Published:Updated:

`இது அடுத்த தலைமுறைக்கான பரிசு!'- ஆச்சர்யப்பட வைக்கும் மாரி செல்வராஜின் நண்பர் #MyVikatan

வள்ளிநாயகம்
வள்ளிநாயகம்

இப்படி நிறையா விஷயம் நம் சந்ததியினர் கற்பனையில்தான் பார்த்திட்டிருக்கோம். எனக்கு அடுத்து வர சந்ததிக்கு நாம இப்போ பயன்படுத்துற பொருள்களும், என் அம்மா, அப்பா, ஆச்சி காலத்துல பயன்படுத்தின பொருள்களும் காட்டணும்னு தோணுச்சி.

காலம் வேகமாக நகர்கிறது. திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் நாமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம் பெற்றோர், தாத்தா பாட்டி உள்ளிட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நின்று நிதானமாக அனுபவித்தவர்கள். அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களே இதற்கு சான்று. சின்ன சின்ன பொருள்கூட வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும். அப்படியான பொருள்களை, பொக்கிஷங்களைச் சேகரித்து பாதுகாத்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம்.

1957 மாட்டுவண்டி
1957 மாட்டுவண்டி

இயக்குநர் மாரி செல்வராஜின் நண்பரான இவர், தற்போது அவரின் அடுத்த பட வேலைகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார். தன் கலெக்‌ஷன்ஸ் குறித்து அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்தார் வள்ளிநாயகம். மக்களிடம் இருந்து செம ரெஸ்பான்ஸ். இதுகுறித்து நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யத் தகவல்களும் புகைப்படங்களும் பின்வருமாறு..

``என்கிட்ட இருக்குறதெல்லாம் கலெக்‌ஷன்ஸ்னு சொல்றதவிட, அடுத்த தலைமுறைக்கான பரிசு-ன்னு சொன்னா சரியா பொருந்தும். நிறைய பொருள்கள நம்ம அம்மா, அப்பா சொல்லக் கேட்டிருப்போம். அதெல்லாம் எப்படி இருக்கும்னுகூட பார்த்திருக்கமாட்டோம். உதாரணமா என் அப்பா காலத்துல கல்யாணத்துக்கு குதிரை வண்டியிலதான் போவாங்கன்னு சொல்லுவார். அப்போ அந்தக் காலத்துல குதிரை வண்டி எப்படியிருந்திருக்கும்னு என் கண் முன்னே கற்பனைகள் விரியும். இப்படி நிறையா விஷயம் நம் சந்ததியினர் கற்பனையில்தான் பார்த்திட்டிருக்கோம். எனக்கு அடுத்து வர சந்ததிக்கு நாம இப்போ பயன்படுத்துற பொருள்களும், என் அம்மா, அப்பா, ஆச்சி காலத்துல பயன்படுத்தின பொருள்களும் காட்டணும்னு தோணுச்சி.

ஆழக்கு, ஒலக்கு, படி, பக்கா, நாழி, மரக்கால்.
ஆழக்கு, ஒலக்கு, படி, பக்கா, நாழி, மரக்கால்.

என் ஆச்சி உள்ளிட்டோர்கிட்ட அந்தக் காலத்துல பயன்பாட்டில் இருந்து, இப்போ அழிந்துபோன பொருள்கள் பற்றி தகவல்கள் சேகரிச்சேன். வீட்டு உபயோகப் பொருள்கள், விளக்குகள், சமையலுக்குப் பயன்படும் பாத்திரங்கள், மரப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், ரேடியோ, கேமரா, சைக்கிள், போன், கடிகாரம்-ன்னு எல்லாத்தையும் சேகரிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்துல பயன்படுத்தின பொருள்களைத் தேட ஆரம்பிச்சேன். என்னோட தேடல் மூலமா பல்வேறு விலைமதிப்பில்லா பொக்கிஷங்களை எனக்குக் கொடுத்துச்சு. கடந்த 5 வருடங்களில் 1000-க்கும் மேற்பட்ட பொருள்களை சேகரிச்சி வெச்சிருக்கேன்.

திருநெல்வேலி மேலப்பாளையம் என்னும் இடத்துல ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சந்தை போடுவாங்க. அங்கு பழைய காலத்துப் பொருள்கள் நிறைய விற்பனைக்கு வரும். நேத்து அங்கு போயிருந்தப்போ எனக்கு ஒரு 80-களில் பயன்படுத்தப்பட்ட மிக்ஸி கெடச்சது. அதுவும் 60 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன். என்னடா இது இதை எதற்கு இவர் வாங்கிட்டு போறாரு அங்கிருப்பவங்க கண்டிப்பா நெனச்சிருப்பாங்க. இந்தியாவுக்கு முதன்முதலா ஜப்பான்ல இருந்துதான் மிக்ஸி இறக்குமதி ஆச்சு. நேஷ்னல் அப்படிங்குற நிறுவன மிக்ஸி அது. அதன் பிறகுதான் ப்ரீத்தி, உஷா இதெல்லாம் அறிமுகமாச்சு. அந்த நேஷ்னல் மிக்ஸிதான் எனக்கு சந்தையில கெடச்சது.

