Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் ஊடகவியலாளர், விஜய் ரசிகர்கள், விஜய் அறிக்கை... ஆரம்பம் முதல் என்ன நடந்தது?

சமூக வலைதளங்களில் ட்விட்டர் தான் கலவரப்பகுதி. எப்போதும் ஏதேனும் ஒரு சண்டை சூடாக நடந்துகொண்டேயிருக்கும். விஜய் - அஜித், ராஜா - ரகுமான், தோனி - கோலி எனக் காரணங்கள் பல. இவைதவிர பிரபலங்களுக்கும் மற்றவர்களுக்கும்கூட பஞ்சாயத்துகள் நடந்ததுண்டு. அந்த வரிசையில் இந்த வார கோட்டா விஜய் ரசிகர்களுக்கும் ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரனுக்கும் இடையே நடக்கும் ஆன்லைன் போர். 

என்ன நடந்தது?

தன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தான் பார்க்கும் சினிமா மற்றும் சினிமா பிரபலங்கள் பற்றி கருத்துகள் எழுதுவதுண்டு. அந்த வகையில் , சென்ற வாரம் சுறா படத்தைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். 

அதில் தொடங்கியது பிரச்னை. "அது எப்படி எங்காளு படத்தை நீ கிழிக்கலாம்" என சில விஜய் ரசிகர்கள் பதில் ட்வீட் போடத் தொடங்கினர். உடனே, அந்த ட்வீட்டை டெலீட் செய்த தன்யா "அந்தப் படத்தைத்தான் நான் கிண்டல் பண்ணேன். இன்னும் 100 தடவை கூட சொல்வேன். சுறா படத்தை இடைவேளைக்குப் பிறகு பாக்க முடியாம வெளியேறிட்டேன்" என அடுத்த ட்வீட்டை எழுதினார். 

தன்யா விஜய்

இணையத்தின் சாபக்கேடுகளில் ஒன்று, நம் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இயங்கும் வாய்ப்பு. அதனால், தகாத வார்த்தைகளால் அடுத்தவரை திட்டும் போக்கு அதிகம். இதில், இவருடைய ரசிகர், இந்தக் கட்சியுடைய தொண்டர் என்றெல்லாம் பாகுபாடே கிடையாது. எந்த ஆதர்சத்தை தொட்டாலும் அதே அர்ச்சணைதான். விஜய் ரசிகர்களில் சிலரும் இந்த இழிசெயலை கையில் எடுத்ததும் பிரச்னை பெரிதாகியது. 

தன்யாவுக்கு எதிராக தகாத வார்த்தைகளைக் கொண்ட ஹேஷ்டேக் ஒன்றை எதிர்தரப்பு உருவாக்கி டிரெண்டு ஆக்கியது. இப்போது தன்யாவுக்கு ஆதரவாக பலர் களம் இறங்கினர். அவர்கள் ரிப்போர்ட் செய்ததால், ட்விட்டர் இந்தியா அந்த டேகை நீக்கியது.  

ரசிகர்கள் தரப்பில் அடுத்த ஆயுதமாக தன்யாவின் பழைய ட்வீட்களை ரீட்விட் செய்யத் தொடங்கினர். அதில் தன்யா கருணாநிதி, சிம்பு எனப் பலரைப் பற்றி கிண்டலாக எழுதிய ட்வீட்களும் அடக்கம். 

தன்யா சண்டை

தன்யா

தன்யாவுக்கு எதிரான இந்தச் சண்டைகளுக்குக் காரணம் சுறா பற்றிய ஒரு ட்வீட் மட்டுமல்ல. முன்பு ஒரு முறை விஜயின் 21 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்காக ஒரு ஹேஷ்டேக் உருவாக்கினர். அப்போதே விஜயை தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்து ட்வீட் எழுதியிருந்தார். அதையெல்லாம் இப்போது தூசு தட்டி எடுத்துக் காரணம் சொல்கிறார்கள் விஜய் ரசிகர்கள். தன்யாவுக்கு ஆதரவாக அவர் நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மட்டுமில்லாமல் ட்விட்டரில் இயங்கும் மற்ற பத்திரிகையை சேர்ந்தவர்களும் களம் இறங்கினர். அவர்கள் விஜய் ரசிகர்களின் இந்தச் செயலுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும். அவர் இதுபற்றி பேச வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். " அவர் இதைச் செய்யாத வரை, அவர் இளைய தளபதி இல்லை. விளங்காத தளபதி " என்றும் ட்விட் செய்தனர்.

