Published:Updated:

’ஃபேஸ்புக்கில் படம் போடுவதைவிட..!?’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்

’ஃபேஸ்புக்கில் படம் போடுவதைவிட..!?’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்
’ஃபேஸ்புக்கில் படம் போடுவதைவிட..!?’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்

’ஃபேஸ்புக்கில் படம் போடுவதைவிட..!?’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்

கடந்த 2016-ம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில், தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஆதித்யாவின் படம்தான் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து வந்திருப்பவர் அர்ச்சுனன்.  ``ஒரு கேமரா வாங்குவது என்பது, இன்றைக்கு சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். அதை வாங்கிக் கையாளக் கற்றுக்கொண்ட பிறகு, உங்களின் நோக்கம் என்னவாக இருக்கிறதோ, அதிலேயே கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார் அர்ச்சுனன். நேஷனல் ஜியோகிராஃபியின் `டெய்லி டஜன்' என்கிற சிறந்த 12 புகைப்படங்களில் ஒன்றாக இவர் எடுத்த `தாயிடம் பால் குடிக்கும் குரங்குக் குட்டி'யின் போட்டோ கடந்த வாரம் வெளியானது.  

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சுனன், ஐடி நிறுவனம் ஒன்றில் டிசைன் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறார். பெரும்பாலான இன்றைய இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கும் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமரா கனவுதான் இவருக்கும் இருந்தது. வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, தன் வருமானத்தில் சொந்தமாக ஒரு கேமரா வாங்கினார். ஆனால், தனக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் வருவதற்குக் காரணமாக இருந்த நண்பர்களைப்போல, தொழில்முறை திருமண போட்டோகிராஃபராக ஆவதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார். 

``கடந்த இரண்டு ஆண்டுகளாக நேஷனல் ஜியோகிராஃபிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். அதில் மூன்று நான்கு வகை உள்ளன. `எடிட்டர் பேவரைட்' என ஒரு பிரிவு உள்ளது. அதில் எனது புகைப்படங்கள் இதுவரை ஐந்து தேர்வாகியுள்ளன. அதில் வெளியிடப்படும் படங்களில் அதிகம் ஓட்டு விழும் படம் `நேஷனல் ஜியோகிராஃபி' புத்தகத்தில் இடம்பெறும். இது இல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் `வன உயிர் புகைப்படங்கள்' போட்டி ஒன்று நடத்துவார்கள். அதிலும் டெய்லி டஜன் பிரிவில் வெளியான புகைப்படங்கள் போட்டியிடும். என் எண்ணமெல்லாம் நேஷனல் ஜியோகிராஃபி தொடங்கி போட்டோகிராஃபிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழ்களில் பரிசு வாங்க வேண்டும் என்பதே! நான் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். நிலப் படங்கள், இரவுப் படங்கள் மற்றும் வன உயிர்கள் இவற்றை மட்டும்தான் நான் படம் எடுப்பேன். என் நண்பர்கள் சிலர்  ஆர்வத்தில் எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கி இயற்கை, நிலப்படங்கள்(Landscape) என்றெல்லாம் படம் எடுக்கத் தொடங்கியவர்கள், இப்போது மேரேஜ் போட்டோகிராஃபர்களாக மாறிவிட்டனர். சிலர் பகுதி நேரமும், சிலர் முழு நேர போட்டோகிராஃபர்களாவும் ஆகிவிட்டனர்.  

