Published:Updated:

`ஏசி ஹால், அசத்தும் லைட் செட்டிங், குறைந்த வாடகை'- மதுரையில் கட்டப்பட்டுள்ள அரசு திருமண மண்டபம்!

மூன்று தளங்களுடன் செயல்பட்டு வரும் இந்த மண்டபத்தில் லிப்ட் வசதியும் உள்ளது.

திருமண மண்டபம்
திருமண மண்டபம்

மதுரை அண்ணாநகரில் புதிதாக அரசு சார்பில் அம்மா திருமண மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹவுசிங் போர்டு சார்பில் இதுவரை வீடுகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5 கோடி செலவில் பிரமாண்டமாக திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

திருமண மண்டபம்
திருமண மண்டபம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா திருமண மண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். தரைத்தளத்தில் பார்க்கிங் வசதியுடன் மூன்று தளங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் சுமார் 200 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தளம் வரவேற்பு ஹால் ஏசியுடன் கட்டப்பட்டுள்ளது. கண்களைக் கவரும் லைட் செட்டிங் இரண்டாம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மணப்பெண் மற்றும் மணமகனுக்கென சிறப்பு அறையை அழகு நிறைந்த அமைப்புடனும், மூன்றாம் தளத்தில் விருந்தினர்கள் தங்கும் வகையில் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனி அறைகளும் உள்ளன.

திருமண மண்டபம்
திருமண மண்டபம்

மூன்று தளங்களுடன் செயல்பட்டு வரும் இந்த மண்டபத்தில் லிப்ட் வசதியும் உள்ளது. மேலும் மின்சாரம் தடைபடும் நேரங்களில் பயன்படுத்த ஜெனரேட்டர் வசதியும் உள்ளது. மண்டபத்தைச் சுற்றிலும் உட்புறத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஹவுசிங் போர்டு அதிகாரி பாலமுருகன் பேசிய போது, ``மூன்று தளங்களுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த அம்மா திருமண மண்டபம் இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முயற்சி எளிய மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக அமையும். மற்ற மண்டபங்களை ஒப்பிடும்போது அம்மா ஏசி திருமண மண்டபம் குறைந்த வாடகைக்கு விடப்படும்.

திருமண மண்டபம்
திருமண மண்டபம்

பொதுவாகக் கல்யாண செலவில் பெரும்பங்கு மண்டப வாடகைக்கு உள்ளது. இந்நிலையில் இந்த மண்டபத்தால் சாதாரண மக்கள் கண்டிப்பாகப் பயன்பெறுவார்கள்" என்றார்.

குறைந்த வாடகையில் ஏசி மண்டபம் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக எளிய மக்களுக்கு மிகவும் பயன்தரக் கூடியதாக இம்மண்டபம் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.