Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப் ஷேரிங் நாகா! - ஒரு புத்தகக் காதலரின் கதை

குளத்தில் எறியப்பட்ட கல், தொடர்ந்து அலைகளை ஏற்படுத்தும். வட்ட வட்ட அலைகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, மனதுக்கும் நிம்மதி அளிக்கும்  நிகழ்வு! அதுபோலவே புத்தகங்களைப் படிக்கும்போது ஒருவரின் எண்ண அலைகள் தொடர்ந்து விரிந்து, விசாலமாகி பல்வேறு நிலைக்குக் கொண்டுசெல்ல எத்தனிக்கும் ஒரு விசை!

புத்தகங்கள், பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கின்றன. ஒரு `சத்தியசோதனை', பல உத்தமர்களை உருவாக்கியிருக்கிறது. காந்தியைப் பின்தொடர்ந்த ஜே.சி.குமரப்பா, காந்தியைவிடவும் காந்தியக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்வின் இறுதிவரை சிறந்த `காந்தியவாதியாக' வரலாறு படைத்தார். அப்படிப்பட்ட புத்தகங்கள்தான், மனித வாழ்வை நெறிப்படுத்தும் `சிற்பிகள்'. 

நாகா

பலருக்கும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருக்கும். வாங்குவதற்கு பணத்துக்குக் குறை இருக்காது. சிலர், புத்தகங்களை வாங்கி அழகாக தங்கள் வீட்டு அலமாரிகளில் அடுக்கிவைத்து அழகு பார்ப்பார்கள். காரணம், `நேரமில்லையே, என்ன செய்வது?' என்பார்கள். இப்படி, பலருக்கும் புத்தகங்கள் மீது தீராக் காதல் இருக்கும். 

முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், கூகுள் என உலாவரும் டிஜிட்டல் இந்தியாவில், புத்தகங்கள் மீது தணியாத தாகமும், தீராத மோகமும்கொண்ட ஒரு புத்தக ப்ரியரான தொழிலதிபர் இவர். நூல் நூற்கும் பஞ்சு ஆலை வைத்து தொழில் புரிந்து வியாபாரமும் செய்துகொண்டே, நூல்களைப் படித்து ரசித்து, தான் ரசித்ததை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்ட ஒரு நூல் ரசிகர்தான் கோவையைச் சேர்ந்த `நாகா'. இவரது இயற்பெயர் நாகசந்திரன். ``உங்களின் 54-வது வயதிலும் புத்தக வாசிப்பில் அதீத ஆர்வமும் கொண்டு,  அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏன் வந்தது?'' என்று இவரிடம் கேட்டோம்.

``தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், தன் தோளில் உடலை ஏற்றி மீண்டும் முருங்கைமரத்தில் ஏறினான்! அதைக் கண்ட வேதாளம், `மன்னா விக்ரமா, உன் முயற்சியைக் கண்டு நான் மெய்சிலிர்த்தேன். என் இந்தக் கேள்விக்குப் பதில் கூறு! விடை தெரிந்தும் நீ கூறாவிடில், உன் தலை சுக்குநூறாக உடைந்துவிடும்' என்று கூறி, விக்கிரமனிடம் இந்தக் கதையைக் கூற ஆரம்பித்தது என்று ஆரம்பிக்கும் `அம்புலிமாமா'வில் வரும் கதையை, சிறு வயதில் வாசிக்கத் தொடங்கினேன். `முத்து காமிக்ஸ்', `இரும்புக் கை மாயாவி' இவர்களை எல்லாம் ஒரு கைபார்த்துவிட்டு, மெள்ள வார இதழ்கள், தினசரி என அடுத்த படிநிலையில் ஏறி, வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பல புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். என் சிறு வயதில் என் தாயாரைப் பார்த்துதான் எனக்கு வாசிப்பு ஆர்வம் ஏற்பட்டது. சுமாராக 50 வருடங்களுக்கும் மேலாக `ஆனந்த விகடன்' எங்கள் வீட்டின் ஓர் அங்கம். அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமையானால், விகடன் வரும்போது எனக்கும் என் அம்மாவுக்கும் `யார் முதலில் அதைப் படிப்பது?' என்ற போட்டி ஏற்படும்'' என தன் சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவர் தொடர்கிறார்...

``சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை. பள்ளிப் படிப்பு முடித்து பொள்ளாச்சியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல்ஸ் டிப்ளோமா படித்து, சொந்த ஊரில் பத்து வருடகாலம் ஒரு நூற்பாலையில் வேலைசெய்தேன். பிறகு, பி.டெக் பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என, கோவை பக்கம் உள்ள நூற்பாலைக்கு மாறி வந்து வேலையும் செய்து, மாலையில் கோவை PSG தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தேன். தொடர்ந்த முயற்சியில் வெவ்வேறு முன்னணி நூற்பாலைகளில் சுமார் 25 வருடங்கள் பணிபுரிந்து, இறுதியில் `தி சென்னை சில்க்ஸ்' குழுமத்தில் பொது மேலாளராகப் பணிபுரிந்தேன்.  அடுத்து, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என, தொழில்முனைவோராக உருமாறி, தனியாக ஒரு நூற்பாலையை உருவாக்கி நடத்திவருகிறேன். நூல் வியாபாரமும் செய்துவருகிறேன்'' என்றவர், புத்தக வாசிப்புப் பற்றிப் பகிர்ந்தார். 

