வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (22/08/2017)

கடைசி தொடர்பு:08:17 (22/08/2017)

அட... இன்னிக்கு ‘மெட்ராஸ் டே’ல... ‘வாவ்’ பெசன்ட் நகர்! #Chennai378

‘சென்னைலாம் நமக்கு செட்டாகாது பாஸ், அங்கே யாரும் யார்கூடயும் பேச மாட்டாங்க. வேலை வேலைன்னு இருப்பாங்க' என்ற வார்த்தைகள், அடிக்கடி நம் காதுகளில் விழுந்திருக்கும். இன்று பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றிருந்தால், அவர்கள் அந்த வார்த்தைகளை  நிச்சயமாக மாற்றிக்கொண்டிருப்பார்கள். 

Besant Nagar

காலை ஆறு மணிக்குத் தொடங்கியது சென்னை தினக் கொண்டாட்டம். அங்கு நடைப்பயிற்சிக்கு வருவோர் முதல் இதற்காகவே நீண்ட தூரம் கடந்து வந்தவர்கள் வரை முகத்தில் அளவில்லாத உற்சாகம். ஃபிரீ ஸ்டைல் கால்பந்து, கதை நடித்துக் காட்டுதல், கேரம், செஸ், டேபிள் டென்னிஸ், ஃபிரீ ஸ்டைல் நடனம், கூடைப்பந்து எனக் களைகட்டியது பெசன்ட் நகர் கடற்கரை.

மெட்ராஸ் டே 

“என்ன நடக்குது இங்கே?”

“வாராவாரம் இங்கே கார் ஃபிரீ சண்டே நடக்கும். இன்று ‘மெட்ராஸ் தினம்’ என்பதால் பெரிய அளவில் நடக்கிறது” என்றார் ஒருவர். பெண்கள் ஐவர், அந்தச் சாலையில் கற்களைக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் “நாங்க எல்லோரும் ஒரே குடும்பம். மதுரைதான்  எங்க ஊர். சென்னை வந்தப்ப, இங்கே நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. அதான் எல்லோரையும் கூட்டிட்டு இங்கே  வந்துட்டோம்” என்றார். “நீங்களே சொல்லுங்க, ரோட்ல இந்த மாதிரி வேற எப்பயாச்சும் விளையாட முடியுமா? இந்த ஒரு விஷயமே போதும் இங்கே வர்றதுக்கு” என்று பாயின்டாகப் பேசினார் இன்னொருவர். மற்றொரு குடும்பத்தலைவி “வாவ்!” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் மொத்த உணர்வையும் வெளிப்படுத்தினார். 

‘எல்லாவற்றையும் ஒரு கைபார்த்துவிட வேண்டும்’ என பிஸியாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரை வழிமறித்துப் பேசியதில், “இன்னிக்குதான் நிறைய சொல்லித் தந்தாங்க. நான் இன்னிக்கு ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் செய்ய கத்துக்கிட்டேன். கூடைப்பந்து விளையாடக் கத்துக்கிட்டேன்” எனச் சொல்லிவிட்டு, சட்டென மற்றொரு நிகழ்வுக்கு விரைந்தார்.

Playing  

சென்னை நகரத்தின் பழைய புகைப்படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிந்தன, கொள்ளை அழகை அள்ளித் தந்து மெட்ராஸ் தினத்தை ஸ்பெஷலாக்கியது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் முகங்களிலும் அத்தனை குதூகலம்... அத்தனை உற்சாகம். அங்கு ஓர் இடத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாசகர்கள் தேவையானவற்றை எடுத்துச் சென்று படித்து அடுத்த வாரம் வைத்துவிட்டு, மீண்டும் வேறு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம்.

மாரத்தான் மூலம் அனைவரின் பல்ஸ்யையும் எகிறவைத்து, கதை நடித்துக் காட்டி, மிருக உரிமைக்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தி விழாக்கோலம் பூண்டது பெசன்ட் நகர்.

Besant Nagar

‘மக்கள் அவங்களோட ரிலாக்சேஷனுக்காக வர்றாங்க. அவங்களுக்கு உதவி செய்றதுலதான் எனக்கு சந்தோஷம்” என்றார் கால்பந்து விளையாட்டை நடத்திய இந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர் ஒருவர். இதேபோல் பல கல்லூரிகளிலிருந்தும் பல துறைகளில் வேலைபார்ப்பவர்களும் மக்களை மகிழ்விக்க, தங்கள் நேரத்தைச் செலவிட்டு மகிழ்கின்றனர்.

“ஒவ்வொரு வாரமும் நடப்பதைவிட இந்த வாரம் பெரிதாக நடக்கிறது. ஆனாலும் சம்பா டான்ஸ் இன்னிக்கு நடக்கவில்லை. நான் அதை மிஸ் பண்றேன்” என்று கொஞ்சம் ஃபீலிங்காகச் சொன்னார் ஒருவர். ‘அதை விட்டுவிட்டோமே!’ என்று கொஞ்சம் ஃபீல் செய்துவிட்டு சென்னையின் மறுமுகத்தைப் பார்த்த சந்தோஷத்தில் அங்கிருந்து கிளம்பினோம்.


டிரெண்டிங் @ விகடன்