Published:Updated:

“போதையில் வண்டி ஓட்டினால், வாகன லைசென்ஸ் ரத்து..!” - ஓர் அதிரடி போலீஸ்

“போதையில் வண்டி ஓட்டினால், வாகன லைசென்ஸ் ரத்து..!” - ஓர் அதிரடி போலீஸ்
“போதையில் வண்டி ஓட்டினால், வாகன லைசென்ஸ் ரத்து..!” - ஓர் அதிரடி போலீஸ்

“போதையில் வண்டி ஓட்டினால், வாகன லைசென்ஸ் ரத்து..!” - ஓர் அதிரடி போலீஸ்

திருச்சி மாநகரம் என்றாலே அதன் காவல்துறை சட்டென்று நினைவுக்கு வந்துவிடும். ஜல்லிக்கட்டுப் போராட்ட சமயம், கோவை, சென்னை என அனைத்து முக்கிய நகரங்களிலும் கலவரம் வெடித்துக்கொண்டிருந்தது. ஆனால், திருச்சியில் மட்டும்  மாநகர துணை ஆணையர் மயில்வாகனம் மாணவர்களிடையே சாதுர்யமாகவும் அதே சமயம், தெளிவுடனும் பேசி அவர்களைக் களைத்தார். அவர் பேசிய அந்த வீடியோவும் முகநூலில் வைரலானது. அந்த வரிசையில் தற்போது தனது திரடி நடவடிக்கைகளின் மூலம் திருச்சி மாநகர மக்களை ஈர்த்துள்ளார், திருச்சி காவல் ஆணையர் அருண். டிசம்பர் 30-ல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவர் எட்டு மாதங்களாக எடுத்த நடவடிக்கைகள் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி மாநகர் முழுவதும் காவல் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த 380 பேர் கண்டறியப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்குப்பின்னர், அவர்கள் மீது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போதையில் அவர்கள் ஓட்டி வந்த 265 இரு சக்கர வாகனங்கள், 46 மூன்று சக்கர வாகனங்கள், 69 நான்கு சக்கர வாகனங்கள் என 380 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 380 பேரில் 106 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்ய வட்டார போக்குவரத்து கழகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ள மாநகர காவல்துறை, மீதமுள்ள 274 பேரின் வழக்குகள் மீதும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது. இதனால், திருச்சி நகருக்குள் இப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும், வேகமாக வாகனம் ஓட்டுவதும் வெகுவாகக் குறைந்துள்ளது. காவல் துறையின் நடவடிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால் மது அருந்திவிட்டு வேகமாக வாகனம் ஓட்டுவது முற்றிலும் தடுக்கப்படும் என மக்கள் நம்புகின்றனர்.

காவல் ஆணையர் அருண் அடுத்தடுத்து மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளில் இன்னொன்று, திருட்டுத்தனமாக லாட்டரிச் சீட்டு விற்பனை செய்யும் கும்பலை ஒழித்தது. அரசு லாட்டரிச் சீட்டை ஒழித்தாலும் திருச்சியில் திருட்டுத்தனமாக லாட்டரி புழக்கத்தில் இருந்து வருகிறது.  இதற்குக் காரணமான எஸ்.வி.ஆர் மனோகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்மீது  குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இப்போது திருச்சியில் லாட்டரிச் சீட்டு விற்பது தடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் தனியாகச் செல்லும் பெண்களிடம் இரு சக்கர வாகனங்களில் வந்து நகைகளைப் பறித்துச் செல்வது அதிகரித்துள்ளது. தலைக்கவசம் அணிந்துகொண்டு தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு சிலர் இதுபோல் நகைகளைப் பறித்துச் செல்கின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் பழைய குற்றவாளிகள் இல்லை என்பதும் புதிது புதிதாக இச்செயலில் இளைஞர்கள் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. திருச்சியிலுள்ள கல்லூரி மாணவர்கள், பெரிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, விரைவில் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

அதிரடி நடவடிக்கைகள் குறித்து ஆணையர் அருணிடம் பேசினோம் “மற்ற துறைகள் போலில்லாமல் காவல்துறை சவால்கள் நிறைந்தது. காவலர்கள் பணி சிக்கலானது. ஆயினும் மக்களுக்காகப் பணி செய்வதில் மன திருப்தி ஏற்படுகிறது” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு