சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்டக் கூடாது எனப் போராடும் ‘வி.ஐ.பி’ தனுஷ்... ஏன்?

சதுப்பு நிலம்

வி.ஐ.பி 2 படத்தில் தனுஷ் ஓரிடத்தில் கட்டடம் வரக்கூடாது என்பதற்காக போராடுவார். அந்த இடம் சதுப்பு நிலப்பகுதி என்பதுதான் அதற்கு காரணமாக சொல்லப்படும். இந்த சதுப்பு நிலம் என்றால் என்ன? அங்கு கட்டடம் கட்டினால் என்ன ஆகும்? 

சதுப்பு நிலங்கள்:

கடலிலிருந்து வரும் உவர் நீரும், ஆறுகளிலிருந்து வரும் நன்னீரும் சந்திக்கும் இடமே சதுப்பு நிலம். ஓர் ஏரியின் உபரி நீரோ, ஓர் ஆற்றின் உபரி நீரோ நீண்டகாலமாக ஒரே இடத்தில் சேருவதால்கூட சதுப்பு நிலம் உருவாகும். 

சதுப்பு நிலங்கள் அடிப்படையில் ஒரு ஸ்பாஞ்ச் போன்று செயல்படும் தன்மையுடையவை. அதாவது, தன்னிடம் நீர் பாயும் நேரங்களில், அதை நிலத்தடியில் சேமித்து வைத்து, வறட்சிக் காலங்களில் அந்தத் தண்ணீரை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. எப்போதும் நீர் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதால், உறுதியான பல்லுயிர்ச்சூழலைக் கொண்டதாகச் சதுப்பு நிலங்கள் இருக்கும். மழைக்காடுகளை எப்படி உலகின் நுரையீரல் என்று சொல்கிறோமோ, அதைப்போல் சதுப்பு நிலங்களை `பூமியின் சிறுநீரகம்’ என்று சொல்கிறார்கள். 

கடலின் அருகில் அமைந்திருப்பதால் கடல் நீரையும், கடல் பொங்கும் நேரத்தில் நிலத்துக்குள் வரும் நீரையும் தேக்கி வைக்கும் தன்மை சதுப்பு நிலத்துக்கு மட்டுமே உண்டு.

சென்னையில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சற்று முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் சதுப்பு நிலமாகும். இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில்தான் பல்லுயிர்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக, முக்குளிப்பான்கள் நீர்க்கோழிகள், நாரை, கொக்கு, கரிச்சான், கூழைக்கடா போன்ற 50-க்கும் மேற்பட்ட பறவைகள் வாழும் சூழலைக் கொண்டிருக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் கடல் மட்டமும் ஒரே சமநிலையில்தான் இருக்கின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், பக்கிங்ஹாம் கால்வாயில் ஒக்கியம் மடு என்ற இடத்தில் கலக்கிறது. அந்த ஒக்கியம் மடு கடல் மட்டத்தை 4 மீட்டர் உயரத்தில் இருப்பதால் பள்ளிக்கரணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மெதுவாகத்தான் வெளியேறும். அதனால்தான் பள்ளிக்கரணை அதிகமான தண்ணீரை சேமித்துக் கொள்கிறது.

1980-களில் வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினர் செய்த ஆராய்ச்சியின் முடிவு இன்று யார் கேட்டாலும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அந்த ஆராய்ச்சியின் முடிவு ‘எவ்வளவு வறட்சி வந்தாலும் சென்னைக்குத் தேவையான தண்ணீரை பள்ளிக்கரணை கொடுக்கும்’ என்பதுதான். 

சென்னை வெள்ளத்தின், வேளச்சேரி மூழ்கியதற்குக் காரணம் பள்ளிக்கரணையில் தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள், ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டிருந்தது தான். இயற்கையும் ஓரளவிற்குத்தான் சீரழிவைக் காக்கும். 

சதுப்பு கட்டடம்

கட்டடம் கட்டலாமா?

சதுப்பு நிலம் என்பது தண்ணீரை தன்னகத்தே சேர்த்து வைக்கும் தன்மை உடையது என்பதால் இங்கு கட்டடங்கள் கட்டுவதை தவிர்க்கலாம். பலமான அஸ்திவாரம் இங்கு சாத்தியமில்லை. தொழில்நுட்பத்தின் உதவியால் சதுப்பு நிலங்களில் மாற்றுவகை வீடுகள் கட்டலாம் என்கிறார்கள். ஆனால், பல அடுக்கு கட்டடங்கள், தீம் பார்க் ஆகியவற்றுக்கு சதுப்பு நிலங்கள் உகந்தவை அல்ல.

இவை அனைத்தையும் விட, சதுப்பு நிலங்கள் என்பவை மிக குறைந்த அளவிலே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அங்கேயும் ஆக்ரமிக்க எண்ணுவது தவறு.

உலகிலேயே இயற்கையாக அமைந்த 4 சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று.

பாண்டனால் - பிரேசில்
ஒகவாங்கோ - பொட்ஸ்வானா
கக்காடு - ஆஸ்திரேலியா
மெகாங் - வியட்நாம்
கேமார்க்யூ - பிரான்ஸ்

உலகின் மிக முக்கிய சதுப்பு நிலங்கள் இவை. இதன் வரிசையில் பள்ளிக்கரணைக்கும் முக்கிய இடமுண்டு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!