Published:Updated:

பெருமைமிகு முல்லைப்பெரியாறு அணை - 125 வது ஆண்டு சிறப்புப் பகிர்வு

அணைக் கட்டுமானப் பணிக்குழுவுடன் பென்னிகுவிக்
அணைக் கட்டுமானப் பணிக்குழுவுடன் பென்னிகுவிக்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு முதன் முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட தினம் இன்று.

கடந்த 1876-78 காலகட்டத்தில் மதராஸ் மாகாணம் பெரும் பஞ்சத்தை எதிர்கொண்டது. லட்சக்கணக்கான மக்கள் மாண்டுபோயினர். பருவமழை இல்லாததால், மூலவைகை ஆற்றில் தண்ணீர் இன்று, தென் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், நீர்நிலைகள், அணைகளை அதிகப்படுத்தினால், பருமழை இல்லாத காலங்களில் அவை பலன் கொடுக்கும் என திட்டமிட்டது ஆங்கிலேய அரசு. அந்தபடி கட்ட திட்டமிடப்பட்டதே முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை
Vikatan

அரபிக் கடலை நோக்கி சென்றுகொண்டிருந்த காட்டாற்றை தடுத்து நிறுத்தி, அதன் மறுபுறம் உள்ள தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் அணையாக முல்லைப்பெரியாறு அணை வடிவமைக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில், புவி ஈர்ப்பு விசை கன அடிக்கு 145 பவுண்டாக இருக்கும் என்பதால், பொறியலாளர்கள் இந்த அணையை, ’எடை ஈர்ப்பு அணை’ (Gravity Dam) என்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

இவை அத்தனைக்கும் காரணம், ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக். நமது பெருமைகளில் ஒன்றான கல்லணையின், கட்டிடத் தொழில்நுட்பம் பற்றி, ஆராய்ச்சிசெய்த பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன், கல்லணையை ’தி கிரேட் அனகட்’ (The Great Anacut) எனக் குறிப்பிடுகிறார். அவரின் ஆய்வறிக்கையைப் படித்த கர்னல் ஜான் பென்னிகுவிக், தமிழர்கள் கட்டுமானத்திற்குப் பயன்படுத்திவந்த சுண்ணாம்புக் கலவையால் ஆன ’சுர்க்கி’ கொண்டு முல்லைப்பெரியாறு அணையைக் கட்டினார். கூடவே, அக்காலகட்டத்தில் பிரபலமான போர்ட்லேண்ட் சிமெண்டும் பயன்படுத்தப்பட்டது. இவற்றை கலக்க, இங்கிலாந்தில் இருந்து 6 கலவை இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

“130 அடியாகக் குறைக்க வேண்டும்!” - முல்லைப்பெரியாறு... தொல்லை கொடுக்கும் கேரளா
அணையினை பார்வையிட்ட நேரு.
அணையினை பார்வையிட்ட நேரு.

அணையின் கட்டுமானம் பாதி முடிக்கப்பட்டிருந்த சூழலில், காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அணை உடைந்துபோனது. மனம் தளராத பென்னிகுவிக், கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார். கடுமையான வானிலை, வன விலங்குகளின் அச்சுறுத்தல், நோய் தாக்குதல் என, முல்லைப்பெரியாறு அணைக்கட்டுமானத்தின் போது, 483 பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளதாகவும், அதில் ஆங்கிலேயர்களும் உள்ளனர் என்றும் கூறுகின்றன ஆவணங்கள்.

பல தடைகள் வந்தாலும், தனது தொடர் முயற்சியால், முல்லைப்பெரியாறு அணையை கட்டிமுடித்தார் கர்னல் ஜான் பென்னிகுவிக். 10.10.1895 நாளில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை திறப்பு விழாவிற்கு வந்திருந்த அப்போதைய மதராஸ் மாகாண கவர்னர் லார்ட் வென்லாக், “முல்லைப்பெரியாறு அணை, பொறியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் உறுதியும், நவீன தொழில்நுட்பமும், பொறியியல் உலகின் ஆச்சர்யமாகப் பேசப்படும். அதிசயமாகப் பார்க்கப்படும். காட்டில் ஓடும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்டியிருப்பது பெரும் சாதனையே” என பேசினார்.

Vikatan
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

அணையினை கட்டி, தேனி மாவட்டத்தினை வளமாக்கியதற்கு நன்றிக்கடனாக, இன்று தேனி மாவட்ட மக்கள் தங்களது வீட்டு சுபநிகழ்ச்சி அழைப்பிதழ்களில், பென்னிகுவிக் படத்தினை இடம்பெறச் செய்கின்றனர். குழந்தைகளுக்கு, ஜான் பென்னி, பென்னி, பென்னிகுவிக் என பெயர் வைக்கின்றனர்.

தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட பாசனப் பரப்பு முல்லைப்பெரியாறு அணையால் பயன்பெறுகிறது. தேனி மாவட்டத்தைத் தவிர மற்ற மாவட்ட மக்கள், தங்களுக்கு வைகை அணையில் இருந்து தான் தண்ணீர் கிடைக்கிறது என்றும், அதற்கு மூல வைகை ஆறு தான் காரணம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வருடத்திற்கு இரண்டு முறை மூல வைகை ஆற்றில் தண்ணீர் வருவதே பெரிய விசயம். இச்சூழலில், வைகை அணையின் பெரும் பங்கு தண்ணீரை முல்லைப்பெரியாறு அணை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

பென்னிகுவி மணிமண்டபம்.
பென்னிகுவி மணிமண்டபம்.
Vikatan

முல்லைப்பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட தினமான இன்று, அதிலும், 125வது ஆண்டு கொண்டாட்டத்தில், விவசாயிகள், லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்திற்குச் செல்வது வழக்கம். அங்குள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கல் வைத்து வழிபடுவர். இதனை விவசாய சங்கங்கள் முன்னின்று நடத்துகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு