Published:Updated:

`ஆக்ஷனிலும் பன்ச்; டயலாக்கிலும் பன்ச்'-வீட்டுக்குள் நுழைந்த திருடனை நாக்-அவுட்செய்த 82 வயதுப் பாட்டி

82 வயதுப் பாட்டி வில்லி மர்ஃபி
82 வயதுப் பாட்டி வில்லி மர்ஃபி

82 வயதுப் பாட்டி ஒருவர் வீட்டுக்குள் புகுந்த திருடனை நாக்-அவுட் செய்துவிட, கிரைம் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அந்த சூப்பர் பாட்டியோடு போட்டோ எடுத்துக்கொண்டு சென்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.

``ஐயையோ, திருடன் ஓடுறான், புடிங்க புடிங்க” என்று ஹான்ட்பேக்கை பறிகுடுத்த ஹீரோயின் கத்த, ஹீரோவோ, பொதுமக்களோ அந்தத் திருடனைப் பிடித்து உதைக்கும் சீன்களை காலங்காலமாகத் தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம். நிஜத்தில்கூட ஒரு திருடனை மக்கள் கூட்டமாகச் சேர்ந்துதான் கையும் களவுமாகப் பிடிப்பர். அப்படி அரிதாக யார் உதவி இல்லாமலும் திருடன் ஒருவன் தனியாகப் பிடிபட்டாலும் உதவிக்குக் கண்டிப்பாக யாரேனும் வந்துவிடுவர். இப்படி இருக்கையில், 82 வயதுப் பாட்டி ஒருவர் வீட்டுக்குள் புகுந்த திருடனை நாக்-அவுட் செய்துவிட, கிரைம் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அந்த சூப்பர் பாட்டியோடு போட்டோ எடுத்துக்கொண்டு சென்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.

82 வயதுப் பாட்டி வில்லி மர்ஃபி
82 வயதுப் பாட்டி வில்லி மர்ஃபி

நியூயார்க் அருகே உள்ள ரோசெஸ்டர் நகரைச் சேர்ந்தவர் வில்லி மர்ஃபி. 82 வயதாகிய இவர் அருகிலுள்ள YMCA-யில் வேலை பார்த்து வருகிறார். பாடி-பில்டிங்கில் பதக்கங்கள் பல வென்றுள்ள இவர் இன்றும் நாள் தவறாமல் ஜிம் சென்று இந்த வயதிலும் சுமார் 225 பவுண்ட் எடை வரை தூக்கி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் வியாழன் அன்று இரவு மர்ஃபி படுக்கைக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. கதவைத் திறக்காமல் அவரை யாரென்று விசாரிக்க, ``தனக்கு உடல்நிலை சரியில்லையென்றும், அதனால் ஆம்புலன்ஸை அழைத்து உதவுமாறு அந்தப் பாட்டியிடம் கூறி இருக்கிறார் அந்த நபர். சந்தேகம் அடைந்த மர்ஃபி போலீஸுக்கு கால் செய்திருக்கிறார்.

அவர் போலீஸுக்குப் போன்போட்ட அதே நேரத்தில் அந்த நபர் வீட்டின் கதவைப் பலமாக உடைத்து உள்ளே நுழைந்திருக்கிறார். இதைக் கண்டு சிறிதும் ஷாக் ஆகாத மர்ஃபி அறையின் மங்கலான வெளிச்சத்தில் கைக்கு ஏதேனும் அகப்படுகிறதா என பார்க்க, `லட்டா மேசை ஒன்று சிக்க அதைக்கொண்டு அடி அடி என்று அந்த மேசை உடையும் அளவுக்கு அத்திருடனை அடித்திருக்கிறார். மேலும் உடைந்த மேசையின் இரும்புக் கால்களை மட்டும் எடுத்துக்கொண்டு பலமாக நான்-ஸ்டாப் அடி கொடுத்திருக்கிறார்.

82 வயதுப் பாட்டி வில்லி மர்ஃபி
82 வயதுப் பாட்டி வில்லி மர்ஃபி

இத்தோடு போதும் என விட்டுவிடாமல் அறைக்குள் ஓடிப்போய் அங்கிருந்த ஷாம்பூ பாட்டிலைக் கொண்டு வந்து, அந்த நபரின் முகத்தில் முழுவதுமாக ஊற்றித் தீர்த்து, பக்கத்திலிருந்த துடைப்பத்தை எடுத்து மீண்டும் அடிக்கத் தொடங்கிவிட்டார். நம்மூர் சினிமா போலீஸ்போல லேட் என்ட்ரி கொடுத்து அந்த ஊர் போலீஸ் மர்ஃபி பாட்டியிடமிருந்து அத்திருடனைக் காப்பாற்றி காய்ச்சலுக்கு வரச் சொன்ன ஆம்புலன்ஸை இப்படி பஞ்சர் ஆன உடம்பை தூக்கிக்கொண்டு செல்ல அழைத்திருக்கிறார்கள்.

``தப்பான வீட்ல சரியா நுழைஞ்சி தப்பு பண்ணிட்டான் அந்தத் திருடன், எனக்கு வயசுதான் ஆகுதே தவிர என்னோட பழைய பலம் அப்படியேதான் இருக்கு” என்று வரிசையாக பன்ச் டயலாக்குகளை மர்ஃபி பாட்டி அடுக்க, வாயைப் பிளந்த போலீஸ் அவருடன் ஒரு குரூப் போட்டோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ``தான் செய்த இச்சம்பவத்தைப் பார்த்து `ஒரு செயலைச் செய்ய வயது ஒருபோதும் தடையாக இருக்காது. நம் மனதுதான் முக்கியம்’ என யாரேனும் உணர்ந்தால் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் இந்த 82 வயது நாக்-அவுட் பாட்டி.

அடுத்த கட்டுரைக்கு