வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (12/08/2017)

கடைசி தொடர்பு:19:15 (12/08/2017)

'ரெட்டை பல்லு காடு'... குழந்தைகளுக்கான இரவுநேரக் கதை #BedTimeStory

குழந்தைகளின் பெஸ்ட் ஃப்ரெண்ட் கதைதான். கதையின் வழியே அவர்கள் புதிய உலகத்தை அடைகிறார்கள். விலங்குகளோடும் மரங்களோடும் பூச்சுகளோடும் பேசுகிறார்கள். அவற்றின் மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்துகின்றனர். அதனால் தினந்தோறும் குழந்தைகளுக்குக் கதை சொல்வதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். ரெட்டை பல்லு காடு எனும் அழகான கதையை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். 

ரெட்டை பல்லு காடு! 
- விழியன்

கதை


ரெட்டை பல்லு காடு, ரெட்டை பல்லு காடுன்னு ஒரு காடு இருந்துச்சாம். அது ஒரு வினோதமான காடு. அந்தக் காட்டில் வாழும் எல்லா விலங்குகளுக்கும் இரண்டே இரண்டு பற்கள்தான். மேலே ஒன்று, கீழே ஒன்று. அது சிங்கமாகட்டும், புலியாகட்டும், மான், கரடி, குரங்கு, ஏன் முயலுக்குக் கூட இரண்டு பற்கள்தான். யாருக்கு இன்னொரு பல் அதிகமாக வளர்கின்றதோ அவரே அந்தக் காட்டின் மன்னராகிவிடுவார் என்று நம்பினார்கள். அதனால் தினமும் காலையில் எழுந்ததும் தனக்கு எத்தனை பல் இருக்கின்றது என எல்லா விலங்குகளும் சரிபார்த்துக்கொள்ளும்.

இப்படியிருந்த காட்டில் ஒரு நாள், புலி ஒன்று தனக்கு மூன்றாவது பல் முளைத்திருக்கு எனக் கத்திக்கொண்டே ஓடியது. ஆமாம்... மேல் வரிசையில் புதிதாக ஒரு பல் இருப்பதைக் காட்டியது. பிறகு என்ன... புலிதான் காட்டிற்கு மன்னன். காடே கூடி ஒரு முடிவெடுத்தது. புலி மன்னர் காட்டின் பிரதான குகையில் குடியிருக்க வேண்டும். தினமும் ஒரு விலங்கு புலிக்கு தேவையான எல்லா உணவினையும் கொண்டுவந்து தரவேண்டும். மன்னர் உள்ளேயே அமர்ந்து சாப்பிடுவது மட்டும் வேலையாக வைத்திருந்தார். மூன்றாம் பல் இருக்கும் மன்னரை குகையிலேயே வைத்திருப்பதற்குக் காரணம் இருக்கிறது. அந்த மூன்றாம் பல் பட்டால் காட்டில் உள்ள விலங்கினமே அழிந்துவிடும் என நம்பினார்கள்.

இப்படியாகத் தினமும் புலிக்குச் சாப்பாடு வந்தது. சாப்பாடு என்றால் பழம், காய் கறிகள்தான். அந்தக் காட்டில் அதைத்தான் சாப்பிடவேண்டும். துடிப்புடன் ஓடிய புலி நாளைடைவில் பெருத்துவிட்டது. அதே காட்டில் அழகான ஒரு முயலும் வாழ்ந்து வந்தது. நிலத்தில் கேரட்டை விளைவித்து வந்தது. காலையில் சென்று நிலத்தில் தண்ணீர் விடும். சில நாள்கள் கழித்து கேரட்டுகளை எடுத்து தன் வீட்டிலுள்ள குழந்தை முயல்களுக்குக் கொடுக்கும். இந்த முயல் புலிக்குச் சாப்பாடு கொடுக்கும் நாள் வந்தது. முயலுக்கு ரொம்பக் கவலையாகிவிட்டது. ஒரு வாரம் உழைப்பில் விளைந்த காய்கள், கனிகள் எல்லாவற்றையும் புலிக்குக் கொடுக்க வேண்டும். அப்படி, புலி என்ன செய்துவிட்டது. புலியிடம் சென்று இரவு எப்படியாவது பேசிவிடவேண்டும் எனக் கிளம்பியது.

மறுநாள், காலையில் முயலுக்கு மூன்றாவது பல் முளைத்து இருந்தது, ஆனால் புலிக்கு இரண்டு பற்களாகிவிட்டது. அப்படி என்றால் யார் மன்னர்? ஆமாம் முயல்தான் இன்று முதல் மன்னர். முயல் மன்னர் அன்று மாலை காட்டில் உள்ள அனைவருக்கும் விருந்து என அறிவித்தார். அனைவரும் கூடினர்.

story

தன் மன்னர் உரையைத் துவங்கியது முயல் “அன்பு மக்களே, உங்களுக்கு நான் ஒரு ரகசியத்தைச் சொல்லப்போகின்றேன். நேற்று இரவு நான் குகையில் இருக்கும் புலியைச் சந்திக்கச் சென்றேன். புலி ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்றினைக் கவனித்தேன். புலியின் மூன்றாவது பல் வெளியே இருந்தது. ஆமாம். நானும் உங்களைப்போல அதிர்ச்சி அடைந்தேன். பின்னர், அருகே இருந்த எறும்புகளை உதவிக்கு அழைத்து அந்தப் பல்லினை நகர்த்தச் சொன்னேன். பல்லினை நகர்த்தி என்னிடம் கொடுத்தார்கள். பிறகுதான் தெரிந்தது புலி வெளியூருக்குச் சென்ற போது அங்கே கோந்தினையும் இந்தப் பல்லினையும் கடை ஒன்றில் வாங்கி, தன் வாயிற்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நாமும் ஏமாந்து விட்டோம்.

"இதோ இந்தப் பல்தான் அது” எனச் சொல்லிவிட்டு தன் மூன்றாவது பல்லினைக் கழற்றியது. 'அட.. அட' எனக் காடே அதிசயமாகப் பார்த்தது.
“இனியும் நாம் இந்த மாதிரி மூட நம்பிக்கையை வைத்திருக்க வேண்டாம். எதையும் ஆராய்ச்சி செய்து முடிவெடுப்போம். சரியா?” எனக்கேட்டது அந்தக் குட்டி முயல்.
“சரி சரி சரி” எனக் காடே குரல் எழுப்பியது.
அதன் பிறகு யாருக்கும் மூன்றாவது பல் முளைக்கவே இல்லையாம். எல்லோரும் மகிழ்வாக வாழ்ந்தனர்.

umanath


விழியன்: சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய மாகடிகாரம் எனும் சிறுவர் நூல் விகடன் விருது பெற்றது. குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்