Published:Updated:

'போலீஸால் என் சுதந்திரம் போச்சு'? கலெக்டரிடம் புகார் அளித்த மாவோயிஸ்ட்

செ.சல்மான் பாரிஸ்
'போலீஸால் என் சுதந்திரம் போச்சு'? கலெக்டரிடம் புகார் அளித்த மாவோயிஸ்ட்
'போலீஸால் என் சுதந்திரம் போச்சு'? கலெக்டரிடம் புகார் அளித்த மாவோயிஸ்ட்

"செல்லும் இடமெல்லாம் என் பின்னால் 15 போலீஸார் பின் தொடர்கின்றனர். இதனால் என்னுடைய அன்றாட வாழ்வும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது" என்று மதுரை ஆட்சியரிடம் மாவோயிஸ்ட் மனு அளித்துள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று  வந்த மாவோயிஸ்ட் விவேக் என்ற விவேகானந்தன் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியவர், "தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 2007-ம் ஆண்டு  மாவோயிஸ்ட் அமைப்பு சார்பாக ஆயுதப் பயிற்சி அளிப்பதாகக் கூறி என்னை 2012-ல் சென்னையில் வைத்து கைது செய்து மதுரை மத்தியச் சிறைச்சாலையில் அடைத்தனர்.  பின்பு 2017-ல் மே மாதம் விடுதலை செய்யப்பட்டேன். விடுதலை செய்த பின்பும் உளவுப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.  என் பின்னால் 15 போலீஸார்  செல்லும் இடமெல்லாம் பின் தொடர்கின்றனர். நான் தங்கியிருக்கும் இடத்தில் தொடர்ந்து போலீஸார் உள்ளனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை என்னுடன் பழக விடாமல் தடுக்கின்றனர். இதனால் என்னுடைய அன்றாட வாழ்வும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. என்னுடைய சுதந்திரமான வாழ்க்கையில் தலையிடுகிறார்கள். எனவே, ​​எனக்கு முழு சுதந்திரம் தரும்மாறு கலெக்டரிடம்  மனு கொடுத்துள்ளேன்"  என்றார்.

​​​​