Published:Updated:

‛கண்ணுல உயிர் இல்லாத சிலை கல்லுக்கு சமம்!’ - மகாபலிபுரம் சிற்பிகளுடன் ஒருநாள்

‛கண்ணுல உயிர் இல்லாத சிலை கல்லுக்கு சமம்!’ - மகாபலிபுரம் சிற்பிகளுடன் ஒருநாள்
‛கண்ணுல உயிர் இல்லாத சிலை கல்லுக்கு சமம்!’ - மகாபலிபுரம் சிற்பிகளுடன் ஒருநாள்

மகாபலிபுரம் சென்றடடைவதற்கு ஒரு கிலோமீட்டர் முன்னாலேயே நாம் அதை நெருங்கிவிட்டோம் என்பதற்கு அறிகுறியாக சாலையையொட்டி ஆங்காங்கே சிலை சிற்பங்கள் செய்கின்ற இடங்கள் இருக்கும். அந்தக் கடைகளுக்குச் சென்று அங்குள்ள சிற்பிகளுடன் உரையாட வேண்டுமென்கிற எண்ணம் உள்ளூர எழுந்துகொண்டே இருந்ததால் அவர்களைச் சந்திக்கலாம் என்று காலையில் கிளம்பினேன். 12 மணி வெயிலின் கண் கூசும் அனல் வெளிச்சத்தில் மகாபலிபுரத்தில் இறங்கி, சிற்பங்கள் செய்யும் இடங்களை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

ஒவ்வொரு இடமாகச் சென்று உள்ளே இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு வெளியே வந்தபடியே, ஒரு கடையின் வாசலில் நின்று அங்கே கருங்கல்லால் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையைத் தொட்டேன். வெயிலின் தாக்கம் அப்போதுதான் புரிந்தது. 

உள்ளே அமர்ந்து ட்ரில்லிங் மிஷினால் சிலை வடித்துக் கொண்டிருந்தவர்...ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அலறிய அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டு "யாருங்க என்ன விஷயம்" என்று கேட்கவே உள்ளே சென்று "சும்மா உங்களலாம் பாத்து பேசிட்டுப் போலாம்னு வந்தேன்" என்றேன். அவர் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே "அட, சொல்லுங்க என்ன விஷயம் எங்க கடையவே உத்துப் பாத்துட்டு நின்னுட்டு இருந்தீங்ளே" என்றார்.

"இல்லண்ணா, நெஜமாவே சும்மா உங்களலாம் பாத்து பேசிட்டு போலாம்னுதான் வந்தேன். நீங்க எத்தனை வருஷமாக இங்க கட வெச்சு இருக்கீங்க, வியாபாரம் உங்களுக்கு எப்டி நடக்குது என்ன ஏதுன்னு கேட்கலாம்னு வந்தேன்" என்றேன்.

"யார் நீங்க?"

"இல்லண்ணா பத்திரிகைல இருந்து வர்றேன், அதான் சும்மா பேட்டி மாதிரி" 

"அப்டி சொல்லுங்க. உள்ள ஒரு பெருசு ஒக்காந்துட்டு இருக்கும். அவர கேளுங்க, எல்லாம் சொல்லுவாரு" உள்ளே உட்கார்ந்திருந்த பெரியவரிடம் விஷயத்தைச் சொன்னதும் வாயில் வெற்றிலைச் சாறு இருப்பதால் தன்னால் சரியாக பேச முடியாததை கொழகொழவென்று சொல்லியபடி எழுந்து போய் எச்சிலைத் துப்பிவிட்டுப் பேசினார். அவர் குரலில் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை.

"சிதம்பர ஆசாரினு பேருங்க. 60 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். சொந்த ஊரு தேவக்கோட்டை பக்கம்"

"இந்த சிலைங்கலாம் இப்டி செஞ்சு செஞ்சு வெக்கிறீங்ளே, ஒரு கடையில கூட கஸ்டமர் பாத்த மாதிரி தெரியல. யார் எப்போ தான் வந்து வாங்குவாங்க?"

