Published:Updated:

குப்பைகளை அகற்றக்கோரி ரோட்டில் அமர்ந்து போராட்டம்

குப்பைகளை அகற்றக்கோரி ரோட்டில் அமர்ந்து போராட்டம்
குப்பைகளை அகற்றக்கோரி ரோட்டில் அமர்ந்து போராட்டம்

குப்பைகளை அகற்றக்கோரி ரோட்டில் அமர்ந்து போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குளத்தில் கழிவுகளைத் தூர்வாரி,  மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு மாதங்களாகக் கழிவுகள் அகற்றப்படாததால், பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாகக் குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் இன்று கழிவுகளை அகற்றக்கோரி ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் பழைமை வாய்ந்த சுப்பையார் குளம் உள்ளது. இந்தக் குளத்தினைச் சுற்றி புதுக்குடியிருப்பு, காந்திநகர், காமாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் குளத்தினை அப்பகுதியைச் சேர்ந்த அதிகமான மக்கள் குளிப்பதற்காகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் குளம் பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் கொட்டபடுவதுடன், கழிவு நீரும் கலந்து மாசடைந்தது. அதைத்  தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரசு சார்பில் குளத்தில் உள்ள கழிவுகளை அகற்ற நிதி ஒதுக்கப்பட்டு, அகற்றப்பட்ட கழிவுகள் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியின் அருகில் கொட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் அதே இடத்தில் கோழி இறைச்சிக் கழிவுகள்,  பிளாஸ்டிக் மற்றும் நாகர்கோவில் நகரில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவர்கள் பெரும்பாலும் இந்த வழியில்தான் நடந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் இந்தக் கழிவுகள் மூலம் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து நாகர்கோவில் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் ,கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் கழிவுகளை அகற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த அப்பகுதி மக்கள் இன்று குப்பைகளை அகற்றக்கோரி திடீரென ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு