Published:Updated:

விழுப்புரத்தில் கம்பன் விழா!

நி.ராஜேஷ்வர்
விழுப்புரத்தில் கம்பன் விழா!
விழுப்புரத்தில் கம்பன் விழா!

தமிழகத்தில் சற்றேறக்குறைய 50-க்கும் மேற்பட்ட கம்பன் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்தக் கழகங்களின் மூலம் மாணவர்களிடையே தமிழை வளர்க்கவும், மாணவர்களிடம் கம்பராமாயணத்தைப் பற்றி பரப்புரையும் செய்து வருகிறது. விழுப்புரம்  சண்முகா திருமண மண்டபத்தில் விழுப்புரம் கம்பன் கழகம் சார்பாக பல நிகழ்வுகள் நடந்தன.

மூன்றாம் நாளான நேற்று  காலை 9 மணியளவில் விழாவின் ஒருபகுதியாக  மாணவர்களுக்கு கம்பராமாயணத்தின் பாலகாண்டப் பகுதியில் "திருஅவதாரப் படலத்தில்" இருந்து தேர்வு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 10 மணியளவில் 'செவி நுகர் கனிகள்' என்ற தலைப்பில் முனைவர் த.ரங்கராஜா  தலைமையில் இலக்கியப் பேச்சாளர்கள் கம்பராமாயணத்தின் ஒவ்வொரு காண்டத்தைப் பற்றி மிக எளிமையாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதன்மூலம் மாணவர்கள் கம்பராமாயணத்தை மிக எளிமையாக அறிந்துகொண்டனர்.

இறுதியாக பாஜக எம்பியும் இலக்கியவாதியுமான இல.கணேசன், கம்பராமாயணத்தைப் பற்றி நகைச்சுவை நயம்பட எடுத்துரைத்தார். இறுதியில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கம்பன் கழகத்தின் மூலம் கல்வி உதவித்தொகையை வழங்கினார். விழா நிகழ்ச்சியினர் நிகழ்ச்சியின் வாயிலில் பல தமிழரிஞர்களின் உரைகளின் குறுந்தகட்டினையும் (CD), பல்வேறு இலக்கிய புத்தகங்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். இதனால், பல மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய நூல்களையும், குறுந்தகட்டினையும் வாங்கி பயனுற்றனர்.

விழாவின் மற்றொரு பகுதியாக மாலை 6 மணியளவில்   தமிழ்நாட்டின் 2017-ம் ஆண்டின் 'கம்பன் விருது' வாங்கிய இலங்கை இ.ஜெயராஜ் நடுவராக பங்கேற்ற,  'கம்பன் காட்டும் அன்பும், அறமும் தளர்கிறதா, வளர்கிறதா?' எனும் தலைப்பில் பல பட்டிமன்றப் பேச்சாளர்கள் கலந்துகொண்டு நகைச்சுவையாகப் பேசினர். இதில் பல பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டிமன்றத்தை சிறப்பித்தனர்.