Published:Updated:

புழு கிடந்த தண்ணீர் கேனுடன் கலெக்டரிடம் புகார்!

வீ கே.ரமேஷ்
புழு கிடந்த தண்ணீர் கேனுடன் கலெக்டரிடம் புகார்!
புழு கிடந்த தண்ணீர் கேனுடன் கலெக்டரிடம் புகார்!


சேலம் மாவட்டத்தில் டெங்கு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் கலெக்டர் சம்பத் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களை துரிதமாக சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று காலை அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த மணி என்பவர் புழுவோடு குடிநீர் கேனை கொண்டு வந்து கலெக்டரிடம் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.  

இதுப்பற்றி மணியிடம் பேசிய போது, ''நான் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ராம் நகரில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் குடிநீர்க் கிடைக்காததால் பெரும்பாலும் கேன் தண்ணீர் வாங்கித்தான் குடிக்கிறோம். நான்  கடந்த 7 வருடமாகக் குடிநீருக்கு கேன் தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறேன். அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் அக்வா க்லாரா என்ற நிறுவனத்திடம் குடீநீர் கேன்கள் வாங்குகிறார்கள். ஒரு கேன் 25 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. கடந்த 2 மாதமாக ஒரு கேன் 35 ரூபாய்க்கு விற்கிறார்கள். குடிநீர் கிடைக்காததால் இந்தக் குடிநீர் நிறுவனத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  

இந்தக் குடிநீர் கம்பெனி ஒவ்வொரு பகுதியிலும் டீலர்ஷீப் வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்து விடுவார்கள். அந்த டீலர்கள் ஒவ்வொரு வீடாகக் கொடுப்பது வழக்கம். என் வீடு உள்ள ராம்நகர் பகுதியில் உள்ள மளிகைக் கடையில், நான் குடிநீர் கேன் வாங்குகிறேன். கடந்த 6-ம் தேதி வாங்கிய குடிநீர் கேன்னில் உள்ள தண்ணீரை ஜாடியில் ஊற்றினேன். தண்ணீர் கலங்கலாகவும் பவுடர் போட்டிருப்பதைப் போல இருந்ததால் உற்றுப்பார்த்த போது,  தண்ணீருக்குள் புழு நெண்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஊரே டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குடிநீரில் புழு இருந்தது மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனக்குக் கடந்த 10 நாள்களுக்கு முன்பு டைபாய்டு காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தேன். தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறேன். இந்நிலையில் இப்படிக் குடிநீரில் புழு இருப்பது மேலும் சுகாதாரக் கேடு விளைவிக்கும் என்பதால் கேனோடு கலெக்டரைச் சந்தித்து முறையிட்டு அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்குத் தூய்மையான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக வந்தேன்'' என்றார்.
இதுப்பற்றி அக்வா க்லாரா நிறுவனத்தின் மேலாளர் செந்தில்குமார், ''ஹாட் வாட்டர், குளோரின் பவுடரைக் கொண்டு சுத்தமாகக் கழுவிய பிறகுதான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிடிக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவரும் வாட்டர் கேன் 100 சதவிகிதம் சுத்தமானது. அசுத்தமான புழு இருக்கும் தண்ணீர் வர வாய்ப்பே இல்லை. இன்னும் எங்களுடைய கவனத்திற்கு இந்த விஷயம் வரவில்லை. விசாரித்து பார்க்கிறோம்'' என்றார்.