நாகா

``கல்கி, சிவசங்கரி, சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களில் ஆரம்பித்து, இன்றைய ஜெயமோகன், நாஞ்சில் நாடன், இறையன்பு, சோம.வள்ளியப்பன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை தமிழிலும் ஆங்கில சுய முன்னேற்ற நூல்களையும் எழுதிய ஷிவ் கேரா, ராபின் ஷர்மா, ஸ்பென்சர் ஜான்சன், ஸ்டீபன் கோவே, பிரையன் டிரேசி போன்றோரின் நூல்களையும் விரும்பிப் படிக்கிறேன். நூல் அல்லது புத்தகம் என்பதே, ஒருவர் தான் அறிந்ததை மற்றவர்களோடு பகிர தலைப்பட்டு எழுதுவதுதானே! புத்தகம் வாசிப்பவர்கள், தாங்கள் படித்ததை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர்களும் அதைத்தானே செய்கிறார்கள். அப்போதுதான் எண்ணப் பரிமாற்றம் ஏற்பட்டு, நல்லவை நான்கு இடங்களுக்குப் பரவும்.

நான் பல புத்தகங்களைப் படித்துவிட்டு முதலில் என் தாயாரோடும், பிறகு சில குறிப்பிட்ட நண்பர்களோடும் அதுகுறித்து விவாதித்து எண்ணப் பரிமாற்றம் செய்துகொண்டதுண்டு; விவாதித்ததுண்டு. ரசனையான சில எண்ணங்கள் உள்ளத்தில் ஏற்பட்டபோது, அதைச் சிறுகுறிப்புகளாக டைரியில் குறித்துவைத்திருக்கும் பழக்கம் எனக்கு உண்டு. சென்ற வருடம், நான் படித்த கல்லூரியில் இருந்த நண்பர்கள், 35 வருடங்கள் கழித்து தங்கள் குடும்பத்தோரோடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், என் நண்பர்கள் அந்தக் கல்லூரிக் காலங்களில் நான் `வசந்தம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்து பத்திரிகையை நடத்திவந்ததை நினைவுகூர்ந்தார்கள். கல்லூரியில் படிக்கும்போது மிகுந்த ஆர்வமாகச் செய்த காரியம் அது. அந்த நினைவூட்டலில் எழுந்த ஓர் உத்வேகம், ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று அன்றைய தினம் மனதில் உதித்தது. 

தொலைக்காட்சி, முகநூல், வாட்ஸ்அப் போன்ற பல்வேறு சமூக வலைதளங்கள், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தீனி அளிக்கின்றன. புத்தகம் வாசித்ததை மற்றும் வாசிப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து அவர்களை ஊக்குவித்தால், அது மற்றவர்களுக்குப் பயனளிக்குமே எனத் தோன்றியது. நமது ரசிப்புத்தன்மைக்கு ஒரு வடிகாலாகவும், மற்றவர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிவிடுவதாகவும் அது பயனளிக்குமே என்ற எண்ணத்தில் நான் படித்த புத்தகங்கள், அவற்றின் விமர்சனம், ஒவ்வொன்றிலும் உள்ள ரசனை மிகுந்த பகுதிகள் என, ரசனைக்கு ஒரு வடிகால் தேடிக்கொண்டேன்.

சில நண்பர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப்பில் அனுப்பியது, பிறகு நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தொழில்முறை நண்பர்கள் என முதலில் சுமார் 300 பேரிலிருந்து 1,000 பேர் என்றானது. இப்போது சுமார் 2,000 நபர்களுக்குக் குறைவில்லாமல் என் எழுத்து சென்றுகொண்டிருப்பது.

முதலில் `நூலிலிருந்து நெசவு' என்ற தலைப்பில் நூல்கள் வாயிலாக வாழ்க்கையெனும் நெசவைத் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 60 நூல்களைப் பற்றிய விமர்சனம் என்றில்லாமல், ஒரு ரசிகனாக நான் ரசித்தது, கற்றுக்கொண்டது இவற்றை தினமும் தொடர்ந்து ஒருநாள்கூட தவறாமல் 143 நாள்கள் பகிர்ந்துகொண்டேன். இதைத் தொடர்ந்து `நூலேணி' என்ற தலைப்பில் பெண் எழுத்தாளர்கள் மட்டுமே எழுதிய சுமார் 12 நூல்களைப் பற்றி எழுதிப் பகிர்ந்தேன். ஜூன் 2017 முதல் `நூல் வழிச்சாலை' என்ற பெயரில் உலகப்புகழ் பெற்ற, சாகித்ய அகாடமி போன்ற விருதுகள் வாங்கிய புகழ்மிக்க எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து, அதைப் பகிர்ந்துகொண்டு வருகிறேன்''' என்கிறார் நாகா.