கடிகாரங்கள்
கடிகாரங்கள்

இதுமாதிரி கெடைக்கும் அரிய பொருள்களை என்னால முடிஞ்ச அளவுக்கு சரி பண்ணவும், அழகுபடுத்தவும் பார்ப்பேன். இந்த மாதிரி ஒரு வீடு முழுக்க சேர்த்து வெச்சிருக்கேன். இந்தப் பொருள்களைப் பாதுகாப்பதற்காகவே ஒரு வீடு எடுத்திருக்கேன். எங்க வீட்ல பொருள்கள சேர்க்கவே விட மாட்டாங்க. வீடு முழுக்க பொருள்களை நிரப்பினா எப்படின்னு திட்டுவாங்க. ஒரு கட்டத்துல இடம் போதாம என் கலெக்‌ஷன்ஸ் வைப்பதற்காகவே ஒரு வீடு தனியா வாடகைக்கு எடுத்துட்டேன்.

50 -களில் பயன்பாட்டில் இருந்த மாட்டு வண்டிகூட பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன். என் தாத்தா வெச்சிருந்த மாட்டு வண்டி அது. அது இன்னும் நல்ல கண்டிஷன்லதான் இருக்கு. இப்போ கூட அதில் மாடு பூட்டி அழகா ஓட்டலாம்.

Philips radio with Record player
Philips radio with Record player

நம்ம தலைமுறைல சைக்கிள்ல டைனமோ பாத்திருப்போம். ஆனால், அதுக்கு முன்னாடி சைக்கிள்ல வெளிச்சத்துக்காக ரெண்டு பெரிய பேட்டரி போட்டு பயன்படுத்துவாங்க. அதற்கும் முன்னாடி சைக்கிள்ல மண்ணெண்ணெய் ஊத்தி விளக்கு பத்த வைப்பாங்க. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னென்னா முன்னாடிலாம் சைக்கிள்ல ரெண்டு பேர் பயணிக்க கூடாது. அப்புறம் எம்.ஜிஆர்தான் சைக்கிள்ல டபுள்ஸ் போகலாம்னு அனுமதிச்சாரு. அந்தச் செய்தி வெளியான பழைய செய்தித்தாள் என் கலெக்‌ஷன்ஸ்ல இருக்கு. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பின்னாடி ஒரு சுவாரஸ்ய வரலாறு இருக்கும்.

என்னிடம் பழைய கேமராக்கள் ஒரு 50 இருக்கு. யாஷிக்கான்னு ஒரு கேமரா இருக்கு. அதுதான் என்னோட ஃபேவரைட். அப்புறம் சமையலில் பருப்பு, அரிசி உள்ளிட்டவற்றை அளக்க பயன்படுத்தும் படி, பக்கா, மரக்கால், ஆழாக்கு, உழக்கு, நாழி இதெல்லாம் வெச்சிருக்கேன். அந்தக் காலத்துல நெல் சேர்த்து வைக்கும் முதுமக்கள் தாழி, குதில் போன்றவற்றை வெச்சிருக்கேன். திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் வெறும் 10 குதில்தான் இருக்கு. ஆனால், என்கிட்ட 30 இருக்கு.

 உறி
உறி

1920-களில் பயன்படுத்தப்பட்ட ஸ்பூன், டீ அரிப்பு , மத்து போன்றவை வெச்சிருக்கேன். 1700, 1800 -களில் பயன்படுத்தப்பட்ட பானைகள், கடிகாரங்கள் கூட என் கலெக்‌ஷன்களில் இருக்கு. மான் கொம்புகள், கத்தி இதெல்லாம் இருக்கு. அந்தக் காலத்து சமையல் பாத்திரங்கள் பெரும்பாலும் பித்தளையில்தான் இருக்கும். பணியாரம் செய்யும் சட்டி அவ்வளவு கனமா இருக்கும்.

அந்தக் காலத்துல பயன்படுத்தப்பட்ட பொருள்களுக்கும் இந்த காலத்துப் பொருள்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா.. அந்தக் காலத்துப் பொருள்கள்ல அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகள் இருக்கும். ஆனால், இப்போ உள்ள பொருள்கள்ல அழகியல் 0% தான் இருக்கு. அந்தக் காலத்துல உள்ள பொருள்களின் பெயர்கள்கூட இப்போ இருக்கும் தலைமுறையினருக்குத் தெரியல. அதோட அழகியல் பற்றி தெரிந்திருக்க வாய்பில்ல. ஒரு பொது இடத்துல நாலு பேர் இருந்தா அந்த 4 பேருமே மொபைல்தான் பார்த்துட்டு இருக்காங்க. எதுவுமே பேசிக்க மாட்றாங்க.

