Published:Updated:

`15,000 லோன் கேட்டேன். அவங்க பட்டா கேட்டாங்க!’ - செருப்பு தைக்கும் ராசு

`அப்படியா... கொண்டு வர்றேன்’னு சொல்லிட்டு, அந்தப் பக்கமே போறதில்லை. நாம இருக்கறதோ புறம்போக்கு இடம். இதுக்குப் பட்டா கேட்டா நாம என்ன செய்றது?’

ராசுவின் செருப்புக் கடை
ராசுவின் செருப்புக் கடை ( சாய் தர்மராஜ் )

பரபரப்பு இல்லாத சாலை அது. ஆவி மரத்தின் நிழலில் ஐந்துக்கு ஐந்து இரும்பு பெட்டிக்கடையில், செருப்பு தைத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். மூக்குப் பொடியை உறிஞ்சி முடித்த பின் கண்களைச் சுருக்கி நம்பைப் பார்த்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த புழுதிப்பட்டியில் செருப்பு தைக்கும் ராசு ஐயாவைச் சந்தித்தோம்.

ராசு
ராசு
சாய் தர்மராஜ்

"செருப்பு தைக்கிற என்னை எடுத்து டிவியில போடப்போறீங்களா?” என சிரித்தபடி நம்மிடம் பேசினார்.

"என் பேரு பிரான்பட்டி ராசு. அட ஊரு பேர சேர்த்து சொன்னாதாய கெத்து. எனக்கு 3 பிள்ளைங்க. மூத்தத கட்டி குடுத்துட்டேன். அடுத்தது பையன். வெளிநாட்டில் எலெக்ட்ரிஷனா இருக்கான். ஆனா, பேச்சுவார்த்தை இல்லை.

கடைசிப் பிள்ள எங்க கூடதான் இருக்கு. என் சம்சாரம் குப்பை வண்டி தள்ளிப் போவா. தினமும் 80 ரூபாய் சம்பளம். இதுதான் என் குடும்ப வாழ்க்கை. இந்தச் செருப்பு தைக்கும் கடைக்கு நான்தான் ஓனர், வேலை ஆளும் நான்தான். பி.யூ.சி வரைக்கும் படிச்சுருக்கேன். அது போக இங்கிலிஸ் டைப் ரைட்டிங் லோயர் முடிச்சுருக்கேன். புழுதிப்பட்டி எலிமின்ட்ரி ஸ்கூலில் சத்துணவு அமைப்பாளரா வேலை பார்த்தேன்.

ராசு தயார் செய்த செருப்பு
ராசு தயார் செய்த செருப்பு
சாய் தர்மராஜ்

நேர்மையா இருந்தேன். ஆனா, இல்லாததும் பொல்லாததும் சொல்லி, என் மேல பழி போட்டு வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. விதிய நினைச்சு சிரிச்சுட்டு, அப்பா செஞ்ச தொழில்ல இறங்கிவிட்டேன். 20 வருஷத்துக்கு மேல இந்தத் தொழில்தான் பாக்கிறேன். லாரி டயர், பெல்ட் தோல்னு கிடைக்கிற பொருளை வெச்சு செருப்பு செய்றேன்.

பிஞ்ச செருப்ப தைக்கிறது, ஷூ, செருப்புக்கு பாலிஸ் போடுறதும் செய்வேன். நானே ரெடி பண்ற செருப்பை 250 ரூபாய்க்கு விற்பேன். வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாசத்துக்கு ரெண்டு முறை செருப்பு தைக்க, தேவையான பொருள் வாங்க தாராபுரம் போவேன்.

ராசு தனது கடையில்...
ராசு தனது கடையில்...
சாய்தர்மராஜ்

செருப்பு வெயிட்டா இருக்கும். முள்ளு முடலுக்கு நல்லா தாங்கும். ஆடு மேய்க்கிறவுங்க, கம்மா வெட்டுக்காரங்கதான் நம்ம கஷ்டமர். பழைய செருப்பு தைக்க 10 ரூபாய்ல இருந்து, தோதுபடுற வரைக்கும் காசு வாங்கிக்குவேன். காசு இல்லைனாலும் விட்டுருவேன். நான் செய்ற புது செருப்பை விராலிமலை, மணப்பாறை, துவரங்குறிஞ்சி சந்தையில விற்பேன். மத்தபடி இந்த ஆவி மரம்தான் நம்ம போதிமரம். காலையில 9 மணிக்கு வந்தா சாயங்காலம் 6 மணிக்கு வீட்டுக் கிளம்பிடுவேன்.

மதியத்துக்கு மட்டும் கிண்ணத்தில கஞ்சி எடுத்துட்டு வந்துருவேன். டீக்கடைக்குப் போனா மெயினா பேப்பர் பார்த்துவிடுவேன். நாமளும் நாட்டு நடப்ப தெரிஞ்சுக்கணும்ல. எத்தன வருஷம் ஆனாலும், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்ல. எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இருக்கேன்.

ராசு தனது கடையில்...
ராசு தனது கடையில்...

ஆனா, வயித்த கழுவ காசு கிடைக்குதேனு தொழில விடாம பாக்குறேன். ஒருநாள், கடைய முன்னேத்தணும்னு எங்க ஊர்ல இருக்க பேங்க்கு லோன் கேட்டு போனேன். `செருப்பு வாங்க லோனா?’னு கேட்டார் பேங்க் மேனேஜர். அப்படியே, `கடைக்கு பட்டா இருந்தா கொண்டாங்க. நீங்க கேக்குற 15,000 ரூபாய் லோனை தர்றேன்’னு தாக்கல் சொன்னார்.

`அப்படியா... கொண்டு வர்றேன்’னு சொல்லிட்டு, அந்தப் பக்கமே போறதில்லை. நாம இருக்கறதோ புறம்போக்கு இடம். இதுக்குப் பட்டா கேட்டா நாம என்ன செய்றது?

அழிவின் விளிம்பில் லாடம் கட்டும் தொழில்... கலங்கும் தொழிலாளர்கள்!

லோன் வாங்குற ஆசைய விட்டுட்டேன். லோன் கிடைச்சிருந்தா, கடைக்கு சரக்கு வாங்கிப்போட்டிருப்பேன். அதவச்சு நிறைய செருப்பு தயார்செஞ்சு, பெரிய வியாபாரம் பாத்துருப்பேன். எங்கிட்ட போய் பட்டா கேட்டா என்ன பண்ணுவேன்?” என்று பெருமூச்சு விட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.