Published:Updated:

``விபத்துல கைபோன பிறகுதான் வாழ்க்கை தொடங்குச்சு!" - கிருஷ்ணமூர்த்தியின் வெற்றிக்கதை

24 வயதில் ஒரு விபத்தில் ஒரு கை துண்டாக, விரக்தியில் முடங்கினார். ஆனால், விளையாட்டு அந்த இளைஞனின் வாழ்க்கையில் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்ச, துள்ளி எழுந்து பந்தயக் களத்தில் ஓடத் தொடங்கினார்.

நள்ளிரவில் நடந்த ஒரு விபத்து கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞனின் வாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது ஆச்சர்ய மாற்றம். 24 வயதில் ஒரு விபத்தில் ஒரு கை துண்டாக, விரக்தியில் முடங்கினார். ஆனால், விளையாட்டு வெளிச்சத்தைப் பாய்ச்ச, துள்ளி எழுந்து பந்தயக் களத்தில் ஓடத் தொடங்கினார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக எனர்ஜி குறையாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இவர் வசப்படுத்திய வெற்றிகள், பதக்கங்கள் இவரின் புகழை சர்வதேச அளவில் அடையாளப்படுத்துகின்றன. மகிழ்ச்சி ததும்பப் பேசுபவரின் வார்த்தைகளில் நம்பிக்கை சுடர்விடுகின்றன.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

``பூர்வீகம் விழுப்புரம் மாவட்டம். ஏழ்மையான குடும்பம்தான். படிப்பில் நாட்டமில்லை. பத்தாவது ஃபெயில். பிறகு, வொர்க் ஷாப்ல மெக்கானிக் வேலை. கூடவே, சரக்கு லாரி, பிரைவேட் பஸ் டிரைவராகவும் இருந்தேன். அப்போ எனக்கு 24 வயசு இருக்கும். ஒருமுறை நெல் மூட்டைகளை ஏத்திக்கிட்டு திருச்சி சமயபுரம் பக்கத்துல போயிட்டிருந்தேன். இரவு 12.30 மணிவாக்குல கும்மிருட்டு. எதிரில் ஒரு மாட்டு வண்டி வரவே, லாரியின் முன்புற லைட் வெளிச்சத்துல மாடு மிரண்டுருச்சு. அதனால, லாரியை வலது புறத்துல திருப்பினேன். நிலைதடுமாறி அப்படியே கவுந்திடுச்சு.

சுதாரிச்சு லாரியில இருந்து குதிச்சேன். ஆனா, எதிர்பாராம என் இடது கை, லாரியின் அடியில மாட்டிக்கிட்டு துண்டாகிடுச்சு. அதிகமான ரத்தப்போக்குல உடனே மயங்கிட்டேன். பக்கத்துல செக் போஸ்டுல இருந்த போலீஸ்காரங்க என்னை மீட்டு கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. சில தினங்களுக்குப் பிறகுதான் எனக்கு ஒரு கை இல்லைங்கிறதை உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் துடிச்சேன்.

அதே ஆஸ்பத்திரியில பலரும் கை, கால் இல்லாம என்னைவிடவும் மோசமான நிலையில் இருந்தாங்க. அவங்களைப் பார்த்து என்னைச் சமாதானப்படுத்திகிட்டேன்” - கை போன வருத்தத்தைப் புறந்தள்ளிவிட்டு புதிய வாழ்க்கை முறைக்கு ஆயத்தமான கிருஷ்ணமூர்த்திக்கு விளையாட்டுதான் மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொடுத்திருக்கின்றன.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

``மறுபடியும் மெக்கானிக் ஷாப்லயே வேலை செஞ்சேன். எங்க ஊர்லயே நான் மட்டும்தான் மாற்றுத்திறனாளி. அதனால யாராச்சும் கிண்டல் பண்ணுவாங்களோன்னு வருத்தப்பட்டு, விடியற்காலையிலயே வேலைக்குப் போய் சாமத்துலதான் வீட்டுக்கு வருவேன். ஒருகட்டத்துல எல்லோரும் அனுதாபமோ கிண்டலோ இல்லாம, என்மேல அதிக அன்பு செலுத்தினாங்க. செயற்கை கை வைக்க முயற்சி செய்தேன். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ஒருகட்டத்துல சென்னை கே.கே.நகர்ல இருக்கும் அரசுப் புனர்வாழ்வு ஆஸ்பத்திரியில சேர்ந்தேன். பலரும் ஊக்கம் கொடுக்கவே, அங்கு சிகிச்சையில் இருந்தபடியே ஓய்வுநேரத்துல பத்தாவதுல ஃபெயிலான ரெண்டு பாடங்களையும் படிச்சேன். அந்த மையத்துக்குப் பயிற்சிக்காக வரும் மாணவர்கள் பலரும் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தாங்க. ரெண்டு பாடத்துலயும் பாஸ் ஆனேன். செயற்கை கையும் பொருத்தப்பட்டுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தத் தருணத்துல மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்ல, அந்த மையத்துல சிகிச்சை பெற்ற பலரும் கலந்துப்பாங்க. விளையாட்டில் முன் அனுபவம் இல்லாத நானும் கலந்துகிட்டேன். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், சைக்கிளிங்னு மாநில அளவிலான போட்டியில மூணு தங்கப்பதக்கம் வாங்கினேன். அங்கு வேலை செய்து வந்த சரோஜினிங்கிற மேடம் எனக்கு ரொம்பவே உதவினாங்க. அந்த மையத்துலயே 1987-ல் எனக்குத் தற்காலிகமா பியூன் வேலை கிடைச்சுது. நல்லபடியா வேலை செஞ்சேன். அப்போ எனக்கும் என் அத்தை மகள் குமாரிக்கும் கல்யாணமாச்சு” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், தொடர்ந்து மாநில, தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஜெயலலிதாவுடன் கிருஷ்ணமூர்த்தி
ஜெயலலிதாவுடன் கிருஷ்ணமூர்த்தி
காலங்கள் ஓடி, பணியிடம் மாறினாலும், `ஆட்ட நாயகன்’ கிருஷ்ணமூர்த்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக எனர்ஜி குறையாமல் விளையாட்டுத்துறையில் வெற்றிகளை வசப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இதுவரை தேசிய அளவில் 87 தங்கம், 64 வெள்ளி, 32 வெண்கலம், சர்வதேச அளவில் 28 தங்கம், 18 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் வீட்டின் வரவேற்பறையில் கிருஷ்ணமூர்த்தியின் விளையாட்டுத் திறனைப் பறைசாற்றுகின்றன.

``1996-ல் நியூசிலாந்தில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆகிய நாலு போட்டிகளில் தங்கம் வாங்கினேன். பிறகு, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி உட்பட இதுவரை ஏராளமான நாடுகளுக்குச் சென்று விளையாடியிருக்கேன். தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை வாங்கினேன். ஒரே விளையாட்டுனு இல்லாம, பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், வட்டெறிதல் (discus throw) உட்பட 12 போட்டிகளில் என் திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்றிருக்கேன். தமிழக முதல்வர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருக்காங்க. அவங்களைச் சந்திச்சப்போல்லாம், `விளையாட்டுதான் உங்க வாழ்க்கையையே மாத்தியிருக்கு. என்ன வேலை செய்தாலும் விளையாட்டை விட்டுடுடாதீங்க'ன்னு எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க.

கருணாநிதியுடன் கிருஷ்ணமூர்த்தி
கருணாநிதியுடன் கிருஷ்ணமூர்த்தி

பல விளையாட்டுகளில் வெற்றிகளைக் குவிச்ச நிலையில், இப்போ டென்-பின் பெளலிங் கேம்ல (ten pin bowling) கவனம் செலுத்தறேன். இந்த விளையாட்டு கடினமானது, பயிற்சி பெறவும் அதிக செலவாகும். இருந்தாலும், இந்த விளையாட்டில் சிரமப்பட்டு கவனம் செலுத்தறேன். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்ல பலமுறை பங்குபெற்றிருக்கேன். ஆனா, பாரா ஒலிம்பிக் போட்டிதான் என் நீண்ட கால கனவு.

