தனி பாஸ்போர்ட்..! பந்தயக் குதிரைகளின் ராஜ வாழ்க்கையும் அந்த ஓர் ஆபத்தும்

குதிரைகளின்

முற்காலத்தில் மனிதனின் போக்குவரத்துக்காகவும், சில வெளிநாடுகளில் ஏர் உழுவதற்கும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. இவை தவிர, பண்டைய அரசர்களின் நாற்படைகளில் குதிரைகளுக்கென தனிப்படையே இருந்தது. போரில் வியூகங்கள் வகுத்து எதிரியை வெல்வதற்குப் பயன்படுத்துவது குதிரைப்படையைத்தான். அந்த அளவுக்கு முன்னர் குதிரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டன. வாகனங்களின் வரவிற்கு முன்னர் வரை நீண்ட தூரப் பயணத்துக்குக் குதிரைகள்தான் சரியான தேர்வு.  இப்பொழுதும் உலகில் பல இடங்களில் காட்சிப் பொருளாகவும், மகிழ்ச்சியான பயணம் செய்யவும் குதிரைகளைப் பயன்படுத்தித்தான் வருகின்றனர். ஒரு குதிரையின் மதிப்பு மிஞ்சிப் போனால் 10 லட்சம் வரை இருக்கும். ஆனால், ஒரு குதிரை கோடிக்கணக்கில் விலை போகும் என்ற  தகவலை உங்களால் நம்ப முடிகிறதா... ஆம், பந்தயக் குதிரைகளின் விலை மதிப்புதான் கோடிக் கணக்கில் இருக்கிறது. சமீபத்தில் தனியார் குதிரைப் பண்ணைக்கு நேரில் சென்று கண்ட காட்சிகள்தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. 

பந்தயக்குதிரைக்குக் குறிப்பிட்ட சொல் அல்லது அடைமொழியால் உடலில் ஒரு குறியீடு இடப்பட்டிருக்கும். அந்த அடைமொழியும் அக்குதிரையின் உடல் அமைப்பு, வண்ணம் மற்றும் இனம் ஆகியவற்றால் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு வயது கொண்ட குதிரைகளை ஃபோல் எனவும், இரண்டு வயது ஆன குதிரைகளை யார்லிங் எனவும், நான்கு வயதுக்கு உட்பட்ட ஆண் குதிரைகள் கோல்ட் எனவும், நான்கு வயதுக்கு உட்பட்ட பெண் குதிரைகள் ஃபில்லி எனவும், நான்கு வயதுக்கு மேற்பட்ட பெண் குதிரைகள் மேர் எனவும் அழைக்கப்படுகின்றன. பந்தயக் குதிரைகள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவிலிருந்துதான் இறக்குமதியாகின்றன. இக்குதிரைகளுக்கென தனி பாஸ்போர்ட் இருக்கும். அந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்குப் பந்தையக் குதிரைகள் பயணம் செய்ய முடியும். மற்ற விலங்கினங்கள் போல பந்தயத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு பந்தையக் குதிரைகளுக்கு இருப்பதில்லை. கட்டையைச் சொடுக்கும் சத்தமோ அல்லது துப்பாக்கிச் சத்தமோ கேட்டால் சீறிக்கொண்டு பறக்க வேண்டும் என்பதுதான் இவற்றுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் விதி. பந்தயத்துக்கு எனத் தயார் செய்யப்படும் குதிரைகள் வேகமாக இயக்கப்படுவதற்கு அதற்குக் கொடுக்கப்படும் பயிற்சிகளே காரணம். இக்குதிரைகளுக்கென தனிப் பயிற்சியாளர்கள் பணியில் இருக்கின்றனர். இவர்களின் வேலை குதிரை வேகமாக இயங்குகிறதா என்பதைக் கண்காணிப்பதுதான். அதேபோல பண்ணைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் திறந்த வெளி அரங்கில் தினமும் குறிப்பிட்ட நிமிடங்கள் ஓட விட்டு பயிற்சி கொடுக்க வேண்டும். அதுதான் பின்னர் குதிரைகள் ஓடுவதற்கு ஏதுவாக மூட்டுகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்.  

மற்ற குதிரைகளுக்குக் கொடுக்கப்படும் உணவை பந்தயக் குதிரைக்கு கொடுக்க மாட்டார்கள். இதற்கென தனியாக ஓட்ஸ், புல், கோதுமை, உப்புக்கட்டி எனத் தனி ராஜ உபசரிப்பே உண்டு. அதையெல்லாம் திறந்த வெளிகளில் மூலையில் பயிற்சியாளர்கள் வைத்து விடுவார்கள். தனக்கு எப்போது பசி எடுக்கிறதோ அப்போது குதிரைகள் உணவை உண்டு பசியாறிக் கொள்ளும். பந்தயங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீடு செய்யப்படும் குதிரைகள் ஒவ்வொன்றாகத் தனது பலத்தை உடலமைப்புக்கு ஏற்றவாறே காட்டும். குறைந்தது எட்டு வருடங்கள் வரை குதிரைகள் பந்தயத்தில் கலந்து கொள்ளலாம். இதற்கென தனி மருத்துவமனையே உண்டு. மனிதர்களைப்போலவே குதிரைகளுக்கும் தனி ஆம்புலென்ஸ்களும் தனியார் பண்ணையில் இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு பெரிய குதிரைகளை ஏற்றிச்செல்லும் அளவுக்குப் பெரியதாக வண்டி வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வண்டிகளில்தான் ஊட்டி மற்றும் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்வர். குதிரையை முழுமையாகச் சோதித்த பின்னர்தான் பந்தயத்துக்கு அனுமதி கொடுப்பார்கள். சென்னையிலுள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் போன்ற இடங்களில் குதிரைகளுக்கு இப்படித்தான் அனுமதி கொடுக்கப்படும்.

குதிரைகளின்

குதிரைகள் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு இரண்டு வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். சில குதிரைகளுக்குப் பாதுகாப்பு காரணமாக கால் பாதத்தில் இரும்புத் தடை அடிப்பதும் உண்டு. குதிரைப் பந்தயத்தில் என்னதான் ஜாக்கிகள் இயக்கினாலும், ஓடும் குதிரைகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும். இதுபோன்ற பந்தயத்தின் ஆரம்பக் கட்டத்தில் பணம் ஆயிரக்கணக்கில் புழங்கினாலும், இன்று லட்சம் மற்றும் கோடிகளில்தான் பணம் புழங்குகிறது. குதிரைப் பந்தயங்களில் கவுரவத்திற்காகக் கலந்து கொள்ளும் ஆட்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பந்தயத்தில் குதிரைகள் தோற்று கெளரவ குறைச்சல் ஆகிவிட்டால் வளர்க்கப்பட்ட குதிரை 'மோசமான' நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் பந்தையக் குதிரைகளைப் பழக்கும்போது இலக்கு நோக்கி மட்டுமே ஓட கற்றுக் கொடுக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!