வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (21/08/2017)

கடைசி தொடர்பு:16:30 (21/08/2017)

''17 வயதில் திருமணம்... 46 வயதில் வைராக்கியம்'' - 'பொட்டீக்' உரிமையாளர் லட்சுமி பிரபா ஜெயித்த கதை!

லட்சுமி பிரபா

ன் பதினெட்டாவது வயதில் டைலரிங் மற்றும் எம்ப்ராய்டரி துறையில் கால்பதித்தவருக்கு, தற்போது வயது 46. பேரன் யுவன் வெங்கடேஷைக் கொஞ்சியவாறு இப்போதும் உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கிறார் லட்சுமி பிரபா. சென்னையின் மடிப்பாக்கத்தில் இருக்கும் 'ஹேமா’ஸ் பொட்டீக்ஸ் அண்டு பிசினஸ் ஸ்கூல்’ நிறுவனர். 

''எந்தப் பொண்ணுக்கு நேரக்கூடாத உச்சகட்ட துன்பம் எது தெரியுமா? 'உலகமே நீதான்'னு நம்பியிருந்த கணவர், திடீர்னு வேற ஒரு பொண்ணோடு போயிடறதுதான். அது எனக்கு நடந்துச்சு. ஏமாற்றிய கணவர், வாட்டிய வறுமை, காலன் பறித்துக்கொண்ட மகன் என எனக்குள் வலிகள் நிறைய. அதையெல்லாம் கடந்து, எழுந்து வந்திருக்கிறேன். ஒரு தையல் மெஷினில் ஆரம்பித்த என் வாழ்க்கை, 'ஹேமா ஆர்ட் அண்டு கிராஃப்ட்’ மற்றும் 'ஹேமா பொட்டீக் ஷாப்' உரிமையாளராக உயர்த்தியிருக்கு'' என்றபடி தன் கடந்த கால நினைவுகளை அசைபோட்டார் லட்சுமி பிரபா. 

''எங்க வீட்டுல அஞ்சு பொண்ணுங்க. நான்தான் மூத்தவள். பத்தாவது முடிச்சதும் பதினேழு வயசுல தாய்மாமாவுக்கு கல்யாணம் செய்துவெச்சுட்டாங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு குழந்தைங்க. எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கைனு நினைச்சுக்கிட்டிருந்தப்போ, திடீர்னு இன்னொரு கல்யாணம் செய்ஞ்சுக்கிட்டு எங்களை அனாதையா விட்டுட்டுப் போயிட்டார். அத்தனை பெரிய துக்கத்திலும் கிணத்திலேயோ, ரயிலுக்கு முன்னாடியோ விழாமல் தைரியமா நின்றேன். என்னை விட்டுட்டுப் போனவரின் கண் முன்னாடியே வாழ்ந்து காட்டணும் என்கிற வைராக்கியம் எனக்குள்ளே தீயா பரவிச்சு'' என்பவருக்கு அப்போதைய ஒரே பிடிமானம், தையல் தொழில்தான். 

''வாழ்வதற்கு ஓர் ஆதாரம் தேவைப்பட்டபோது கைக்கொடுத்தது என் தையல் மெஷின்தான். அதன்மூலம் கிடைச்ச வருமானத்தில் பிள்ளைகளைப் படிக்கவெச்சேன். பசங்க ஸ்கூல் படிப்பை முடிச்சதும், என் அம்மா, அப்பாவோடு பாண்டிச்சேரியில் தங்கினேன். அங்கேதான் என் பசங்க கல்லூரிப் படிப்பை தொடர்ந்தாங்க. அடிப்படை தையல் வேலைகளை மட்டுமே பார்த்திட்டிருந்தா போதாதுன்னு எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க், ஃபேஷன் டிசைனிங் என வகுப்புகளுக்குப் போனேன். என் பொண்ணு பி.பி.ஏ. படிச்சுக்கிட்டே பார்ட் டைமாக 'ஆர்ஜே’ வேலைக்குப் போனாள். எனக்கு லேட்டஸ்ட் தையல் மெஷின் வாங்கிக்கொடுத்தாள். அதுக்குப் பிறகு நல்ல வருமானம் பார்க்க ஆரம்பிச்சேன். அப்போதான் என் வாழ்க்கையில் இன்னொரு பெரிய இடி...'' என்றவரின் வார்த்தைகள் தடைப்பட்டு தொடர்கிறது. 

லட்சுமி பிரபா

''என் பையன் சச்சின், பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருஷம் காலேஜ்ல சேர்ந்திருந்தான். அவனுக்கு திடீர்னு உடம்பு முடியாமப் போச்சு. டெஸ்ட் எடுத்துப் பார்த்த டாக்டர். 'கேன்சர்'னு சொன்னார். அழுது தவிக்கக்கூட அவகாசம் தராமல் மூணே மாசத்தில் இறந்துட்டான். அந்த இழப்பு என்னை சுக்குநூறா கிழிச்சுப் போட்டுச்சு'' என்கிற லட்சுமி பிரபா கண்களில் நீர் திரையிட்டது. 

''என் பொண்ணுதான், 'நமக்காக இல்லைனாலும், நம்மை அனாதையா விட்டுட்டுப் போனவங்களுக்கு முன்னாடி நல்லபடியா வாழ்ந்து காட்டணும்மா’னு ஆறுதல் சொன்னாள். என் பையனின் இழப்புதான் என் வாழ்க்கையை ரொம்ப பாதிச்சது. என் பொண்ணையாவது கரையேத்தணும்னு மறுபடியும் போராட்டத்தை ஆரம்பிச்சேன். பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்தோம். முன்பைவிட அதிகமா உழைச்சேன். என் பொண்ணு வாங்கிக்கொடுத்த மெஷினை முழுசா நம்பி களமிறங்கினேன். புதுப்புது விஷயங்களை கத்துக்கிட்டு, கஸ்டமர்களை அதிகரிச்சேன். என் அனுபவத்தைவெச்சு டெய்லரிங் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். ஆரி வொர்க், ஸ்டோன் வொர்க், தஞ்சாவூர் பெயின்ட்டிங், மிரர் வொர்க், ஃபர் டாய்ஸ், பிரைடல் வொர்க்கு என கத்துக்கொடுத்தேன். அதுதான்... 'ஹேமா பொட்டீக்’ மற்றும் 'ஹேமா ஆர்ட் அண்டு கிராஃப்ட்’ வரை வளர்ந்து நிற்குது. இப்போ, மாசம் 25,000 ரூபாய்க்கு மேல வருமானம் பார்க்கிறேன். முகூர்த்த மாதங்களில் இன்னும் அதிகமா கிடைக்கும். பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் கடவுள் சேர்த்துக்கொடுக்க, நல்லபடியா என் பொண்ணு கல்யாணத்தை முடிச்சேன். 

கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு விரும்பி வகுப்புகள் எடுக்கிறேன். என் கதையை அவங்களுக்குச் சொல்லி, வாழ்க்கைச் சுழலில் தைரியமா துடுப்பு போடவைக்கிறேன். வாழ்க்கையில் வறண்டுபோன சந்தோஷங்களை இப்போ என் பேரன் யுவன் வெங்கடேஷ் மீட்டுக் கொடுத்திருக்கான். வாழ்க்கை அழகானதுதான்!'' என்றபடி பேரனை அணைத்து முத்தமிடுகிறார் லட்சுமி பிரபா. அதில் அவரது அத்தனை வேதனைகளும் கரைவது தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்