Published:Updated:

நெல்லை அரசுப் பொருட்காட்சியின் வசூல் ரூ. 20 லட்சம்!

பி.ஆண்டனிராஜ்
நெல்லை அரசுப் பொருட்காட்சியின் வசூல் ரூ. 20 லட்சம்!
நெல்லை அரசுப் பொருட்காட்சியின் வசூல் ரூ. 20 லட்சம்!
நெல்லை அரசுப் பொருட்காட்சியின் வசூல் ரூ. 20 லட்சம்!

நெல்லை அரசுப் பொருட்காட்சியை இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதன்மூலம் 20 லட்சம் ரூபாய் வசூலாகி இருக்கிறது. 

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான் பக்தர்கள் கிராமப் பகுதிகளில் இருந்து நெல்லைக்கு வருகை தருவது வழக்கம். அவர்களின் பொழுது போக்குக்காக அரசுப் பொருட்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத் துறையின் சார்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, அரசுப் பொருட்காட்சியானது ஜூன் மாதம் 25-ம் தேதி தொடங்கியது. 

நெல்லை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமான இந்த நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். அரசுப் பொருட்காட்சி நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு சலுகைக் கட்டணமாக ரூ.5 மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது. 

அரசு பொருட்காட்சியானது இந்த ஆண்டு சிறப்பான வகையில் மக்களிடம் வரவேற்புப் பெற்றது. இதுவரை 42 நாட்களில் பெரியவர்கள் 1,11,957 பேரும், சிறியவர்கள் 28,212 பேரும் வந்துள்ளனர். அத்துடன், பள்ளிக் குழந்தைகள் 2068 பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 1,42,237 பேர் இதுவரை பொருட்காட்சியைக் கண்டு ரசித்துள்ளனர்.

இதனால், பெரியவர்கள் மூலம் ரூ.16,79,355, சிறியவர்கள் மூலம் ரூ.2,82,120, பள்ளிக் குழந்தைகள் மூலம் ரூ.10,340 என மொத்தம் ரூ.19,71,815 ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் அரங்குகளில் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகின்றன. அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த அரங்குகளையும், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி அரங்கையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

இது தவிர, அரசுப் பொருட்காட்சியில், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மக்களைக் கவரும் அரங்குகள் இடம் பெற்று இருப்பதாலும், மைதானத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் தினமும் நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாலும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து அவற்றை கண்டு ரசித்து வருகின்றனர்.