வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (18/08/2017)

கடைசி தொடர்பு:16:26 (18/08/2017)

அடைமழை தெரியும்... தவளை மழை, மீன் மழை, ரத்த மழை பெய்தது தெரியுமா?

சூறாவளி மழை

லேசாகத் தூறல் விழத் தொடங்கும்போது, சந்தேகப் பார்வையில் அண்ணாந்து பார்த்து, ஒரு சில துளிகள் முகத்தை நனைத்த பின்பு “அட மழை தான்பா” என்று ஓடி ஒளிந்துகொள்வோம். சாதாரண தண்ணீர் மழைக்கே இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் வித்தியாசமாக தவளை, ரத்தம் எனப் பெய்தால் என்னென்ன செய்திருப்போம்? அப்படி வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த வித்தியாசமான கிலி ஊட்டும் மழைகளின் தொகுப்புதான் இது.

மீன் மற்றும் தவளைகள் மழை

2005-ம் வருடம், செர்பியாவின் ஒட்ஜாக்கி நகருக்கு அருகில் இருக்கும் சிறிய நகரத்தில் அந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்தது. சாதாரண தூறலாக ஆரம்பித்து வைத்த மேகம், பின்பு கோபம் கொண்டதாய் மக்களின் மேல் தவளைகளை ஆயிரக்கணக்கில் வீசி எரிந்தது. “இது என்னடா சோதனை” ஏதோ தெய்வக் குற்றம் போல, என்று பதுங்கிக்கொண்டனர். சாலைகள் இறந்துபோன தவளைகளால் நிரம்பி வழிந்தது. இந்தத் தவளை மழை போலவே பல முறை பல இடங்களில் மீன் மற்றும் பாம்பு மழைகள் பெய்துள்ளன. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால், எல்லாவற்றிற்கும் Waterspouts என்று அழைக்கப்படும் நீர்த்தாரைகள் தான் காரணம்.

 


அதீத காற்று, நீர் நிலைகளில் இருக்கும் தண்ணீரை சூறாவளித் தூண்கள் போல உருட்டிக் கொள்கிறது. அந்த நீர் நிலைகளில் இருக்கும் மீன்கள், தவளைகள் மற்றும் பாம்புகளை கூட இந்த நீர்த்தாரைகள் உறிஞ்சிவிடுமாம். பின்பு அது நகரத்துக்கு உள்ளே வரும்போது செயலிழந்து தவளைகள், மீன்கள், பாம்புகள் போன்றவற்றை ஊருக்குள் துப்பி விடுகிறதாம்.

ரத்த மழை

இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது நமது அண்டை மாநிலமான கேரளாவில். 2001-ம் வருடம், ஜூலை 25 முதல் செப்டம்பர் 23 வரை, கேரளாவின் தென் மாநிலங்களில் ஆங்காங்கே இந்த ரத்த மழை பெய்துள்ளது. முதலில் 1896-ம் வருடம் முதன் முதலாக ஆரம்பித்த இந்த நிகழ்வு, இறுதியாக ஜூன் 2012லும் நடந்துள்ளது. அதிகபட்சமாக கோட்டயம் மாவட்டத்தில் இது அதிக நேரம் பெய்துள்ளது. ஆச்சர்யமாக இது போகும்போது, துணிகளில் ஆங்காங்கே பிங்க் நிறக் கறைகளை விட்டுச் செல்கிறது. இது பலமுறை சீனாவிலும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரத்த மழை

2001ல் முதலில் ஆராய்ச்சி செய்தபோது இதற்குக் காரணம், ஏதேனும் சிதறிய விண்கல்லாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. பின்பு, கேரளாவின் கடற்பகுதியில் காணப்படும் ஒரு வகை சிவப்புப் பாசிகள் என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டது. இது அதீத காற்றால், கருமேகங்களுக்குள் சென்று தங்கி விடுகிறது. மழையாகப் பெய்யும்போது, தண்ணீருடன் நடக்கும் வேதியல் மாற்றத்தால் ரத்த வண்ணத்தில் பெய்கிறது.

பூச்சி மழை

அனா என்ற புகைப்படக்காரர் எடுத்த இந்தப் படம் நிறையவே பிரபலம். 2014-ம் வருடம், போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பான் என்ற இடத்தில், இந்த 1000 அடி உயரப் பூச்சிகளால் நிரம்பிய சூறாவளியை ஒரு மைல் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார் அனா. அது தனக்கு எதுவும் தொந்தரவு அளிக்காது என்ற தைரியம் வந்த பின், அதன் அருகே சென்று புகைப்படம் எடுத்திருக்கிறார்.

பூச்சி மழை

பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்து என்னவோ இதுவரை நம்ப முடியாத ஒன்றுதான். இந்த நிகழ்வுக்கும் வானிலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஒரு ஒளியியல் மாயையாக இருக்கலாம், அல்லது பூச்சிகள் திரளாக அணிவகுத்து இடம்பெயர்ந்துகொண்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நாற்காலி மழை

2011-ம் ஆண்டு மிசோரியில் இருக்கும் ஜோப்லின் என்ற இடத்தை மிகப் பெரிய அளவில் புயல் ஒன்று தாக்கியது. கிட்டத்தட்ட ஒரு மைல் நீளத்துக்குச் சூறாவளி உருவாகியது. சக்திவாய்ந்த இது, பல பொருள்களை உறிஞ்சிக்கொண்டு கடத்தியது. இதில் பல நாற்காலிகள், மேசைகள், மரத் துண்டுகள் மற்றும் சில இலகு ரக பொருள்களும் அடங்கும். பறந்து வந்த இவை, பயங்கர வேகத்தில், பல சுவர்களில் மோதி பெரும் சேதாரங்களை ஏற்படுத்தின.

ஆலங்கட்டி மழை

ஆலங்கட்டி மழை

“அட! ஆலங்கட்டி மழைதான் தெரியுமே!” என்று நீங்கள் கூறுவதற்குள், இரண்டு பவுண்ட்கள் எடை உள்ள ஆலங்கட்டி பார்த்திருக்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். ஆம், 2010-ம் வருடம் தெற்கு டகோட்டாவில் விவியன் என்ற இடத்தில் இது நடந்துள்ளது. கோலிக் குண்டு அல்லது கூழாங்கற்கள் அளவு உள்ள ஆலங்கட்டிகள் பார்த்திருப்போம், இப்படி கிலோ கணக்கில் அன்று பெய்தது மிகவும் ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகத்தான் கருதப்படுகிறது.

சாதாரண மழை பெய்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்! அதுவும் வறட்சியில், தண்ணீர் கஷ்டத்தில் இருக்கும் சென்னை வாசிகளுக்கு அடைமழை என்பது ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் ஒரு அற்புத நிகழ்வு. என்ன, அதன்பிறகு குளங்களாகிவிடும் சாலைகள், அலுவலகம் செல்பவர்களை நிஜமாகவே அழ வைத்துவிடும். ஆனால், மழை வேணுமே பாஸ்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்