vijay fan issue

 

"விஜய் ஏன் பேசணும்? இது அவருக்குத் தெரிந்தா நடக்கிறது" என விஜய் ரசிகர்களுக்கு மற்ற ட்வீட்டர்களின் ஆதரவும் இப்போது கிடைத்தது. ரசிகர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது மிகப்பெரிய தவறு என சொன்னவர்கள், விஜயை தேவையில்லாத வார்த்தைகளால் பேசியதையும் எதிர்த்தனர்.

ட்விட்டரில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதில் பலர் "தங்கள் வேலைக்கும் ட்வீட்களுக்கும் தொடர்பில்லை" என்பதை பயோவில் எழுதி வைப்பதுண்டு. அப்படி என்றால், அவர்கள் ட்விட்டரில் மற்ற எல்லோரையும் போல இயங்குவதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் ஒரு பிரச்னை என வந்ததும் அவர்கள் செய்யும் தொழிலோடு தொடர்புபடுத்திக் கொள்வது எந்த வகையில் நியாயம் எனவும் ட்விட்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். "விஜய், சிம்பு, கருணாநிதியைப் பற்றி தன்யா சொன்ன கருத்துகளை அவர்கள் இருக்கும் மேடையிலோ, அல்லது 100 பேர் இருக்கும் அவையிலோ தன்யாவால் சொல்ல முடியுமா? ட்விட்டர் என்பது அதை விடவும் பெரிய அவை இல்லையா" என்றும் கேட்டனர். 

ரசிகர்கள் என்ற பெயரில் , அடையாளம் தெரியாத கணக்குகளை வைத்துக்கொண்டு பிடிக்காத ஆட்களை அசிங்கமாக பேசுவது மிகப்பெரிய தவறு. அதுவும் எதிர்தரப்பில் இருப்பவர் பெண்ணாக இருந்துவிட்டால் இவர்கள் பயன்படுத்தும் சொற்கள் ஆபாசத்தின் உச்சம். அதை எதற்காகவும் நியாயப்படுத்தவே முடியாது. 

இன்னொருபுறம், பொறுப்பான வேலைகளில் இருப்பவர்கள் இது போன்ற வசவுகளை சட்ட ரீதியாக அணுக வேண்டும். அல்லது இவற்றை உதாசீனப்படுத்திவிட்டு போக வேண்டும். இரண்டும் இல்லாமல் அவர்களும் தகாத சொற்களைப் பயன்படுத்துவது இணையச் சூழலை இன்னும் மோசமாகத்தான் மாற்றும். 

விஜய் ரசிகர்கள் - தன்யா மோதல் பல ஆண்டாக நடந்து வந்திருக்கிறது. இந்த முறை தன்யா காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டியது. காவல்துறையும் சிலரின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், தன்யா சார்பாக பேசிய சிலரும் தகாத சொற்களால் பேசியதும், விஜயை இந்த விஷயத்தில் இழுத்ததும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கியிருக்கிறது. "இவையெல்லாம் தங்கள் இணையதளத்தின் விளம்பரத்துக்காக செய்றாங்க" என்ற எதிர்தரப்பு குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பது போல மாறிவிட்டது. 

இப்போது விஜய் சார்பாக இந்தப் பிரச்னை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. 

சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்துச்  சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ தரக்குறைவாகவோ  விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்'

இந்தப் பிரச்னை எப்படி முடிந்தாலும் இதற்கான தீர்வு தற்காலிகமாக இருக்கக் கூடாது. இனி , இணையத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது, ஒருவரை கேரக்டர் அசாசினேஷன் செய்வது ஆகியவை நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். சராசரி பயனரோ அல்லது வேறு யாரோ... சபை நாகரிகம் தெரிந்து இயங்க வேண்டும். இல்லையேல், நமக்கு வரமாகக் கிடைத்த இணையம் சாபமாக மாறிவிடும். 

இந்தப் பிரச்னை பற்றிய உங்கள் கருத்துகள் என்ன என்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement