இந்த சதுர்த்திக்கு புதிதாக வருகிறார் ‘விதை விநாயகர்’..! - கோவை இளைஞரின் முயற்சி

விதை விநாயகர்

”விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டாலே சிலைக் கரைத்தல் தொடர்பான சர்ச்சைகள் துவங்குவது வழக்கம். ரசாயனங்களால் ஆன ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை  நீர்நிலைகளில் கரைப்பதால் ஏகப்பட்ட சுற்றுச்சூழல் மாடுபாடுகள் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக விநாயகர் சதுர்த்தியே கொண்டாடக்கூடாது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கூடாது என்று நாம் சொல்ல முடியாது. ‘சிலையையும் கரைக்கணும்... சுற்றுச்சூழலும் மாசுபடக்கூடாது’ அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் விதை விநாயகர் ஐடியா வந்துச்சு...” பொறுப்பும் பூரிப்புமாக பேசுகிறார் சுவரஜித். 

கோவையைச் சேர்ந்த  சுவரஜித், இன்ஜினியரிங் பட்டதாரி. சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் விதைகளோடு கூடிய விநாயகர் சிலைகளைத் தயாரித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

“நான் ஒரு  ப்ரைவேட் கம்பெனில வேலை பண்ணிகிட்டு இருக்கேன். நான் படிச்ச படிப்புக்கு நல்ல சம்பளம் கிடைக்குது. அதை வச்சு நான் மட்டும் சொகுசா வாழுறதுல எனக்கு விருப்பம் இல்லை. களத்துல இறங்கி போராட முடியலைன்னாலும் சமூகத்துக்காக ஏதாச்சும் பண்ணணும்னு தோணுச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி “ சோ.. அவேர்” என்கிற தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.  சோசியல் அவேர்னஸின் சுருக்கம்தான்  ‘சோ.. அவேர்’. ஒரு விஷயத்தை கையில எடுத்துகிட்டு வாழ்க்கை முழுக்க அதை நோக்கியே போறதுங்கிறது என்னை பொறுத்தவரைக்கும் அவ்ளோ சரியான விஷயம் இல்லை. இப்போ மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்னை வருதுன்னா அதுதொடர்பான விழிப்புஉணர்வையும் அதிலிருந்து தப்பிக்கிறதுக்கான மாற்று வழியையும் ஏற்படுத்தி கொடுத்துட்டு, அடுத்த பிரச்னையை நோக்கி போயிட்டே இருக்கணும் அதுதான் என்னோட எண்ணம்.  “சோ.. அவேரும்” அதுக்காக ஆரம்பிக்கப்பட்டத்தான்.

இப்போ டாப்பிக்கலா என்ன பிரச்னை இருக்குனு யோசிச்சேன். வீதிகள்ல விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். ரொம்ப ஈர்ப்பா, பயங்கர கலரா இருந்துச்சி. அதை தண்ணில கரைச்சா... தண்ணிக்கும், தண்ணில வாழும் உயிர்களுக்கும் கேடு வருவது நிச்சயம். இதற்கு மாற்று வழி செய்யணும்னு தீர்மானிச்சேன். நிறைய யோசிச்சு,  விதை விநாயகர் ஐடியாவை பிடிச்சேன். நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து உடனே களத்துல குதிச்சிட்டோம், “விதை விநாயகர்னா ஒண்ணுமில்லை. உள்ளுக்குள் விதை வைப்பதற்கு ஏற்றவாறு வெறும் மண்ணால் விநாயகர் சிலையை தயாரித்து, சிலைக் காய்ந்தவுடன் அதுக்குள்ள விதைகளையும் கொஞ்சம் இயற்கை உரங்களையும் நிரப்பி, அதற்காக போடப்பட்டிருந்த துளையை மூடிடுவோம். ஒவ்வொரு சிலை உள்ளேயும் என்ன விதைகள் இருக்கு என்பதை சிலையின் மேல் குறிப்பிடுறோம். யார் யாருக்கு என்ன என்ன விதைகள் தேவையோ அந்த விதைகள் அடங்கிய விநாயகர் சிலைகளை வாங்கிக்கலாம். உதாரணமா, அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் வீட்டிலேயேதான் சிலைகளை கரைப்பார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் தோட்டமும் இருக்காது. அவங்க துளசி, தக்காளி, வெண்டை, பச்சைமிளகாய் விதைகள் நிரம்பிய விநாயகரை வாங்கலாம். தோட்டம் வைத்திருப்பவர்கள் பெருமரங்களின் விதைகள் அடங்கிய விநாயகரை வாங்கலாம். ஏரி குளங்களில் கரைப்பவர்கள் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உண்ணக்கூடிய தானியங்கள் அடங்கிய விநாயகரை வாங்கலாம். விநாயகரை வழிபட்ட மாதிரியும் ஆச்சு. விநாயகரே விதையாக மாறி விருட்சமாக ஆனது மாதிரியும் ஆச்சு. இயற்கையும் காக்கப்படும்” என்றார் சுவரஜித்.

சூப்பர் ஐடியால்ல?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!