"என்ன தம்பி. இப்டி கேட்டுப் புட்டீங்க. மலேசியா, சிலோன், சிங்கப்பூர், பிரான்ஸ்னு எவ்ளோ நாட்டுக்காரங்க வந்து வாங்கிட்டுப் போறாங்க. நாங்களும் எக்ஸ்போர்ட் பண்ணிட்டு இருக்கோம்"

"ஓ செம்ம லாபம் வருமே"

"ஒரு சீசன்ல நல்ல லாபம் வந்துட்டு இருந்தது இப்போ இல்ல. ஏன்னா, கல்லுங்க முன்ன மாதிரி ஈஸியா கிடைக்க மாட்டுது, ஏன்னா....’’ என்றவர் பேச்சை நிறுத்தி "வாப்பா" என்றார். திரும்பிப் பார்த்தேன்.

ஐம்பதிலிருந்து அறுபது வயதுக்குள் இருக்கும் ஒருவர் வேகவேகமாக உள்ளே நுழைந்தபடி என்னைப் பார்த்து 'யாரு இவரு' என்று தாத்தாவிடம் கேட்டார்.

'பத்திரிகைல இருந்து வர்றாராம். நம்ம தொழிலு என்ன ஏதுன்னு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்னாரு அதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்" என்றார்.

எனக்கு அவரைப் பார்த்ததும் கரார் பேர்வழியாக, சிடுசிடுவென்று ஏதாவது பேசி என்னை அனுப்பிவிடுவார் என்று நினைத்தேன். மாறாக, 'வாங்க சார், உள்ள வாங்க’ என்று ஒரு சிறிய அறைக்குள் அழைத்துச் சென்றார். 

"நீங்க அந்த தாத்தாவுக்கு என்ன வேணும்"

"அவர் என் பெரியப்பா. நா இல்லாத டைம்ல கடைய பாத்துப்பாரு. இது என் கடைதான்"

"சிலை செய்றதுக்கு இப்போலாம் கல்லு அவ்ளோ சீக்கிரத்துல கெடைக்க மாட்டுதுன்னு சொல்லிட்டு இருந்தாரு தாத்தா"

"கல்லுலாம் கெடைக்குதுங்க. ஆனா ரேட் அதிகமாய்டுச்சு. பாறைங்கள ஏத்திட்டு வர்ற லாரிங்கள செக்போஸ்ட் அங்க இங்கனு போலீஸ்காரங்க புடிச்சு நல்லா வாங்கிர்றாங்க. சில லாரிங்கள ஸ்டேஷன்க்கு கொண்டுபோய் நிறுத்தி லம்ப்பா வாங்கிடுவாங்க. அதுக்கெல்லாம் சேத்து நம்மகிட்ட வாங்குறாங்களே...... ரேட்டு கூடாதா..’’ என்று சிரித்தார்.

"போலீஸ்காரங்க புடிக்கிறது எப்பவும் நடக்குறதுதானே"

"நடக்குறதுதாங்க. இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிலைக் கடத்தல்கள் அதிகமா ஆய்ட்டதால ரொம்ப கெடுபுடி ஆயிப்போச்சு"

"இந்த சிலைங்கலாம் செய்றதுக்கு எந்த மலையில இருந்து பாறைங்கள கொண்டு வர்றாங்க"

"மத்தவங்க எப்டினு தெரியல. நாங்க பெரும்பாலும் பட்டிமலைக்குப்பம், சிறுதாமூர், திருவக்கரை இங்க இருக்கிற குவாரிங்கள்ல இருந்துதான் கல்லு எடுக்கிறது, அங்கதான் நல்லா இருக்கும்"

"கல்லு,  நல்லா இருக்கும்னு எப்டி கண்டு புடிப்பீங்க"

"கல்லுல மொத்தம் மூணு விதம் இருக்குங்க. ஆண் கல்,பெண் கல், அலி கல். அலினு சொல்லக்கூடாது. நாங்க நபூஷ்ண கல்லுன்னு சொல்லுவோம். இதுல பாத்தீங்கன்னா. ஆண் கல்ல நீங்க உளியால தட்டுனா நாதம் வரும். பெண் கல்ல தட்டுனாலும் வரும். ஆனா வித்தியாசமா இருக்கும். நபூஷ்ண கல்லுல எந்த சத்தமும் வராது. பெரும்பாலும் நாங்க சிலை செய்றது ஆண் கல்லுல தான்" என்றவர் "கொஞ்ச வெளிய வாங்களேன்" என்று என்னை அழைத்துச் சென்று அங்கே கீழே இருந்த ஒரு உளியை எடுத்து அருகிலிருந்த நந்தி சிலையின் மீது தட்டினார். அவர் தட்டிய ஓசை அடங்க சில விநாடிகள் ஆனது.