டென்-பின் பெளலிங்ல விளையாட்டுப் பிரிவில், பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து நான் மட்டுமே தகுதி பெற்றிருக்கேன். இந்த வருஷம் ஜப்பான் டோக்கியோவுல நடக்க இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள், கொரோனாவால் அடுத்த வருஷத்துக்கு தள்ளிப்போடப்பட்டிருக்கு. அடுத்த வருஷம் அந்தப் போட்டியில் கலந்துகிட்டு நிச்சயம் தங்கம் வாங்கும் முனைப்பில் இருக்கேன். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் பலரும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வாங்கணும். அதுக்காக, பாரா ஒலிம்பிக் கமிட்டியை தமிழ்நாட்டில் நடத்தி, திறமையான வீரர்களை ஊக்கப்படுத்தி பயிற்சி அளிக்கிறோம். நான் அதன் செயலாளராக இருக்கேன்” - புன்னகையுடன் கூறும் கிருஷ்ணமூர்த்தி, நடிகராக மற்றொரு அவதாரம் எடுத்தது வித்தியாசப் பரிமாணம்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

``நண்பர் ஒருத்தர் மூலமா, `காதல்’ படத்துல சந்தியாவின் சித்தப்பா ரோல்ல நடிக்க எதேச்சையா வாய்ப்பு கிடைச்சுது. `எனக்கு சினிமாவைப் பத்தி எதுவுமே தெரியாது’ன்னு சொன்னேன். `எனக்கும் அதுதான் வேணும்’னு இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார் சொன்னார். பயிற்சி கொடுத்தார். `காதல்’ தண்டபாணியின் தம்பியா நடிச்சேன். படம் பெரிய ஹிட்டாகி, அதில் சின்ன ரோல்ல நடிச்ச எனக்கும் பாராட்டுகள் கிடைச்சுது. பிறகு, திலீப் ஹீரோவா நடிச்ச `கல்கத்தா நியூஸ்' மலையாளப் படத்துல மெயின் வில்லனா நடிச்சேன். பெரிய புகழ் கிடைச்சுது. அப்புறம் தெலுங்கு, கன்னடம் உட்பட இதுவரை 14 படங்கள்ல நடிச்சுட்டேன். இப்ப சினிமா வாய்ப்புகள் வர்றதில்லை.

இந்த நிலையில பல இடங்கள்ல பணி மாறிட்டேன். இப்ப சென்னையிலுள்ள `நிப்மெட்' மையத்துல `பியூன் கம் மெசஞ்ச’ராக வேலை செய்றேன். எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. நானும் என் மனைவியும்தான் படிக்கலை. அதனால, பிள்ளைகளைச் சிரமப்பட்டு படிக்க வெச்சேன். மரைன் இன்ஜினீயரான பெரிய பையன் வெளிநாட்டில் வேலை செய்றான். அவன்தான் எங்க பரம்பரையிலயே முதல் தலைமுறை பட்டதாரி. சின்ன பையன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரா வேலை செய்றான். பிள்ளைங்க படிச்சதுக்குப் பிறகுதான், எங்க வாழ்க்கையே மதிப்புடன் முழுமையடைஞ்சிருக்கு. பேரக் குழந்தைளையும் பார்த்தாச்சு.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

அந்த விபத்துக்குப் பிறகு நான் கடந்து வந்த பாதை ரொம்பவே கரடு முரடானது. அதில் சில நல்ல உள்ளங்கள் கொடுத்த ஊக்கமும், வெற்றி பெறணும்ங்கிற என் விடா முயற்சியாலும் எனக்கான அடையாளம் கிடைச்சிருக்கு. வாழ்க்கை நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறியிருக்கு. என் உடல் ஒத்துழைக்கும்வரை ஸ்போர்ட்ஸ்ல கவனம் செலுத்துவேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு