Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகுபலி சிவகாமி தேவிக்கும் ராணித்தேனீக்கும் என்ன சம்பந்தம்? #HoneyBeeDay

'தேனீ மாதிரி சுறுசுறுப்பா இரு' என்பது கிராமங்களில் புழங்கும் சொலவடை. இச்சொலவடை வெறும் சுறுசுறுப்புக்காக மட்டும் சொல்லப்படுவதில்லை. தேனீக்கே உடையச் சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் எனப் பல காரணங்களுக்காக சொல்லப்படும். "தேனீக்கள் மட்டும் இவ்வுலகில் இல்லையென்றால் உலகம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்காது" என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.  தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டு தாவரங்களின் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக தேனீக்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. தேனீக்களின் அவசியத்தையும், பயன்பாட்டையும் விளக்கும் விதமாகத்தான் ' தேனீக்கள் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.  

உலக தேனீக்கள் தினம் ராணித்தேனீ

ஒரு டீஸ்பூன் அளவு தேனை உருவாக்கத் தேனீ தனது வாழ்நாள் மொத்தத்தையும் செலவழிக்கிறது. இதற்காக 50 ஆயிரம் மலர்களின் மேல் அமர்ந்து தேன்களை இந்த தேனீக்கள் சேகரித்து வருகின்றன. தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, கிழக்குலகத் தேனீக்கள், மேற்குலகத் தேனீக்கள் எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகை தேனீக்களும் உலகில் உள்ள நிலப்பரப்பிற்கு ஏற்றது போல ஒவ்வொரு கண்டத்தில் வசிக்கிறது. மலைத்தேனீ, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் மலைகளிலும், கொம்புத்தேனீ ஆசிய நாடுகளிலும், அடுக்குத்தேனீ துணைக்கண்ட நாடுகளிலும், மேற்குலகத் தேனீ ஆப்பிரிக்காவில் தோன்றி வடக்கு ஐரோப்பாவிற்கும், கிழக்குலகத் தேனீ ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளிலும், கொசுத்தேனீ உலகம் முழுவதும் பரவலாகவும் காணப்படும். தேனீக்கள் குடும்பத்தில் ராணித்தேனீ, ஆண்தேனீ, பொறியாளர் தேனீக்கள், மருத்துவ தேனீக்கள், சிப்பாய் தேனீக்கள், பிணம் தூக்கி தேனீக்கள், ஒற்றர் தேனீக்கள் எனப் பல வகையாகப் பிரிந்து செயல்படும். இவற்றில் 'ராணித்தேனீதான் கூட்டின் ராஜா'. ராணித்தேனீயின் கட்டளைப்படித்தான் இங்கு எல்லாமே நடக்கும். ராணித்தேனீ தேன்கூட்டை கண்காணிப்பது, நிர்வகிப்பது மற்றும் முட்டையிடுவது ஆகிய செயல்களை மேற்கொள்ளும். இதுவும் ஒரு விதத்தில் பாகுபலி மகிழ்மதி அரசாங்கத்தை ஒற்றைப் பெண்ணாக நிர்வகிக்கும் சிவகாமி தேவிக்கு நிகரான வேலைதான். ராணித்தேனீ தவிர மற்ற தேனீக்களின் ஆயுட்காலம் வெறும் இரண்டு மாதங்கள்தான். ஆனால், ராணித்தேனீயின் ஆயுள்காலம் 3 ஆண்டுகளாகும். 

தேன்கூடு

ஒரு கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இடம்பெறும். எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் இவற்றிற்கு இடையே எந்தவிதமான குளறுபடிகளும் வருவதில்லை. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் செம்மையாக செய்து முடிக்கும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரையிலும் இருக்கும். எண்ணிக்கை அதிகமானால் தேன்கூடு விழுந்து விடும். இதைத் தவிர்ப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் தங்கள் உடலில் வரும் பிசினை கொண்டு மெழுகாக மாற்றி கூட்டை கெட்டியாக ஒட்டி வைத்துவிடும். தேனீக்களின் பயன்களை கருதி தேனீக்களை கொண்டு செயற்கையான பெட்டிகள் அமைத்து வருமானம் பார்த்து வருகிறார்கள், விவசாயிகள். இவற்றிலிருந்து பெறப்படும் தேன் உடலின் பல வகையான இன்னல்களுக்கு அருமருந்து. சிறிய பெட்டிக்குள் தேனீக்கள் வைக்கப்பட்டாலும், அவை வழக்கம்போல தேனை எடுத்து வரும்.

சமீபகாலமாக, தேனீக்கள் அழிந்து வருவதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தேனீக்கள் எண்ணிக்கை சொற்ப விகிதத்தில்தான் இருக்கின்றன. இதற்கு எதிராகப் பல சுற்றுச்சூழல் அமைப்புகளும், அறிவியல் வல்லுநர்களும் போராடி வருகிறார்கள். தேனீக்களின் அழிவு, பல வகைப் பயிர்களிலும், பழ உற்பத்தியிலும் அழிவை ஏற்படுத்தும். இதனால்தான் தேனீக்கள் அழிந்து வருவதும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுதான். இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது வனங்கள் அழிக்கப்படுவதும், குறைந்துவிட்ட விவசாயமும், மாசடைந்த சுற்றுச்சூழலும் தான். எனவே சுற்றுச்சூழலை நாம் பாதுகாத்தால் தேனீக்கள் தானாகவே பெருகிவிடும். தேனீக்களைப் பாதுகாப்போம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement