''என் காதல் கணவரின் மனது கோடிகளுக்குச் சமம்!" - 2000 கோடி சொத்தை காதலுக்காக துறந்த பெண்

காதலுக்கு சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் தெரியாது என்கிற கூற்றை நிரூபிக்கும் வகையில் தனக்குச் சொந்தமான 2000 கோடி ரூபாய் சொத்தை தூக்கி எறிந்துவிட்டு தன் காதலனை கரம் பிடித்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ. 

காதல் - ஏஞ்சலின்

மலேசியாவில் டாப் 50 பணக்காரர்களுள் ஒருவர் கோ கே பெங். பல்வேறு நட்சத்திர விடுதிகளுக்குச் சொந்தக்காரர் மற்றும் பங்கு வர்த்தகத்தில் இவருடைய கம்பெனியின் பங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவருடைய நான்காவது மகள்தான் ஏஞ்சலின். ரோஸி ஆன் ஃபயர் என்கிற பொட்டீக் வைத்திருக்கிறார் ஏஞ்சலின். இதிலென்ன பெரிய ஆச்சர்யம் என்பவர்களுக்கு... தன் கடையின் வருமானத்தில் பாதியை ரோட்டோரத்தில் இருக்கும் குழந்தைகளின் படிப்பு, ஆடை போன்றவற்றுக்காக செலவு செய்கிறார் ஏஞ்சலின். பணக்கார குடும்பத்தில் பிறந்தவருக்கான அடையாளத்தை எப்போதும் தன் நண்பர்களிடம் அவர் காட்டமாட்டார் என்பதுதான் அவருடைய ஸ்பெஷல்.

ஏஞ்சலின்

எளிமையான வாழ்க்கையை கடைபிடித்த ஏஞ்சலின் இங்கிலாந்தில் படித்தபோது தன்னுடைய கிளாஸ்மேட்டான ஐடிடிஹா பிரான்சிஸுடன் நட்பு ரீதியாக பழகியிருக்கிறார். அவருடைய எளிமையும், அன்பும் ஏஞ்சலினை ஈர்க்க காதலில் விழுந்திருக்கிறார். இருவரும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கரீபியன் தீவைச் சேர்ந்தவரான பிரான்சிஸ், டேட்டா சயின்டிஸ்டாக வேலை பார்க்கிறார். பேஷன் டிசைனரான ஏஞ்சலினுக்கு காதலரின் நடவடிக்கை அத்தனையும் பிடித்துப் போக தன் காதலைப் பற்றி தன் தந்தையுடன் முறையாக விவாதித்திருக்கிறார். ஆனால், பெரும் பணக்காரரான கோ பெங், தனக்கு வரப்போகும் மருமகன் சாதாரண வேலையில் இருப்பதைக் காரணம் காட்டி காதலுக்கு ரெட் சிக்னல் காட்டியிருக்கிறார். 

பெற்றோரின் பேச்சைக் கேட்டாகவிட்டால் தனக்கு வரப்போகும் கோடிக்கணக்கான சொத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்று ஏஞ்சலினுக்குத் தெரியும். அதையும் மீறி தன் காதலரை கைப்பிடித்திருக்கிறார் ஏஞ்சலின்.  

ஏஞ்சலின்

திருமண மெருகும், சந்தோஷமும் முகத்தில் குடிகொள்ள காதலருடன் தான் பயணிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, “என் தந்தையின் எண்ணம் தவறானது என்று நினைக்கிறேன். எனக்குப் பணம் முக்கியமில்லை. பணம் எதிர்மறையான எண்ணங்களை தான் உண்டாக்கும். பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். கோடிக்கணக்கான சொத்தை இழந்ததில் எனக்கு வருத்தமேதும் இல்லை. இனி என் சொத்தைப் பற்றி நான் நினைக்கப் போவதும் இல்லை. எங்கள் திருமணம் மிகக் குறைந்த செலவில் எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பெம்ப்ரோக் கல்லூரியிலுள்ள தேவாலயத்தில் இனிதே நடைபெற்றது. இப்போது நானும் என் கணவரும் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்திருக்கிறோம். கோடிக்கணக்கான சொத்தைவிட என் காதலரின் மனம், அன்பு பல மடங்கு பெரியது. அவர் என்னோட இருக்கிறார். நான் அவரோடு  இருக்கிறேன். இதைவிட வேறென்ன வேண்டும். நாங்கள் இணைந்து வாழ்வதே பெரிது... பணமல்ல'' என்ற அவருடைய சென்டிமென்டான போஸ்ட் பல ஆயிரம் லைக்ஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!