1980 களில் கிராமத்தில திரை கட்டி படம் போடும் பிரோஜோக்டர்
1980 களில் கிராமத்தில திரை கட்டி படம் போடும் பிரோஜோக்டர்

ஆனால், என் நண்பர்கள்கூட நான் நிறைய உரையாடுவேன். என்னைத் தாண்டி மாட்டு வண்டி போனால்கூட அதைப் பத்தி ஒரு மணி நேரம் பேசும் அளவுக்கு நான் தகவல்கள் சேகரிச்சு வெச்சிருக்கேன். அந்தக் காலத்துப் பொருள்கள் பத்தி தேடத் தேட அவ்வளவு பொக்கிஷங்கள் கிடைக்குது. முன்னாடிலாம் மாட்டு வண்டிகள், குதிரை, ரேடியோ போன்றவற்றுக்கும் கூட லைசென்ஸ் இருந்திருக்கு. இது எத்தனை பேருக்குத் தெரியும். நான் என் தாத்தா பாட்டிகூட உட்கார்ந்து உரையாடும்போது அவங்க சொன்ன தகவல்கள் இவை. அவங்ககிட்ட பேசப் பேச அவ்வளவு விஷயங்கள் சொல்லுவாங்க. ஆனா நமக்குதான் அதற்கெல்லாம் நேரம் இல்ல. என்கிட்ட இருக்க 1,000-த்துக்கும் மேற்பட்ட பொருள்கள்ல கிட்டத்தட்ட 900 பொருள்கள் இப்போ உள்ள சந்ததியினர் கண்டிப்பா பாத்திருக்கமாட்டாங்க.

நமக்கும் நம்ம அப்பா அம்மாவுக்குமே ஒரு இடைவெளி வந்துடுச்சு. மனசுவிட்டு உரையாட நேரமில்லாம இயந்திரமா சுழன்றுட்டு இருக்கோம். அதற்கு உதாரணமா ஒரு சம்பவம் சொல்றேன்... சமீபத்துல ஒரு பழைய பெட்ரோமாஸ் லைட்டு கிடைச்சதுனு வாங்கிட்டு வந்தேன், எந்தப் பழைய பொருள் கிடைச்சாலும் அத முன்னமாதிரி சரி பண்ணிடலாம்னு நானே ரெடி பண்ணி பாப்பேன். அப்படிதான் அந்த லைட்டையும் கொடஞ்சிட்டு இருந்தேன்.

நெல் குலுக்கை, குதிர்
நெல் குலுக்கை, குதிர்

எங்க அய்யா(அப்பா) அத பாத்திட்டே இருந்தாரு. ``என்னப்போ பண்ணுற? பெட்ரோமாஸ் லைட்டு மாதிரி இருக்குனு கேட்டாரு, ஆமாப்பா இப்பதான் பழைய கடையில வாங்கிட்டு வந்தேன். ஒரு சுமால் ரிப்பேர் இருக்கு அத சரி பண்றேன்னு சொன்னேன். எங்க அத கொடுனு சொன்னாரு, ஏம்பா நீ சரி பண்ணப் போறியானு நக்கலுக்கு கேட்டேன். ஒரு லுக்கு விட்டுட்டு அத என்கிட்டயிருந்து புடுங்கி பத்தே நிமிஷத்துல அத திறந்து சரி பண்ணிக் கொடுத்திட்டாரு.

எப்போ எப்டிப்பானு ஆச்சர்யமா கேட்டேன்? எலேய் உங்கப்பன் கலெக்டர் வேல மட்டும்தான் பாக்கல. மீதி எல்லா வேலையும் பாத்திருக்கேன்னு அசால்ட்டா சொல்லிட்டாரு.

வள்ளிநாயகத்தின் பாட்டி..
வள்ளிநாயகத்தின் பாட்டி..

அப்றம்தான் சொன்னாரு. எங்க அப்பா 1970-80 கால கட்டங்கள்ல கல்யாண வீடுகள்ல பெட்ரோமாஸ் லைட்டு தலையில வச்சி தூக்கிட்டுப் போற வேலைக்கெல்லாம் போயிருக்காறாம், அப்ப அதப் பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்காரு. எனக்கே இன்னைக்குதான் தெரியும்.

விளக்குகள்
விளக்குகள்

எங்க அப்பா என்னென்ன வேலையெல்லாம் பாக்கப் போயிருக்காரு, பாத்திருக்காருனு எனக்குத் தெரியும். இந்த பெட்ரோமாஸ் லைட்டு விஷயத்த சொல்லலனு சொல்றதவிட அவர்கிட்ட நாமதான் இன்னும் மனசு விட்டுப் பேசி தெரிஞ்சிக்கலனு மனசு வருத்தப்பட்டுகிட்டேன். இப்படி நம்ம சுத்தி இருக்க பெரியவங்க கிட்ட நமக்குத் தெரியாம நிறைய சுவாரஸ்யங்கள் புதைந்திருக்கு. என் தேடல் அதை நோக்கிதான் இருக்கும். இது என்னோட சந்தோஷத்துக்காக மட்டும் நான் பண்ணல. எனக்கு அடுத்து வரும் சந்ததிக்கு நான் சேர்த்து வைக்கும் விலைமதிப்பற்ற சொத்து இவை’’ என்றார் உற்சாகத்துடன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

MYvikatan
MYvikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு