Published:Updated:

``வீட்டை விட்டு வந்து 5 வருஷமாச்சு; பேரப்புள்ளைங்கள பார்க்க ஆசையா இருக்கு!" - 75 வயது லட்சுமி பாட்டி

`கஷ்டப்பட்டு மூட்டையை இழுத்துட்டுப் போறதைப் பார்த்துட்டு, யாராவது 50, 100 பணம் கொடுப்பாங்க... நான் வாங்க மாட்டேன்'.

A 75-year elder woman collecting empty boxes for livelihood
A 75-year elder woman collecting empty boxes for livelihood

புதுக்கோட்டை கடைத்தெரு. மதியம் ஒரு மணி. உச்சிவெயிலில் பத்தடி நடந்தாலே வியர்வை கொட்டத் தொடங்கி, கால்கள் அனிச்சையாக நிழலைத் தேடுகின்றன. ஆனால், இந்த உக்கிர வெயிலில், பாட்டி ஒருவர் கனத்த இரண்டு சாக்கு மூட்டைகளைத் தரதரவென இழுத்துக்கொண்டு சென்றார். பாட்டிக்கு, 75 வயதுக்கு மேல் இருக்கும். கூன் விழுந்த முதுகோடு, தடுமாற்றத்தோடு சென்றார்.

Lakshmi
Lakshmi

கீழராஜ வீதி சந்திப்பு அருகே, அந்தப் பாட்டி சாலையைக் கடக்க நின்றபோது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் ஆட்டோவை நிறுத்திவிட்டு, மற்ற வாகனங்களையும் நிறுத்தச் சொல்லி, பாட்டிக்கு உதவினார்.

சாலையின் மற்றொரு புறத்திலிருந்து வந்த டெம்போ வாகனம், கண் இமைக்கும் நேரத்தில் பாட்டி இழுத்துச்சென்ற சாக்குமூட்டை மேல் ஏறிச் சென்றது. நல்ல வேளை, பாட்டிக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், மூட்டையிலிருந்த அட்டைகள் எல்லாம் தரையில் சிதறி விட்டன. பதறிய பாட்டி, அவசர அவசரமாக அட்டைகளை எடுத்து மூட்டைக்குள் வைத்தார். ஓடிச்சென்று அவருக்கு உதனோம்

லட்சுமி பாட்டி
லட்சுமி பாட்டி

``ஏம் பாட்டி, இந்த வெயில்ல கஷ்டப்பட்டு மூட்டைய இழுத்துட்டுப் போறீங்க... எங்கேன்னு சொல்லுங்க. நானே கொண்டுபோய் விடுறேன்" என்றேன். அட்டைகளைத் திரும்பவும் சாக்கில் வைத்த ஆசுவாசத்தில், ``பரவாயில்லப்பா... மூட்டையைப் போடுற இடம் பக்கத்துலதான் இருக்கு. உனக்கு எதுக்குப்பா சிரமம். என் வேலையை நானே பார்த்துக்குறேன்" என்றார்.

மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதால், அவருடன் சென்று, மூட்டைகளைப் பழைய பேப்பர் வாங்கும் கடையில் விற்கும்வரை காத்திருந்தோம்.

லட்சுமி
லட்சுமி

``பாட்டி, கொஞ்ச நேரம் பேசலாமா?" என்றதும், ``என்கிட்ட என்னப்பா பேசப்போற?" என்றவாறு நிழலில் உட்கார்ந்துகொண்டார். அவரைப் பற்றி கேட்டேன்.

``என்னோட பேரு லட்சுமி. இச்சடி பக்கத்துலதான் சொந்த ஊரு. ஒரு மகன், ஒரு மகள். பிள்ளைகள ரொம்பக் கஷ்டப்பட்டுதான் வளர்த்தேன். மகளை பக்கத்து ஊர்ல நல்லபடியா கட்டிக்கொடுத்தேன். வீட்டுக்காரர் மொடங்கி பத்து வருஷத்துக்கும் மேல ஆச்சு. எம் மகனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன்.

மாமியார் - மருமக சண்டை எல்லா வீட்டுலேயும் சகஜமாயிடுச்சு. அதுக்காக வீட்டு வேலைகள இழுத்துப்போட்டு செய்வேன். ஆடுகளை ஓட்டிக்கிட்டு காலையில போனா, மேய்ச்சிட்டு வர்றதுக்கு ராத்திரியாயிடும். அப்படியும் சண்டை சச்சரவு வந்துட்டே இருந்துச்சு.

பழைய பேப்பர் கடையில்...
பழைய பேப்பர் கடையில்...

அப்பதான் திடீர்னு ஒருநாள், உடம்புக்கு முடியாமப் போயிடுச்சு. அப்பவும் சண்டை வர, செத்தாலும் பரவாயில்லனு பட்டினி கெடந்தேன். அதுக்கு மேல அங்கே இருக்க பிடிக்கல. அந்த வைராக்கியத்தோட வீட்டை விட்டு வந்துட்டேன்" என்ற லட்சுமி பாட்டி, கலங்கும் கண்களை முந்தானையால் துடைத்துக்கொள்கிறார்.