என் வேலை என்பது, ஒவ்வொரு புராடெக்ட்டுக்குமான சிறந்த பேக்கிங் டிசைன் செய்து தருவது. ஓர் அடுக்கில் மூன்று அரிசிகள் இருக்கின்றன என்றால், எது நேர்த்தியான பேக்கிங்கோ அதுதான் முதலில் விற்பனையாகும். அந்த பேங்கிங்  டிசைனிங்தான் என் பணி. என் வேலைக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் புகைப்படங்களைப் பயன்படுத்துவோம். அவை ஒவ்வொன்றும் எடுக்கப்பட்டவிதம் என்னைக் கவரத் தொடங்கியது. அதுதான் எனக்கு புகைப்படங்கள் மீதான ஆர்வத்தைக் கொடுத்தது. ஆசைப்பட்டு வாங்கினாலும் ஒரு கேமராவை இயக்குவதிலும் அதை எப்படிக் கையாள்வது எனக் கற்றுக்கொள்ள ஓர் ஆண்டு ஆனது" என்றவர், இந்தக் குறிப்பிட்ட படத்தை எடுத்த நிகழ்வு குறித்து கூறினார்.

``மாமல்லபுரத்தில் ஒரு `வாக்' போயிருந்தோம். அதாவது அங்கு உள்ள கட்டடக் கலை குறித்து ஒவ்வொரு பகுதியாகச் செல்லும் நடைப்பயணம் அது. அன்று மேகங்களும் சரியாக இல்லாத காரணத்தால், கையில் கேமரா இருந்தாலும் படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அப்போதுதான் இந்தக் குட்டிக் குரங்கைப் பார்த்தேன். அதன் அம்மா மடியில் இருந்ததைப் பார்த்தவுடன் அதைப் படம் எடுக்க வேண்டும் எனப் படங்கள் எடுக்கத் தொடங்கினேன். அன்றைக்கு மாமல்லபுரத்துக்குச் சென்றதன் முக்கியக் காரணமே, காலை சூரிய உதயத்தைப் படம்பிடிக்கத்தான். ஆனால், அது நடக்கவில்லை என்கிற கவலையை இந்தக் குரங்குக்குட்டி போக்கிவிட்டது. வெறும் மூன்று படங்கள் மட்டுமே எடுத்தேன். அதில் ஒன்றுதான் தேர்வாகியுள்ளது" என்றார். 
 
``பொதுவாக நேஷனல் ஜியோகிராஃபியில் படம் வெளியாகிவிட்டாலே, புரொஃபஷனல் தகுதி கிடைக்கும். பொதுவாக ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்றால் என்ன செய்வோம், ஃபேஸ்புக்கில் போடுவோம். அதில் போட்டோகிராஃபி தெரிந்தவர்கள் நான்கைந்து பேர் படம் குறித்து கருத்துச் சொல்வார்கள். மீதி விழும் லைக் எல்லாமே என் நட்பின் காரணமாகத்தான் இருக்கும். ஆனால், நேஷனல் ஜியோகிராஃபி மாதிரி இதழ்களின் இணையத்துக்கு அனுப்பும்போது பல்வேறுபட்ட கருத்துகள் கிடைக்கும். இதுவரை நூறு படங்கள் அனுப்பியிருந்தாலும் எடிட்டர் ஃபேவரைடில் ஐந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் ஒரு படம் மட்டுமே டெய்லி டஜனுக்குத் தேர்வாகியுள்ளது. ஆனால், நாம் படங்களுக்கு உரிய அங்கீகாரமும் விமர்சனங்களும் அங்கேதான் கிடைக்கும். அங்கு அனுப்பும் படங்கள் தேர்வாகவில்லை என்றால், என்ன காரணத்தால் தேர்வாகவில்லை, என்ன தவறு செய்துள்ளோம் என்று நாம் கூர்ந்து நோக்கி அறிந்துகொள்ளலாம். பெரிய அளவில் கலர் கரெக்‌ஷன் போன்றவை மிக மிகக் குறைந்த அளவில் செய்திருந்தால் அனுமதிப்பார்கள். கொஞ்சம் கூடுதலாக இருந்தால்கூட தேர்வு செய்ய மாட்டார்கள்.  முகநூலில் படம் போடலாம்தான். இருந்தாலும் ஆர்வத்துடன் நீங்கள் எடுக்கும் படங்கள் அதை ரசிப்பவர்களைச் சென்று சேர இப்படியான தளங்களில்தான் பகிரவேண்டும்" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு