மோடிக்கு சிலை, பிக் பாஸில் தினகரன்! - இணைப்புக்கு பன்னீர் அணியின் நிபந்தனைகள் #VikatanFun

சக்ஸஸ், வெற்றி, விஜயம்லு, யசாசு என சகல மொழிகளிலும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இத்தனை நாள்களாக இழுத்துக்கொண்டிருந்த இணைப்புப் படலம் ஒருவழியாக நடந்தேவிட்டது. 'நார்த் ஆற்காடு உனக்கு, சவுத் ஆற்காடு எனக்கு, நார்த் கொரியா உனக்கு, சவுத் கொரியா எனக்கு' என சரிசமமாக பங்கு போட்டு பிரித்தும் கொண்டார்கள். ஆனால், இந்த பங்குபிரிப்பு ஈஸியாக நடந்துவிடவில்லை என்கிறது இஸ்ரேலின் மொஸாட் அமைப்பு(?). இணைப்புப் படலத்துக்கு முன்னதாக பன்னீர் தரப்பு சில கண்டிஷன்களை முன்வைத்ததாகவும் அதற்கு எடப்பாடி தரப்பு ஒப்புக்கொண்டதாலேயே இந்த இணைப்பு சாத்தியமாயிற்று எனவும் தகவல்கள் வெளியாகின. அந்த கோரிக்கைகள் லிஸ்ட் இதோ:

பன்னீர்

* ஓ.பி.எஸ் மெரினாவில் அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றபின் அவரை ஆதரித்த முதல் ஆள் தானைத் தலைவி தீபா தான். இருவரும் ராக்கி கட்டிக்கொள்ளாமலேயே ரக்‌ஷாபந்தன் கொண்டாடி நெகிழ வைத்தார்கள். எனவே அந்தப் பாசத்தை மறக்காத ஓ.பி.எஸ் தீபாவுக்கு கொ.ப.சே பதவியைத் தருமாறு கேட்டுள்ளார். 'கொள்கையே இல்ல, பதவி மட்டும் எங்களுக்கு எதுக்கு?' என உடனே எடப்பாடி அணி ஒத்துக்கொண்டார்கள். எனவே, கூடிய விரைவில், 'அதை நீங்கள்தான் கூற வேண்டும்' பொன்மொழியை மேடைதோறும் கேட்கப்போகிறோம்.

* மிச்சமிருக்கும் 4 ஆண்டுகளை கொண்டாட்டமாக கழிக்கவே இரண்டு தரப்பும் 'முஸ்தபா முஸ்தபா' பாடி இணைந்திருக்கிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தை எதிர்க்கும் முக்கியமான ஆள் டி.டி.வி தினகரன்தான். ஆனால் அவரை அரசியல்ரீதியாக பழிவாங்கினால் அனுதாப அலையில் மக்கள் அவருக்கு ஆதரவளிக்கக் கூடும். எனவே அவரின் இமேஜை சிதைக்க அவரை பிக் பாஸ் போட்டியாளராக வீட்டுக்குள் அனுப்பவேண்டும் என ஓ.பி.எஸ் கோரிக்கை வைத்திருக்கிறார். 'வாட்டே ஐடியா பன்னீர்ஜி' என எடப்பாடியும் ஓகே சொல்லிவிட்டாராம்.

* பிக் பாஸ் பற்றி பேசிவிட்டு ரியல் பிக் பாஸ் பற்றி பேசாவிட்டால் எப்படி? இத்தனை நாள்களாக இவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த காட்ஃபாதர் மோடிக்கு தான் ஞானம் பெற்ற இடத்திலேயே பாகுபலி சிலை அளவுக்கு பிரமாண்ட சிலை அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இனிமேலும் ரெய்டில் பலியாக தெம்பு இல்லாத காரணத்தால் எடப்பாடி அணியினர் யோசிக்காமல் ஓகே சொல்லியிருக்கிறார்கள். 

* கோபமோ, சந்தோஷமோ ரியாக்ட் பண்ணாத முகம், மேடைகளில் குட்டிக்கதைகள் சொல்வது என தன்னைப் போலவே இருப்பதால் விஜய்யை ஓ.பி.எஸ்ஸுக்கு ரொம்பவே பிடிக்கும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் டைமுக்கு ரிலீஸான விஜய் படமே இல்லை என்பதில் ரசிகராக ஓ.பி.எஸ்ஸுக்கு மிகவும் வருத்தம். எனவே 'இனி தளபதி படம் வெளியாக டிலே ஆகக்கூடாது' என ஓ.பி.எஸ் கேட்க, 'எங்களுக்கு அந்தத் தளபதிதாங்க பிரச்னை, வி லவ் திஸ் தளபதிங்க' என எடப்பாடி அண்ட் கோ சொல்லியிருக்கிறார்கள்.

* சி.எம் சர்வீஸில் எடப்பாடியை விட ஓ.பி.எஸ்ஸுக்கு அனுபவம் அதிகம். ஆனால் அவரின் வீரதீர பராக்கிரமங்கள் தியேட்டரில் நியூஸ் ரீலாக போடப்பட்டதே இல்லை. ஆனால் மொக்கைப் படங்களுக்கு நடுவேகூட கருணையே இல்லாமல் எடப்பாடியின் நியூஸ் ரீலைப் போட்டு மேலும் கடுப்பேற்றுகிறது தமிழக அரசு. எனவே, அந்த நியூஸ் ரீலை நிறுத்தவேண்டும் என தாயுள்ளத்தோடு ஓ.பி.எஸ் கண்டிஷன் போட, கனத்த இதயத்தோடு ஓ.கே சொல்லியிருக்கிறார் இ.பி.எஸ்.

* ஓ.பி.எஸ் தரப்பின் முக்கிய கோரிக்கை இதுதான். 'டீம்ல எல்லாரும் வயசானவங்க. சுகர், பி.பின்னு எல்லாருக்கும் ஏகப்பட்ட பிரச்னைங்க. இதை எல்லாம் கண்டுக்காம கமல் பாட்டுக்கு மிட்நைட்ல தூங்கவிடாம ட்வீட் போட்டு கொல்றாப்ல. அதை என்னனு புரிஞ்சுக்குறதுக்குள்ள விடிஞ்சுடுது. நாங்க தூங்கி அஞ்சு மாசமாச்சு' என கண் வியர்க்க சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். 'கொங்கு மண்டல ஹாரிபாட்டர் டீல்ஸ் தி சேம் ப்ராப்ளம்' என கண்ணைக் கசக்கிய முதல்வரும் கமலின் ட்விட்டர் கணக்கை முடக்குவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!