மாயமும் இல்லை… மந்திரமும் இல்லை… நிஜமாகவே நிறம் மாறும் அரிசி..!

தேனி மாவட்டம் சங்ககோண்டம்பட்டியில் வசிக்கும் விவசாயி நீலகண்டன். இவர், கடந்த ஜூலை 29ம் தேதி தனது வீட்டில் சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு, மீதம் இருந்த சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்துவிட்டு, உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அந்தச் சோறு அடர் சிவப்பு நிறமாக இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீலகண்டன் மற்றும் அவரது  குடும்பத்தினர், தனது வீட்டிற்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதாகவும், அதனால்தான் தன் வீட்டில் மட்டும் சோறு சிவப்பு நிறத்தில் மாறியதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி புலம்பியுள்ளனர். இந்தத் தகவல் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரியவந்ததை அடுத்து, தேனி மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் சுகுணா தலைமையில் அலுவலர்கள் மோகன்தாஸ் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நீலகண்டன் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது சிவப்பு நிறத்தில் இருந்த சோற்றைக் கைப்பற்றி பரிசோதனைக்காக மாதிரியை சேகரித்துக்கொண்டனர். அதேபோல் சமைக்காமல் இருந்த அரிசியிலும் மாதிரிகள் சேகரிகரிக்கப்பட்டதுடன், சம்மந்தப்பட்ட ராஜபோக அரிசியை விற்பனை செய்த கடைக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அங்கேயும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. கடையில் விற்பனைக்காக இருந்த 56 மூட்டை ராஜபோக அரிசியை, ஆய்வு முடிவு வரும் வரை விற்பனை செய்ய தடை விதித்தனர். விளக்கம் கேட்டு கடைக்காரருக்கு நோட்டீஸும் கொடுக்கப்பட்டது.

அரிசி

இந்நிலையில் இன்று, தேனி மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் சுகுணாவை நேரில் சந்தித்துப் பேசினோம். ``அந்த வீட்டில் நிறம்மாறிய சோற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மதுரையில் இருக்கும் ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைத்தோம். அதன் முடிவுகள் தற்போது கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், சோறு நிறம் மாறியதற்கு அரிசியில் இருந்த அமிலோஸ்தான் முக்கியக் காரணம். எல்லா அரிசியிலும் அமிலோஸ் இருக்கும். அதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். ஆனால், ராஜபோக அரிசியில் இருந்த, அதாவது குறிப்பிட்ட அந்த மூட்டையில் இருந்த அரிசியில் மட்டும் அமிலோஸ் அளவு அதிகமாக இருந்திருக்கிறது. மேலும், நாம் வீட்டில் சமைக்கும் போது சோற்றில் உப்புப் போட்டு சமைப்பது வழக்கம். அப்படி அந்த அரிசியை சமைக்கும்போது போடப்பட்ட உப்பில் இருந்த அயோடினும், அரிசியில் இருந்த அமிலோஸும் எதிர் வினைபுரிந்திருக்கிறது. அந்த எதிர்வினையானது வெளிப்பட சுமார் ஐந்திலிருந்து பத்துமணி நேரம் ஆகும். அந்தக் குடும்பத்தினர் அரிசியை சமைத்து சாப்பிட்டுவிட்டு, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறு நாள் காலையில் வந்து பார்க்கும் போதுதான் சோறு நிறம் மாறியிருந்திருக்கிறது. அந்தக் காலஇடைவெளி அயோடினும், அமிலோஸும் எதிர்வினை புரிய ஏதுவாக இருந்திருக்கிறது. இப்படி நிறம் மாறுவது வழக்கத்திற்கு மாறானது ஒன்றுதான் என்றாலும், ஆந்திராவில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. எப்போதாவது அறிவியல் இப்படி ஓர் அதிசயத்தை நிகழ்த்தும். அதைக் கண்டு செய்வினை, பேய் என்று பயப்படுகிறார்கள். அது மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. அறிவியல். அவ்வளவுதான்`` என்றார்.

அரிசி

முன்னதாக நீலகண்டன் குடும்பத்தினர், சம்மந்தப்பட்ட ராஜபோக அரிசியை சமைத்து சாப்பிட்ட சில நாள்களாகவே வயிற்றுப் பிரச்னை இருந்ததாக பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டனர். ராஜபோக அரிசி ஆந்திராவில் விளைவிக்கப்பட்டு தமிழகத்திற்கு வரும் அரிசி ரகம். அதன் அமிலோஸ் அளவும், நாம் பயன்படுத்தும் உப்பின் அயோடின் அளவும் எதிர்வினை புரிந்து நம் வயிற்றுக்குத் தொந்தரவு கொடுப்பதை இனியும் அனுமதிக்காமல், நம் தமிழக சூழலுக்கு ஏற்ற நாட்டு ரகங்களை நாமே விளைவித்து அதைச் சமைத்து உண்டு ஆரோக்கியமாக வாழ அரசு வழி செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!