வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (11/08/2017)

கடைசி தொடர்பு:10:44 (11/08/2017)

இஸ்லாமியர், கிறித்துவர் மற்றும் யூதர்களை ஒன்றிணைத்த ஆந்தைகள்... எப்படி?

அது ஒரு அழகான பள்ளத்தாக்குதான். ஆனால், அங்கிருக்கும் பிரச்னைகள் அந்த அழகை ஒருபோதும் ரசிக்கவிடுவதில்லை. அங்கிருக்கும் விவசாயிகளில் பெரும்பாலானோர் திராட்சைத் தோட்டங்களைப் போட்டிருந்தனர். இன்னும் சிலர் வேறு சில தோட்டங்கள். இவர்கள் அனைவருக்குமே மண்ணைக் கெடுக்காமல், செயற்கை உரங்களைப் போடாமல் விவசாயம் செய்ய வேண்டுமென்றுதான் ஆசை. ஆனால், ரோடென்ட்ஸ் (Rodents) எனப்படும் இந்தக் கொறித்துண்ணிகள் அவர்களுக்கு மிகப்பெரிய தலைவலி. எலிகளும், எலி போலிருக்கும் கோபர்களும் இவர்களின் பயிர்களைக் கடிக்கத் தொடங்கிவிடும். அவைகளை அழிக்க, இவர்கள் கட்டாயம் செயற்கை மருந்துகளை நிலத்தில் போட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கு. 

இஸ்ரேல் விவசாயத்தில் ஆந்தைகள்

தன் நாட்டு விவசாய மக்களின் இந்தப் பிரச்னையை ஏதாவது ஒரு வழியில் போக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார் மோட்டி சார்டர் ( Motti Charter ) எனும் பறவை ஆராய்ச்சியாளர். பல வருடங்களைப் பறவைகளோடு செலவிட்ட அவருக்கு, பறவைகளின் இயல்புகள் நன்றாகவே தெரியும். விவசாயிகளின் பிரச்னைகளை Barn Owls எனச் சொல்லப்படும் வெண் ஆந்தைகளைக் கொண்டு தீர்க்கலாம் என சில முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆந்தைகளுக்கான வீடுகளாக சில பெட்டிகளை உருவாக்குகிறார். அதை ஒரு குச்சியின் உச்சியில் வைத்து, சற்று உயரத்திலிருக்கும் படி அதை நடுகிறார். சில நாள்களிலேயே ஆந்தைகள் அந்தப் பெட்டிகளில் வந்து தங்கத் தொடங்குகின்றன. வெண் ஆந்தைகளின் ராஜ்ஜியம் அத்தனை விரிவானது அல்ல. அதனால், அந்தத் தோட்டங்களின் சிறு பகுதியிலே தான் அவை தங்களுக்கான உணவைத் தேடும். ஆந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலி போன்ற இந்தக் கொறித்துண்ணிகள்தான். ஆந்தைகள் தங்கள் வேட்டைகளைத் தொடங்கின. தோட்டங்கள் கொறித்துண்ணிகளின் பிரச்னைகளிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுபட ஆரம்பித்தன. 

விவசாயத்திற்கு உதவும் ஆந்தைகள்

இந்த முயற்சி வெற்றியடைந்ததும் அது இன்னும் சில தோட்டங்களுக்குப் பரவுகிறது. ஒரு ஆந்தை 13 முட்டைகள் வரை இடும். அதில் 11 வரை குஞ்சு பொறிக்கும். 60 நாள்களில் குஞ்சுகள் முழுமையாகப் பறக்கத் தொடங்கும். இரண்டு பெரிய ஆந்தைகள், 11 குஞ்சுகள் என இருக்கும் ஒரு குடும்பம் 6 ஆயிரம் கொறித்துண்ணிகள் வரை வேட்டையாடி உண்ணும். இது அந்த விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை வழி தீர்வாக அமைந்தது. ஆனால், இது நீடிக்கவில்லை. வேறொரு வடிவில் இவர்களுக்குப் பிரச்னை ஏற்பட்டது. 

பெட்டிகளில் வாழும் ஆந்தைகள்

இந்தப் பள்ளத்தாக்கு பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மூன்று நாடுகளுமே ஒன்றோடொன்று சண்டையில் இருப்பவை. இஸ்ரேலிலிருந்து பறக்கும் ஆந்தைகள் எல்லையைக் கடக்கும் போது, அவைத் தொடர்ந்து சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டேயிருந்தன. மோட்டி சார்டர் எல்லை கடந்து மற்ற இரு நாடுகளுக்கும் சென்றார். அங்கிருந்த விவசாயிகளிடம், தன் திட்டத்தை விவரித்தார். பல தோட்டங்களில் தானே முன்வந்து ஆந்தைப் பெட்டிகளை அமைத்துக் கொடுத்தார். இஸ்ரேலில் ராணுவத்திடமிருந்து, குண்டுகளைத் தூக்கிச் செல்லும் பழைய இரும்புப் பெட்டிகளை வாங்கி, அதைத் துண்டுகளாக்கி ஆந்தைகளுக்கான பெட்டிகளாக மாற்றிக் கொடுத்தார். ஜோர்டானில் மக்கள் தேர்தலில் உபயோகப்படுத்தப்படும் பழைய வாக்குப் பெட்டிகளை உடைத்து, அதைக் கொண்டு ஆந்தைக்கான பெட்டிகளை உருவாக்கினார்கள். 

எலிகளை வேட்டையாடும்

மூன்று நாட்டு விவசாயிகளும் அவ்வப்போது சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். விவசாய முறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களைக் குறித்தும், மாற்றங்களைக்குறித்தும் தொடர்ந்து உரையாடி வருகிறார்கள். மூன்று நாடுகளும் அரசியல் ரீதியாக பிளவுபட்டு சண்டையிட்டுக் கொண்டாலும், இந்த எளிய விவசாயிகள் அந்த ஆந்தைகளைப் போல் எல்லைகளை மறந்து ஒருவருக்கொருவர் நட்பாகப் பழக ஆரம்பித்துள்ளார்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்