``என் நெலமை இப்படியானாலும், அவங்க யாரு மேலயும் எனக்கு கோபம் இல்லை. திட்டிக்கிட்டாவது உடம்பு முடியாம கிடக்கிற என் வீட்டுக்காரருக்கு, நேரா நேரத்துக்கு சோறு கொடுக்கிறாங்க. அதுவே எனக்கு பெரிய சந்தோஷம். நம்ம எங்கயாது போயி, வேலைபார்த்து வயித்தக் கழுவிக்கலாம்னு அங்கிருந்து கிளம்பிட்டேன்.

லட்சுமி பாட்டி
லட்சுமி பாட்டி

வீட்டை விட்டு கிளம்பி வந்ததும், மொதல்ல எங்க போறது, என்ன செய்யறதுன்னே தெரியலை. பஸ் ஸ்டாண்டையே சுத்திச்சுத்தி வந்தேன். ரெண்டு மூணு நாள் பட்டினியாக் கெடந்தேன். ஆனா, திருடக்கூடாது, பிச்சை மட்டும் எடுத்துடக்கூடாதுனு மட்டும் வைராக்கியமா இருந்தேன்.

ஒரு வழியா, கடையைக் பெருக்குற வேலை கெடைச்சுது. ராஜா பர்னிச்சர் கடைக்குப் பக்கத்துல இருக்குற இரண்டு கடைகளை, கூட்டிப்பெருக்குற வேலையைக் கொடுத்தாங்க.

A 75-year elder woman collecting empty boxes
A 75-year elder woman collecting empty boxes

தெனமும் காசு கொடுத்திடுவாக. அத வெச்சு காலைலயும், மத்தியான சாப்பாட்டையும் முடிச்சிடுவேன். ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன பண்றதுனு தெரியாம இருந்தப்பதான், அட்டைகளப் பொறுக்கி விற்கலாமேன்னு தோணுச்சு.

காலையில எழுந்திருச்ச உடனே ரெண்டு கடைகளையும் கூட்டிப் பெருக்கிட்டு பழைய அட்டை பொறுக்கக் கெளம்பிடுவேன். காலையில ஆறு மணிக்கு ஆரம்பிச்சா, மூட்டை கட்டுறதுக்கு பத்து மணியாயிடும்.

Lakshmi
Lakshmi

கீழ ராஜ வீதி, பிருந்தாவனம், கீழ வீதின்னு தெருத் தெருவா அலைஞ்சு, கெடைக்கிற அடைகளைப் பொறுக்கி ஒரு இடத்தில மூட்டைகட்டி வெச்சிருவேன். மூட்டையை என்னால தூக்க முடியாது. அதனால இழுத்துட்டே போய் பேராங்குளத்துக்கிட்ட இருக்கிற இரும்புக் கடையில, எடைக்குப் போட்டு காசு வாங்கிப்பேன்.

தெருத் தெருவா அட்டையப் பொறுக்கி மூட்டையா கட்டி வெச்சிருப்பேன். டீ குடிச்சிட்டு வர்ற நேரத்துல அந்த மூட்டையை யாராவது திருடிக்கிட்டுப் போயிருவாங்க. நான் கஷ்டப்பட்டு இழுத்துட்டுப் போறதைப் பார்க்கிற சில பேரு 50, 100 ரூபா கொடுப்பாங்க. எவ்வளவு வற்புறுத்திக்கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன். பழைய அட்டைகள வித்தா, நூறு ரூவா வரை கிடைக்கும். அதுவே போதும்னு சொல்லிடுவேன்.

``வீட்டை விட்டு வந்து 5 வருஷமாச்சு; பேரப்புள்ளைங்கள பார்க்க ஆசையா இருக்கு!" - 75 வயது லட்சுமி பாட்டி

ராத்திரி சாப்பாடுக்குப் போக, மீதி இருக்குற காசை சேத்து வெச்சிருக்கேன். வீட்டுல கோவிச்சுக்கிட்டு வந்து அஞ்சு வருஷமாச்சு. பேரப்புள்ளைகள பார்க்கணும்னு அடிக்கடி தோணும். அவங்கள பார்க்கப் போனா, வெச்சிருக்கிற காசுல பேரங்களுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போகணும். ஆனா, போய்ட்டு திரும்ப வந்துடுவேன்.

'யார்கிட்டயும் பிச்சை எடுக்கக்கூடாது. திருடக்கூடாது. சாகுற வரைக்கும் உழைச்சு சாப்பிடணும். அதுக்காக உடம்புக்கு ஏதும் வந்திடாம பார்த்துக்க கடவுளே'னுதான் தினமும் வேண்டிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, கையை ஊன்றி எழுந்து நடக்க ஆரம்பித்தார் லட்சுமி பாட்டி.

A 75-year elder woman collecting empty boxes for livelihood
A 75-year elder woman collecting empty boxes for livelihood

எல்லா ஊர்களிலும் லட்சுமி பாட்டிபோல இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவர் பின்னாலும் வலி நிறைந்த கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.