"இங்க மொத்தம், இதுமாதிரி எத்தனை சிற்பம் செய்ற இடம் இருக்கு சார்?"

"தம்பி, மகாபலிபுரத்துல இருக்கவங்களுக்கு சிற்பம் செய்றதுங்கிறது குடிசைத்தொழில் மாதிரி. நூத்துக்கணக்கான கடைகள் இருக்கு இங்க"

"வெளிநாட்டுல இருந்துலாம்கூட இங்க சிலை வாங்க வருவாங்கன்னு தாத்தா சொன்னாரே"

"உண்மைதான். சிலை வாங்குறதுக்குனே அங்க இருந்து வர்றவங்களும் இருக்காங்க. நாங்களும் எக்ஸ்போர்ட் பண்ணி அனுப்பி வெப்போம். நானே பிரான்ஸ், இங்கிலாந்து, மலேசியா, ஸ்ரீலங்கானு சில நாடுகளுக்கு போய் சிலை செஞ்சி கொடுத்துட்டு வந்து இருக்கேன்" அங்க கோவில்ல வெக்கிறதுக்குப் போக. வீட்டை அலங்காரப்படுத்த சிலைகள் வாங்குவாங்க. பிரான்ஸ்காரங்களுக்கு நம்ம நாட்டு சிலைங்கன்னா உயிரு"

"நம்ம தமிழ்நாட்ல இருந்தும் சிலைங்கலாம் வாங்குவாங்கல?"

"ஆங் வாங்குவாங்க. வாஸ்துக்காக புத்தர் சிலைங்க வாங்கிட்டு போவாங்க, சீன செட்டியார் சிலை வாங்குவாங்க"

"சீன செட்டியார்னா"

"அதுவா, குபேரன் சிலை தெரியும்ல நாங்க சீன செட்டியார்னு சொல்லுவோம். அப்புறம் பிரமீடு வாங்கிட்டுப் போவாங்க. கருங்கல் சிலைன்னு மட்டும் இல்லாம, இங்க பக்கத்துல ஒரு வுட்ஷாப் இருக்கு அங்க போனீங்கனா, மரம், ஃபைபர்ல் செய்யப்பட்ட நெல்லுப்பானை, புத்தர் விளக்குன்னு வகைவகையாக இருக்கு, பெரிய பெரிய ஹோட்டல்கள அலங்காரப்படுத்த வாங்கிட்டு போவாங்க"

"ஆனா கருங்கல் சிலை செய்றதுதான கஷ்டம்?"

"ஆமா தம்பி. ஒரு மூணு அடி சிலை நல்ல வடிவமா செய்யணும்னா கொறஞ்சது ஒரு மாசம் ஆகும்"

"இந்தத் தொழில்ல நீங்க சந்திக்கிற பிரச்னைனு ஏதாவது இருக்கா" 

"பிரச்னைனுலாம் ஒன்னும் இல்லை. ஆனா, சிற்பத் தொழிலாளர்களுக்குனு ஒரு நலவாரியம் அமைக்கணும். உங்க பத்திரிகைல எழுதிப் போடுங்க"

"உங்களுக்குப் பிறகு உங்க பிள்ளைகளுக்கு இத சொல்லித் தர்றீங்களா?"

"இதெல்லாம்  சொல்லிக் கொடுத்து வர்ற கலை இல்ல தம்பி. மனசார நீங்க விரும்பிக் கத்துக்கணும். எம் புள்ளைகளுக்கு இதுல விருப்பம் இல்ல. அப்டியே எனக்காக அவங்க விரும்பிக் கத்துக்கிட்டாலும், அவங்க செய்ற சிலையில... தோ .....இந்த அம்மன் சிலை இருக்கே.... இவ கண்ணுல தெரியிற உக்கிரம் அவங்க செய்ற சிலையில இருக்காது. கண்ணுல உயிர் இல்லாத சிலை கல்லுக்கு சமம்" 

அவருடன் உரையாடிவிட்டு கிளம்புகிறேன் எனச் சொல்கையில், தாத்தாவும் அவரும் வற்புறுத்தி சாப்பிட வைத்து அனுப்பியதில் வயிறும், மனமும் குளிர்ந்து வெளியே வந்தேன். வெயில் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.