வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (22/08/2017)

கடைசி தொடர்பு:20:04 (22/08/2017)

இலவச சைக்கிள்... சென்னை மெட்ரோவின் முயற்சி எப்படி செயல்படுகிறது? #SpotVisit

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் ஒரு நிலையத்தில் இருந்து அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று வர சைக்கிள் வசதி தருகிறது மெட்ரோ. இந்த மாதம் முதல் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்திருந்ததது.

சென்னை மெட்ரோ

அவர்கள் அறிவித்திருந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை அறிவதற்காக அவர்கள்  குறிப்பிட்டிருந்த  செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைத்திற்கு சென்றோம். இடத்தை அவ்வளவு சுத்தமாக பராமரிக்கிறார்கள். காலை வேளை என்றாலும் அவ்வளவாக கூட்டம் இல்லை. இடத்தை சுற்றிப்பார்த்தோம். இரண்டு அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு சற்றே பெரிய ரயில் நிலையம். சைக்கிள்களுக்கும் ஹைபிரிட் வகை வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் கிடையாது என அறிவிப்பு பலகையில் இருக்கிறது. ஆனால் சைக்கிள்கள் எதையும் காணவில்லை. அங்கிருந்தவர்களிடம் சைக்கிள் திட்டத்தை பற்றி கேட்டபோது அந்தத் திட்டம் இன்னும் அங்கே செயல்படுத்தப்படவில்லை என்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தத் திட்டம் செயல்படுவது தங்களுக்கு தெரியும் என்றனர்.

ஈக்காட்டுத்தாங்கல் ரயில் நிலையத்திற்கு சென்று திட்டம் பற்றி விசாரித்தபோது அந்த திட்டம் இங்கு மட்டும்தான் தற்போது செயல்படுகிறது என்று தெரிவித்தனர். மெட்ரோ ரயிலில் பயணம் செல்பவர்கள் ஒரு முறை 3000 ரூபாய் டெபாசிட் பணம் செலுத்தி பதிவு செய்து விட்டால் காலையில் வந்து சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம்.பகல் முழுவதும் பயன்படுத்திவிட்டு இரவு வந்து ஒப்படைக்கலாம். தனியாக வேறு எந்தக் கட்டணமும் கிடையாது.திட்டத்தில் இருந்து விலக விரும்பினால் முதலில் செலுத்திய டெபாசிட் பணம் திரும்ப கிடைத்துவிடும்.

இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு எப்படி இருக்கிறது என்று அவர்களிடம் கேட்டோம். தற்போது 8 சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தினசரி ஆண்களுக்கான சைக்கிள்கள் இரண்டு, பெண்கள் சைக்கிள் ஒன்று என மொத்தம் மூன்று சைக்கிள்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் இனிமேல் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்

சைக்கிள்கள் நிறுத்தும் இடத்திற்கு சென்று அங்கே நின்ற சைக்கிள்களை பார்த்தால் ஆச்சர்யமே ஏற்பட்டது. சைக்கிள் ஓட்டலாம் என்று நினைப்பவர்கள் கூட அவற்றை பார்த்தால் சற்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு பழைய வடிவமைப்பில் இருந்தது. சைக்கிள்களின் வடிவத்தை மேம்படுத்தி திட்டத்தை எளிமைப்படுத்தினால் இளைஞர்களை கவரலாம்.


முன்னோடி திட்டங்கள்

கொச்சியில் மெட்ரோ செயல்பட தொடங்கும்போதே பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு சைக்கிள் திட்டமும் செயல்பட தொடங்கியது. வெற்றிகரமாக பயன்பாட்டில் இருக்கிறது.

இது மட்டுமின்றி மைசூர் நகரத்தில் அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் "ட்ரின் ட்ரின்" திட்டம் இது போன்ற திட்டங்களுக்கு ஒரு முன்மாதிரி. மைசூர் நகரத்தில் மட்டும் மொத்தம் 45 இடங்களில் சைக்கிள்கள் நிறுத்தும் இடத்தை அமைத்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு 350 ரூபாய் செலுத்தி திட்டத்தில் இணைந்தால் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி சைக்கிள்களை எந்த இடத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளவும் திருப்பி ஒப்படைக்கவும் முடியும். மனிதர்களின் உதவியின்றி சைக்கிள்களை பயன்பாட்டிற்கு எடுத்துகொள்ளலாம். ஒரு மணி நேர பயன்பாட்டிற்கு இலவசம். அதற்கு மேல் பயன்படுத்துவதற்கு கட்டணம். இடையில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளும் வசதியும் "ட்ரின் ட்ரின்" திட்டத்தில் உண்டு.

 

சுற்றுச்சூழலுக்கு உகந்தது, உடல் நலனுக்கு நல்லது என பல நிறைகள் இருந்தாலும் இது போன்ற மற்ற திட்டங்களோட ஒப்பிடுகையில் இங்கே பல குறைகள் இருக்கின்றன. பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் சைக்கிளின் வடிவமைப்பையாவது சற்று மாற்றியிருக்கலாம். இருக்கும் குறைகளை கண்டறிந்து அதை சரி செய்தால் இங்கே இது போன்ற நல்ல திட்டங்கள் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.


டிரெண்டிங் @ விகடன்