Published:Updated:

'குடியின் பிடியில் புதுச்சேரி மக்கள்!'- கிரண்பேடி வேதனை

'குடியின் பிடியில் புதுச்சேரி மக்கள்!'- கிரண்பேடி வேதனை
'குடியின் பிடியில் புதுச்சேரி மக்கள்!'- கிரண்பேடி வேதனை

'குடியின் பிடியில் புதுச்சேரி மக்கள்!'- கிரண்பேடி வேதனை

”லஞ்சம், ஊழல் மற்றும் மாநிலத்தை அச்சுறுத்தும் ரவுடிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் குரல் கொடுத்து தேசத்தின் கட்டமைப்புக்கு உதவி செய்ய வேண்டும்” என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை துறைமுகத்துடன் இணைந்து சரக்குப் போக்குவரத்துக்களைக் கையாளுவதற்காக புதுச்சேரி துறைமுகத்தில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதையடுத்து துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் உண்மை நிலை தொடர்பாகவும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்ய சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், தி.மு.க-வின் எம்.எல்.ஏ சிவா உள்ளிட்டவர்கள் கொண்ட குழு துறைமுகப் பணிகளை ஆய்வுசெய்தது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அன்பழகன்,  ”புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டமான துறைமுக மேம்பாட்டுத் திட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு தற்போது கிடைத்துள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் பல்வேறு கருத்துகளை கூறினார். அதுதொடர்பாகத்தான் ஆய்வை மேற்கொண்டோம். துறைமுக மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த எந்தவித மோதல் போக்கையும் கடைபிடிக்காமல் ஆளுநர் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமைக்காக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்கு கிரண்பேடி தலைமைத் தாங்கினார். அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்ட அந்த வழிபாட்டுக் கூட்டத்தில் பேசிய கிரண் பேடி,  “புதுச்சேரியில் மக்கள் குடியின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். அதனால் பலகீனமாக குழந்தைகளை கிராமப் பகுதிகளில் பார்க்க முடிகின்றது. லஞ்சம், ஊழல் மற்றும் மாநிலத்தை அச்சுறுத்தும் ரவுடிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் குரல் கொடுத்து தேசத்தின் கட்டமைப்புக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் சட்டத்துக்குட்பட்டு செயல்படுவதால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள ரவுடிகளின் மனநிலையை மாற்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு திட்டத்தை இன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். ’நீட்’ தேர்வு தொடர்பாக எப்படியான நிலைப்பாட்டை எடுத்து கோப்புகளை புதுச்சேரி அரசு அனுப்புகிறதோ அதைப் பொறுத்துத்தான் எனது செயல்பாடுகள் இருக்கும். புதுச்சேரி துறைமுகத் திட்டத்தில் அரசுடன் இணைந்து நான் செயல்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் குழு வைத்த கோரிக்கையை வரவேற்கிறேன். அதே சமயம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியைப் பெற்றே துறைமுகத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே என் எண்ணம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு