Published:Updated:

``ரஜினியும் கமலும் நான் போட்ட காபியை ரசிச்சுக் குடிப்பாங்க!” - கமலா மாமியின் சமையல் அனுபவம்

சென்னை நங்கநல்லூரில், `கமலா மாமி’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அங்கு, 45-வது தெரு முனையில் சிறிய தள்ளுவண்டியில், காலையில் மட்டும் உணவகம் நடத்துகிறார் கமலா.

99 வயதாகும் அம்மா கெளசல்யாவும், தம்பியும் அவருக்கு உதவியாக இருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்க, ஐந்து நிமிடம்கூட ஓய்வில்லாதவாறு மூவரும் பார்சல்களைக் கட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.
கமலா
கமலா

இந்த உணவகம் நடத்துவதற்கு முன்பு, மறைந்த நடிகர் சோ வீட்டில் 17 ஆண்டுகள் சமையல் பணியாளராக வேலை செய்திருக்கிறார் கமலா. மேலும், சினிமா பிரபலங்கள், அதிகாரிகள் உட்பட பலருக்கும் கேட்டரிங் ஆர்டரில் சமையல் செய்துகொடுத்திருக்கிறார். ஆனாலும், கடன் பிரச்னை மற்றும் உடல்நலப் பிரச்னைகள், கமலாவுக்கு கூடுதல் பொருளாதார நிர்பந்தங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இன்றளவும் இரவு பகலாக ஓயாமல் சமையல் தொழில் செய்துகொண்டிருக்கிறார். அம்மா மற்றும் தம்பியிடம் விற்பனையை கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வந்தவர், ``விடியற்காலை 3 மணியில் இருந்து வேலை செய்றேன். மனசு சொல்றதை உடம்பு கேட்கிற கட்டத்தைத் தாண்டிடுச்சு. மூட்டு வலி ரொம்ப வேதனையைத் தருது. கொஞ்சநேரம் உட்கார்ந்து பேசுறேனே” என்று அமர்கிறார்.

``எங்க பூர்வீகம் மாயவரம். அப்பாவுக்கு சிதம்பரம் நடராஜர் கோயில்ல வேலை கிடைச்சுது. அதனால ரொம்ப வருஷம் அந்த ஊர்ல வசிச்சோம். நடராஜர் கோயில்ல லட்டு, சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்களைச் செய்ற வேலையில் அப்பா இருந்தார். ஆர்டர்களுக்கு ஏற்ப வீட்டுலயும் சமையல் செஞ்சு விற்பனை செய்வோம். அதனால, எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து நானும் சமையல் தொழில்ல இருக்கேன்.

கெளசல்யா பாட்டி
கெளசல்யா பாட்டி

நாங்க மொத்தம்10 புள்ளைங்க. நான்தான் மூத்தவ. எட்டாவது வரைதான் என்னைப் படிக்கவெச்சாங்க. அப்போல்லாம் சின்ன வயசுலயே கல்யாணம் செய்து கொடுத்துடுவாங்க. எனக்கு 12 வயசுல கல்யாணம் நடந்துச்சு. அப்பா இறந்த பிறகு குடும்பச் சூழல் சிக்கலாகிடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1976-ல் அம்மாவையும் கூடப் பிறந்தவங்களையும் அழைச்சுகிட்டு சென்னை வந்தேன். என் தம்பிங்க அப்போ சின்னப் பசங்க. எல்லோரையும் நான்தான் பார்த்துகிட்டேன். புது ஊர்ல என்ன தொழில் பண்றதுனு தவிச்சப்போ, சமையல் தொழில்தான் எங்களுக்கு கைகொடுத்துச்சு” என்பவரின் முகம் புன்னகையில் மலர்கிறது.

கமலா
கமலா

``நல்லா சமைக்கவும், நாணயமா பிழைக்கவும் தெரிஞ்சா போதும். எந்த ஊர்லயும் மரியாதையுடன் வாழலாம். ஆரம்பத்துல மயிலாப்பூர்ல இருந்தோம். அக்கம்பக்கத்து வீட்டாருக்கு சமையல் செஞ்சு கொடுத்தேன். படிப்படியா ஆர்டர்கள் அதிகமாச்சு. இயக்குநர் கே.பாலசந்தர், பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் மணிரத்னம், நடிகை கஸ்தூரினு சினிமா பிரபலங்கள் பலர் வீட்டுலயும் என் சமையலுக்கு அதிக வரவேற்பு இருந்துச்சு.

இந்த நிலையில, நடிகர் சோ சார் வீட்டுல என்னை வேலைக்குக் கூப்பிட்டாங்க. 1980 முதல் 1996 வரை அவர் வீட்டில் வேலை செஞ்சேன். அப்போ ரஜினி, கமல் உட்பட நிறைய சினிமா பிரபலங்கள் சோ சார் வீட்டுக்கு வருவாங்க. அவங்களுக்கு காபி, பலகாரம், சாப்பாடு எல்லாமே நான்தான் செய்வேன். என் சமையலை மறக்காம பாராட்டிட்டுப் போவாங்க. அவர் வீட்டுல வேலை செய்ததுபோக, என் வீட்டுலயும் சமையல் ஆர்டர்களுக்கு சமைப்பேன்.

அந்த வருமானத்தையெல்லாம் சரியா சேமிச்சு, கூடப்பிறந்தவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சேன். கணவர், மகள், தம்பிகள், அவங்க குடும்பம்னு எங்க வீட்டுல நிறைய பேர் இருந்தோம். அதனால, எவ்வளவு சம்பாதிச்சாலும் போதலை. கூடவே நிறைய தேவைகளும் உருவாகிட்டே இருந்துச்சு. அதனால கல்யாண விசேஷம் உட்பட பெரிய நிகழ்ச்சிகள்ல நாங்களே சமையலுக்கு ஆட்களைப் பயன்படுத்தி நிறைய ஆர்டர்கள் எடுத்தோம்.

சக்திக்கு மீறி வேலை செய்துட்டேன். ஒருகட்டத்துக்குமேல முன்ன மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியலை. அதனால பெரிய ஆர்டர்களையெல்லாம் குறைச்சுகிட்டேன்” என்று கூறும் கமலா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தப் பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். காவல்துறையினர், ஐ.டி ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலதரப்பினரும் இவரது உணவகத்தில் சாப்பிட வருகிறார்கள்.

கமலா
கமலா

``தினமும் விடியற்காலை 3 மணிக்கு எழுந்திரிப்போம். காய்கறிகள் நறுக்குறது, சட்னி, சாம்பார் மற்றும் மசாலா தயார் செய்றதெல்லாம் அம்மாதான். 99 வயசாகியும் எனக்காகவே இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. வீட்டுலயே இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடையெல்லாம் தயார் செய்வோம். ஆட்டோல அதையெல்லாம் எடுத்துகிட்டு, காலையில 8 மணிக்கு இங்க வந்து வியாபாரத்தை ஆரம்பிச்சுடுவோம். மூணு மணிநேரம் வியாபாரம் நடக்கும்.

தட்டை, முறுக்கு, தேன் குழல், சீடை, அதிரசம், பக்கோடானு தின்பண்டங்களையும் செஞ்சு இங்கயே விற்பனை செய்றோம். தினமும் மதியத்துல வீட்டுலயே சப்பாத்தி ஆர்டருக்கான வேலைகள் இருக்கும். அப்புறம் பலகாரங்கள் செய்ற வேலை இருக்கும். தவிர, ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட சில முக்கியமான ஆட்கள் என்கிட்ட தனிப்பட்ட முறையில் சாப்பாடு ஆர்டர் கொடுப்பாங்க. இப்படி நாள் முழுக்க சமையல் வேலைக்கே நேரம் சரியா இருக்கும்.

கமலா
கமலா

கொரோனாவுக்கு முன்னாடி ஒருநாளைக்கு 3,500 ரூபாய் வரைக்கும் காலையில வியாபாரம் நடக்கும். இப்ப ஒருநாளை 2,000 ரூபாய்க்கு வியாபாரம் நடந்தாலே பெரிய விஷயமா இருக்கு. சமையல் செலவு, ஆட்டோல வந்து போற செலவுனு தினமும் வர்ற வருமானத்துல பாதிதான் லாபமா நிக்கும். ரொம்பவே புண்ணியமான தொழில் என்பதால நேசிச்சு இந்தத் தொழிலை செய்றோம்.

மூணு லட்சம் ரூபாய் கடன் இருக்கு. அதுக்கு மாசமானா வட்டி கட்டணும். அப்புறம் கைவசம் காசு இருந்தாதான் மளிகைச் சாமானெல்லாம் வாங்க முடியும். அதனால ஒருநாளாவது சும்மா வீட்டுல ஓய்வெடுக்க முடியுமா? கடனை அடைக்கிற வரைக்குமாவது உயிரோடு இருந்தாகணும். அந்தப் பொறுப்பில் எல்லா நாளும் இங்க வந்திடுவேன். வியாபாரம் சரியா நடக்கலைனா, மிச்ச மீதி இருக்கிற உணவை ஆதரவற்றவங்களுக்கு கொடுத்துட்டுப் போயிடுவேன். வியாபாரம் சரியா நடக்கலையேனு வருத்தப்பட்டா, அடுத்த நாளைக்கு உற்சாகமா வேலை செய்ய முடியாது. கவலைக்கு ஒருநாளும் இடம் கொடுக்க மாட்டேன்” என்கிற கமலாவுக்கு வயது 73.

கெளசல்யா பாட்டி
கெளசல்யா பாட்டி

``அம்மா, நீ வந்து உட்கார்ந்து பேசு” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு கமலா வியாபாரத்தைத் தொடர்ந்தார். நிதானமாகப் பேசுகிறார் கெளசல்யா பாட்டி. ``இதே பகுதியிலதான் நானும் பொண்ணும் தனியா வசிக்கிறோம். கமலாவோட மகளைத்தான் என் மகன் கிருஷ்ணமூர்த்தி கல்யாணம் செய்திருக்கான். எங்ககூட மகன்தான் தினமும் வியாபாரத்துக்கு உதவியா வருவான். சின்ன வயசுல இருந்தே சமையல் வேலை மட்டும்தான் செய்றேன். ஏதோ ஒரு பிடிப்புல இன்னும் இருக்கேன். இன்னும் ஒரு வருஷம் வாழ்ந்தா எனக்கு 100 வயசு.

நான் இருக்கிற வரைக்கும் என் பொண்ணுக்கு ஒத்தாசையா இருப்பேன். ஆனா, நான் இவ்வளவு வருஷம் இருந்ததே பெரிய விஷயம். எனக்கப்புறம் என் பொண்ணு தனியா சிரமப்படுவா. அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு. என் பொண்ணு நிறைய கஷ்டப்பட்டுட்டா. அடிக்கடி மூட்டு வலினு வேதனைப்பட்டு அழுதுட்டே இருப்பா. ஆனாலும், ஓயாமா உழைச்சாதான் சீக்கிரமே கடனையெல்லாம் அடைக்க முடியும். உழைப்பைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் கிடையாது” என்று ஆதங்கத்துடன் கூறும் கெளசல்யா பாட்டி, ஒரு ஆர்டருக்கான உணவுப் பார்சலை நேரில் கொண்டுபோய் கொடுக்க ஆயத்தமானார். வாடிக்கையாளர்கள் அதிகம் வரவே, கமலா விற்பனையில் மும்முரமானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு