இந்த ஜப்பான் முதியவருக்கும் ஆழ்கடல் மீனுக்கும் 30 ஆண்டுகால நட்பு என்றால் நம்புவீர்களா?

“ப்லக்...ப்லக்...ப்லக்...” என நீர்க்குமிழிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கு நீந்தி வருவது மீன் அல்ல... மனிதன் தான். அவரைச் சுற்றி நீந்திக் கொண்டிருப்பதில் எந்த மனிதனும் இல்லை... எல்லாம் மீன்கள்தான். நாம் தரையில் நடப்பது போல், அவர் அந்த ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் பெரியவர். அவருக்கு வயது 79. அவர் முதன்முதலில் கடலில் குதித்த போது அவருடைய வயது 18. எப்படிக் கணக்கிட்டாலும் கடலுக்கும், அவருக்குமான நெருக்கம் 60 வருடங்களைத் தொடும். அவர் நீந்திக்கொண்டே, அந்த இடத்தை நெருங்க... அவருக்கேத் தெரியாமல் அவர் பின்னால், அது அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

வெளுத்துப் போயிருக்கும் ரோஜா இதழை ஒட்டியிருந்தது அதன் நிறம். அதன் முகம் வெறுப்போடு பார்த்தால் விகாரமாக இருக்கும். கொஞ்சம் அன்போடு பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும். அந்த முகம் மிகவும் வித்தியாசமானதாய் இருந்தது. அவர் நீந்தி, கிட்டத்தட்ட தரையை நெருங்கிவிட்டார். அது நீந்தி கிட்டத்தட்ட அவர் கால்களை நெருங்கிவிட்டது. 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

அவரின் பெயர் ஹிரோயுகி அரகவா ( Hiroyuki Arakawa ). ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானின் தட்டேயமா பகுதியில் "ஸ்கூபா" ( Scuba ) எனப்படும் ஆழ்கடல் நீச்சல் வீரராக இருந்து வருபவர். அழகான அந்தக் கடற்கரை கிராமத்தில், நீச்சல் உபகரணங்கள் விற்கும் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார். அதே சமயம், சுற்றுலாப் பயணிகளை ஸ்கூபா பயிற்சிக்கும் அழைத்துச் செல்கிறார். அப்படி அவர் 30 வருடங்களுக்கு முன்னர், ஆழ்கடலில் சில கட்டைகளை அடுக்கி அதை ஜாப்பானின் ஷிண்டோ இனத்தின் சிறு கோவிலாக (Shrine) மாற்றும் வேலைகளில் இருந்தார். அந்தப் பணிகள் முடியும் கட்டத்தில், இதை... இவளை முதன்முதலில் சந்தித்தார். ஜப்பானிய மொழியில் "கொபுடாய் " என்றழைக்கப்படும் ஒரு வகை மீன் இனத்தைச் சேர்ந்தவள். மிகவும் சோர்வாக, நகர முடியாத நிலையில் கிடப்பதைப் பார்த்து, அவளுக்கு உதவ முன்வந்தார் ஹிரோயுகி. மேலே சென்று, தன் படகில் பிடித்து வைத்திருந்த நண்டுகளில், 5 நண்டுகளை எடுத்துக் கொண்டுபோய் அதற்கு உணவளித்தார். தொடர்ந்து பத்து நாள்கள் இதே போன்று அதற்கு உணவளித்தார். அந்த உணவளிப்பில் தொடங்கிய அவர்களின் நட்பு 30 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவளுக்கு "யொரிகோ" என்ற பெயரையும் சூட்டியுள்ளார். யொரிகோ எந்த மனிதரையும் நெருங்கவிட மாட்டாள்.... ஹிரோயுகியைத் தவிர. 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

இந்தக் கதை மிகச் சாதரணமானதாகத் தோன்றலாம். ஆனால், இந்த நிகழ்வு மிகவும் அபூர்வமானது. பல ஆராய்ச்சியாளர்களும் இந்த அபூர்வமான மனிதன்-மீன் உறவு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக, ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் கெய்ட் நியூபோர்ட், மீன்கள் மனிதர்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக்கொள்கிறதா... ஆம் எனில், அது எப்படி சாத்தியமாகிறது என்ற கோணத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

புகைப்படங்களைக் காட்டி அதற்கு மீன்கள் கொடுக்கும் எதிர்வினைகளை அடிப்படையாக வைத்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், "மீன்கள் மனிதர்களின் முகங்களைக் கொண்டு அடையாளம் காண்கின்றன. அதுவும், எல்லா மீன்களும் அல்ல. மிகச் சில மீன்கள் மட்டுமே அதைச் செய்கின்றன. மீன்களின் மூளை மிகச் சாதாரணமானவையாக இருந்தாலும், அது பல சிக்கலான விஷயங்களை எளிமையாக கையாள்கின்றது." என்று சொல்லியிருக்கிறார். 

மீன் - மனிதன் நட்பு - ஜப்பான் ஆச்சர்யம்

ஆனால், இந்த அறிவியல் ஆராய்ச்சிகளை எல்லாம் ஹிரோயுகியும், யொரிகோவும் கண்டு கொள்வதில்லை. இவர் மனிதத்தையும், அது மீன்தத்தையும் பகிர்ந்துகொண்டு, இருவரும் அத்தனை மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நட்புக்கு ஆதாரமாய் நின்று கொண்டிருக்கிறது அலைகளற்ற அந்த ஆழ்கடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!