வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (22/08/2017)

கடைசி தொடர்பு:14:57 (22/08/2017)

ராயல் என்ஃபீல்டை வாங்காமல் இதைச் செய்திருந்தால் நீங்களும் இன்று கோடீஸ்வரர்! 

`எனதருமை ராயல் என்ஃபீல்டே... நீ எங்கு இருக்கிறாய்? நீ மிலிட்டரி கிரீனா... டெஸர்ட் ஸ்டோர்மா அல்லது பழைய படங்களில் பார்த்த அடர்கறுப்பு நிறமா? நீ எங்கு இருந்தாலும் பத்திரமாக இரு! நீயும் நானும் நீண்ட தூரம் சாகசப் பயணம் போகவேண்டியிருக்கிறது. அதுவரை எனக்காக எந்த ஷோரூமிலாவது பொறுமையாகக் காத்திரு! நன்கு ஓய்வெடு!' இது ராயல் என்ஃபீல்ட் பைக்கை வாங்கத் துடித்த நண்பர் ஒருவரின் ஏக்க ஸ்டேட்டஸ்!

ராயல் என்ஃபீல்ட்

நானும் ராயல் என்ஃபீல்ட் ரசிகன்தான். அந்த டப... டப... டப... சத்தத்தைக் கேட்கும்போது இதயத் துடிப்பே அதிகரித்துவிடும். அவ்வளவு பிடிக்கும். ஆண்களில், இரண்டு வகையினர் உண்டு. ஒன்று, ராயல் என்ஃபீல்டு புல்லட் வைத்திருப்பவர்கள். இன்னொன்று, இவரைப்போல ஏங்கி இப்படி ஏக்க ஸ்டேட்டஸ் போடுபவர்கள். இவருக்கு மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலானோருக்கு சிறு வயதிலிருந்தே புல்லட் மீது தீராக்காதல் இருக்கும். மற்ற வாகனங்களைவிட `டப டப டப'வென வரும் ராயல் என்ஃபீல்டு பலரது கவனத்தை ஈர்க்கிறது. இன்றும் யாரேனும் `டப டப'வென புல்லட்டில் போனால், கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம். ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு கூலிங்கிளாஸ் அணிந்து `டப டப'வென தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது நம்மில் பலருக்கு, பெருங்கனவுகளில் ஒன்று. `நீண்டதூர புல்லட் பயணம்... ஆண்மையின் இன்னோர் அடையாளம்' என ராயல் என்ஃபீல்டு புல்லட்டைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இந்தியச் சந்தையில் ராயல் என்ஃபீல்டு வாகனங்களுக்கு அன்றும் இன்றும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், இந்த புல்லட்டை வாங்காமல் அல்லது  அதே பணத்தில் கூடுதலாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பங்குகள் மீது முதலீடு செய்திருந்தால் இன்று நீங்களும் ஒரு கோடீஸ்வரர்!

ஆம், 2009-ம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றின் விலை 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். அதே ஆண்டில் ராயல் என்ஃபீல்டு புல்லட்களை உற்பத்தி செய்யும் எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 216 ரூபாய். நீங்கள் ஒருவேளை ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை வாங்காமல், 216 ரூபாய் என்ற விலையில் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு 625 பங்குகளை வாங்கியிருக்கலாம். அப்படி நீங்கள் வாங்கியிருந்தால், இன்று இதனுடைய மதிப்பின்படி நீங்கள் கோடீஸ்வரர்... இரண்டு கோடி ரூபாய்க்கு அதிபதி! எப்படியெனில், இன்றைய நிலவரப்படி எய்ச்சர் மோட்டார்ஸ் பங்கு ஒன்றின் விலை 31,815 ரூபாய். 

625 பங்குகள் * 31,815 ரூபாய் = 1,98,84,375 ரூபாய். 

ராயல் என்ஃபீல்டு பைக் என்பது மட்டுமல்ல, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவில் டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி லிமிடெட் (எம்ஆர்எஃப்) பங்கில் முதலீடு மேற்கொண்டிருந்தால் இன்று நீங்களும் ஒரு கோடீஸ்வரர்தான். ஏனெனில் வெறும் 500 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை ரூ.63,500. இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு என்றால் அது எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்குதான்.  2001 ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் பங்கின் விலை குறைந்து வெறும் ரூ.455-க்கு வர்த்தகமானது. ஆகக் குறைந்த அந்த விலையைத் தொட்டபின், இந்தப் பங்கின் விலை ஜிவ்வென்று உயர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்கின் விலை 500 ரூபாய் என்று இருக்கும் போது, குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்து இருந்தால் இன்றைய நிலவரப்படி அதன் மதிப்பு 1 கோடியே 27 லட்சம்  ரூபாயாகப் பெருகியிருக்கும். இவ்விரண்டு பங்குகள் மட்டுமில்லை, மாருதி, போஷ், யெஸ் வங்கி உள்பட எந்த ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளில் நீங்கள் நீண்ட கால நோக்கில் முதலீடு மேற்கொண்டு இருந்தால் இன்று நீங்களும் ஒரு கோடீஸ்வரர்!

இப்படிச் சொல்வதன் மூலம் பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்தாலே போதும், கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என நினைத்துவிடக் கூடாது. 

இதில் முக்கியமான விஷயம், எந்த நிறுவனத்தின் பங்கை நீங்கள் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் அளவு மாறும். எல்லா நிறுவனங்களும் ஒரே அளவில் வளர்ச்சி காணாது என்பதால், உங்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் அளவும் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்க வாய்ப்புண்டு. மோசமான நிறுவனத்தின் பங்கை நீங்கள் வாங்கியிருந்தால், உங்களுக்கு நஷ்டம்கூட ஏற்படலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஒரு பங்கு நிறுவனம் கடந்த காலத்தில் லாபத்தை அள்ளிக் கொடுத்த மாதிரி, எதிர்காலத்திலும் கொடுக்கும் எனச் சொல்ல முடியாது. எனவே,  நீங்கள் முதலீடு செய்யவுள்ள பங்கு நிறுவனம், இனிவரும் காலங்களில் எப்படிச் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியம்.

பங்குச்சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, நன்கு வளர வாய்ப்புள்ள நிறுவனத்தின் பங்கில் பணத்தை முதலீடு செய்துவிட்டு, அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டுவருகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தால், நாமும் கோடீஸ்வரர்  ஆகலாம்!


டிரெண்டிங் @ விகடன்