய லட்சியம் என்ன?

குறைந்தபட்சம் என் ஊர்ல இருக்குற எல்லா விவசாயிகளயும் இயற்கை விவசாயத்துக்கு மாத்தணும். மாற்றம் என்னிலிருந்தே தொடங்கணும் அவ்வளவுதான்.

என்றவரிடம் பெருமையோடு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!