`நான் மலாலா', `ஆனி ஃபிராங்க்', `லஜ்ஜா', `மகாஸ்வேதா தேவி கதைகள்', டாக்டர் ஷாலினி எழுதிய `பெண்ணின் மறுபக்கம்' போன்ற நூல்களும் சுவாமி விவேகானந்தர் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை வேறுபட்ட பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் இவரது வரிசையில் அடங்கும். 

``இந்த முயற்சிக்கு வரவேற்பு எப்படி உள்ளது?'' என்று கேட்டோம்,

``மிகப் பிரமாதமான வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது. நிறைய நண்பர்கள், முகமே தெரியாத புது நண்பர்களிடத்திலிருந்தும்கூட பாசிட்டிவான பதில்களும் உற்சாகம் பெறுகிறேன். முழு நூலைப் படிக்க முடியாதவர்கள், நான் எழுதுவதைப் படித்து `அதை `ஸ்கேன்' மற்றும் `பிரவுஸ்' செய்ததுபோலிருக்கிறது' என்றும் தெரிவிக்கிறார்கள். மேலும், பல நபர்கள் `அந்தப் புத்தகத்தை வாங்கி முழுவதுமாகப் படிக்கப்போகிறேன்' என்று செய்தி அனுப்புகிறார்கள். இதைப் படிக்கும்போது நம்மால் ஒரு நல்லது செய்ய முடிந்திருக்கிறது என்ற மனத்திருப்தி ஏற்படுகிறது.  சிலர் `பல விஷயங்கள் கற்றுக்கொள்கிறோம். தகுதி மிகுவதாக உணர்கிறோம்' என்று செய்தி அனுப்புவதைப் படிக்கும்போது, என் நெஞ்சம் நெகிழ்கிறது; இன்னும் நிறைய படிக்க வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. 

நான் எழுதிவைத்த குறிப்புகளை வைத்து இப்போது சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.  `மாண்புமிகு...' என்ற தலைப்பில் ஒரு நாவலுக்கு உண்டான தீம் எழுதி வைத்துள்ளேன். வாட்ஸ்அப்பில் அதை நாவலாகவே எழுதினால் என்ன என்று அதற்குரிய முயற்சியில் இருக்கிறேன். 

வார இதழ்களுக்கு கட்டுரைத் தொகுப்புகளை எழுதி அனுப்ப வேண்டும் என, அந்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். இதுவரை வாட்ஸ்அப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளை வைத்து ஒரு புத்தகமாக வெளியிட முடிவுசெய்து அதற்குண்டான முயற்சியில் இருக்கிறேன். விரைவில் புத்தகம் மலரும்.  நூல் நூற்பதிலும், நூலை வாசிப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடையும் சாதாரண ரசிகன் நான். மற்றவர்களின் நூல்களைப் பற்றி எழுதும் காலம் கரைந்து, விரைவில் நான் எழுதும் நூல்களை மற்றவர்கள் படித்து விமர்சனம் செய்யும் காலம் வெகுவிரைவில் வரும் எனக் காத்திருக்கிறேன். எனக்கு நூல்களின் மீது வற்றாத காதல் உண்டு'' என்ற முடித்த நாகாவிடம்,

``எந்த நேரத்தில் புத்தகம் வாசிப்பீர்கள்?'' எனக் கேட்டோம். 

``நான் ஒரு ராக்கோழி! மாலை மற்றும் இரவில் சீரியல் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவேன். ஒரு தொழிற்சாலை வைத்து நடத்தி, வியாபாரம் செய்துவரும் நான், பகலில் பிஸியாக இருந்தாலும் படிப்பதற்கென சில வழிமுறைகளை வைத்துள்ளேன். இரவு 9 மணிக்கு மேல் குறைந்தது ஒரு மணி நேரம் வாசிப்பு. சில நாளில் விடியற்காலையில் வாசிப்பேன். என் காரில் ஓரிரண்டு புத்தகங்கள் எப்போதும் இருக்கும். வெளியே சென்று காத்திருக்கும் நேரத்தில், சில பக்கங்கள் படிப்பேன்.  தினமும் காலையில் ஓரிரண்டு ஸ்லோகம் சொல்லிவிட்டு, தினமும் ஓரிரு பக்கங்கள் ஆன்மிகம் சம்பந்தமான நூல்களிலிருந்து வழிபாடு நடத்தும் நேரத்தில் வாசிப்பேன். `திருக்குறள்', `திருமந்திரம்', `பகவத்கீதை' போன்ற நூல்கள் வாசிப்பது வழக்கம். படிப்பது என்று எவர் முடிவெடுத்துவிட்டாலும் நேரம் என்பது தானாகக் கிட்டிவிடும் என்பது என் வாழ்நாளில் நான் கண்ட புரிதல்'' என்று முடிக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement