Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கைகளுக்கான நாட்டுப்புறக் கலை பயிற்சி!

இன்றைய சூழலில் மூன்றாம் பாலினத்தவரும் கல்வியறிவு பெற்று, மற்றவர்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு வரை, பிற மக்களைப்போல மூன்றாம் பாலினத்தவரும் சமமாகவே மதிக்கப்பட்டுவந்தனர். ஆங்கிலேயரின் வருகையை அடுத்து, பல்வேறு காரணங்களால் மூன்றாம் பாலினம் குறித்த மக்களின் பார்வை மாறியது. இந்நிலை இன்று வரை தொடர்கிறது.

திருநங்கைகள் - நாட்டுப்புறக் கலை

இந்த மூன்றாம் பாலினத்தவருக்கு நம்பிக்கை ஊட்டும்விதமாக, மதுரை மாவட்டச் சமூகநலத் துறை மற்றும் ஸ்வஸ்தி இயக்கம் இணைந்து, திருநங்கையருக்கான நடனப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்தது. இந்தப் பயிற்சி முகாமில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில், கல்வி பயின்ற திருநங்கையர்களும் அடங்குவர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்ட, ஸ்வஸ்தி  இயக்கத்தைச் சேர்ந்தவரும் `திருநங்கை' ஆவணப்பட இயக்குநருமான பிரியாபாபு, “இவர்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் நடனம் ஆடுபவர்களாகவும் கூத்துக் கட்டுபவர்களாகவுமே இருக்கின்றனர். எனினும், இந்த நடனப் பயிற்சியை இவர்கள் முறையாகப் பெற்றிருக்கவில்லை. பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக்கொண்டு முறையான பயிற்சி வழங்குவதே இந்த முகாமின் நோக்கம். இதன் மூலம் இவர்கள் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி... பொருள் ஈட்டி, சமுதாயத்தில் சிறப்புடன் வாழ்வர்'' என்றார்.

பிரபல நடனப் பயிற்சியாளர்களான ஞானசேகர், தங்கப்பாண்டி, மலைச்சாமி போன்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், இவர்களுக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் போன்ற பல்வேறு வகையான நடனப் பயிற்சிகளை அளித்தனர். இந்தப் பயிற்சி முகாமை, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கிவைத்தார். அவரிடம், `திருநங்கைகள் நிம்மதியாக வாழ்வதற்கு, வீடுகள் கட்டித் தர வேண்டும்' என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், முதற்கட்டமாக 25 திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இந்தப் பயிற்சி முகாமின் இறுதி நாளில், பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருநங்கைகள் - நாட்டுப்புறக் கலை

கரகாட்டப் பயிற்சியாளர் ஞானசேகரனிடம் இந்தப் பயிற்சி முகாம் குறித்துக் கேட்டபோது...

“திருநங்கைகளுக்கு, பொதுவாகவே நடனத்தின் மீது அதீத ஆர்வமும் பற்றும் இருக்கும். அவர்களால் எளிதாக இந்தப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ள முடியும். வாழ்வில் பல சூழ்நிலைகளைக் கடந்து வந்த இவர்களுக்கு, ஆக்கமும் ஊக்கமும் மட்டுமே தேவையாக உள்ளன. நாட்டுப்புறக் கலை என்பது, கடல் போன்ற பரந்து விரிந்த ஒன்று. அந்த நான்கு நாள்கள் பயிற்சி என்பது, கடல்நீரை வாளியில் அடக்குவது போன்றதே. எனவே, இவர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்க அமைப்பு சார்ந்த மற்றும் சாராத நிறுவனங்கள் முயற்சி செய்ய  வேண்டும்'' என்று கூறினார்.

இங்கு உள்ள திருநங்கைகள் அனைவரும் முழுவதுமாக தொழில்முறைக் கலைஞர்களாக மாறுவதற்கான விதையாகவே இந்தப் பயிற்சியைப் பார்க்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement