Published:Updated:

விகடன் பைட்ஸ்: ரஜினி Vs பெர்னி, தேயும் தே.மு.தி.க., ஜி.கே.வாசன் கொந்தளிப்பு!

விகடன் பைட்ஸ்
விகடன் பைட்ஸ்

கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி, குடும்ப ஆதிக்கத்துக்குள் சிக்கியது. எந்தக் குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்குவதாக அறிவித்தாரோ, அதே ஆதிக்கம் தன் மனைவி, மைத்துனர் மூலம் தன் கட்சியில் உண்டானபோது கண்டுகொள்ளாமலிருந்தார்

''அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் இப்போது நடக்காவிட்டால் எப்போதும் நடக்காது'' என்று முழக்கம் செய்திருக்கும் ரஜினிகாந்த், ''மக்கள் எழுச்சி வெடிக்க வேண்டும். அதை எல்லோரும் செய்ய வேண்டும். எழுச்சி உருவானால் நான் வருகிறேன்'' என்றும் சொல்லியிருக்கிறார்.

மக்களே ஓர் எழுச்சியை உருவாக்கிவிட்டு, அதன் பிறகு ஒரு தலைவரை எதிர்பார்த்துக் காத்திருப்பது ஜனநாயக நாடுகளில் இதுவரை நிகழ்ந்ததில்லை. தலைமை இல்லாமல் நிகழ்ந்த எழுச்சிகளாக 'அரபு வசந்தம்' என்ற பெயரில் வளைகுடா நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த போராட்டங்களைச் சொல்லலாம். ஆனால், அந்தப் போராட்டங்களுக்குக்கூட மேற்கத்திய நாடுகளின் ஆதரவும், சொந்த நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் பக்கபலமும் தேவைப்பட்டன. நம் ஊரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் தலைவர் என யாரும் கிடையாது. ஆனால், அது மேன்மையான ஓர் இலக்குடன் நிகழ்ந்த போராட்டம் என்பதால், அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் இருந்ததால், அது தலைமை இல்லாமலேயே வெற்றி பெற்றது.

விகடன் பைட்ஸ்: ரஜினி Vs பெர்னி, தேயும் தே.மு.தி.க., ஜி.கே.வாசன் கொந்தளிப்பு!

ஆனால், 'சிஸ்டத்தை மாற்றுவது' என்பது அப்படிப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகத் தொடரும் ஒரு நடைமுறையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் விஷயம். கையில் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வைத்திருக்கும் அத்தனை பேரையும் எதிர்த்துச் செய்ய வேண்டிய விஷயம். எளிய மக்கள் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதற்கு ஒரு தலைவர் வேண்டும்.

'கெட்டுப்போன சிஸ்டத்தை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்' என்பதை நம் கண்முன்னே ஒருவர் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். உலகத்தின் மிக வல்லமை வாய்ந்த ஒரு சிஸ்டத்தை அவர் எதிர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் பெயர், பெர்னி சாண்டர்ஸ். அமெரிக்காவில் இந்த முறை குடியரசுக் கட்சி சார்பில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் யார் போட்டியிடுவது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இப்போது உக்கிரமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனுடன் இந்தப் போட்டியில் மோதுகிறவர்தான் பெர்னி சாண்டர்ஸ்.

பெர்னி சாண்டர்ஸ்
பெர்னி சாண்டர்ஸ்

ரஜினியைப்போலவே 'இப்போது விட்டால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைக்கிற இளைஞர் இல்லை அவர். வயது 78. உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள். கடந்த அக்டோபரில் திடீர் மாரடைப்பு வந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். என்றாலும், 'அமெரிக்காவின் அரசியலை மாற்றுவது, அதன் மூலம் உலக அரசியலை மாற்றுவது' என்ற நோக்கத்துடன் அவர் இயங்கிவருகிறார். அவருக்கு சினிமா மூலம் கிடைத்த புகழோ, பெரும் ரசிகர் ஆதரவோ இல்லையென்றாலும், சிஸ்டத்தை மாற்றுவதற்காக அவர் முன்வைத்த யோசனைகளால் மட்டுமே அவர் புகழடைந்திருக்கிறார்...

- முழுமையான கட்டுரையை வாசிக்க > இன்னொருவர் ஏற்படுத்துவதா எழுச்சி? https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-rajinikanth-political-ideology-av-march-25-2020

தே.மு.தி.க-வின் தேய்பிறைக்காலம்!

போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8.45 சதவிகித வாக்குகள் பெற்று இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும், அதுவரை வட மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருந்த பா.ம.க-வுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கட்சி தே.மு.தி.க...

கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சி, குடும்ப ஆதிக்கத்துக்குள் சிக்கியது. எந்தக் குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்குவதாக அறிவித்தாரோ, அதே ஆதிக்கம் தன் மனைவி, மைத்துனர் மூலம் தன் கட்சியில் உண்டானபோது கண்டுகொள்ளாமலிருந்தார் விஜயகாந்த்.

தேரை இழுத்துத் தெருவில்விட்ட சம்பவமாக, மிச்சம் மீதமிருந்த தே.மு.தி.க-வின் இமேஜ் உடைந்தது 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான்.

விகடன் பைட்ஸ்: ரஜினி Vs பெர்னி, தேயும் தே.மு.தி.க., ஜி.கே.வாசன் கொந்தளிப்பு!

ஆரம்பத்தில் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் அங்கம் வகிக்காத பிரேமலதா, கட்சியின் பொருளாளர் ஆன பிறகு அவரது சர்வாதிகாரப் போக்கு அதிகரித்தது. 2019 தேர்தலையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பில், 'நீ, வா, போ...' என ஒருமையில் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டது ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சந்தித்தது. நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், ''கூட்டணிக்காக எல்லோரும் மறைமுகமாக எங்கள் காலில் விழுகிறார்கள்'' என சிறுபிள்ளைத்தனமாகப் பேசியது, ஜனநாயகத்தின் படுவீழ்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் தே.மு.தி.க ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி பேரம் பேசி எத்தனை சீட்டுகளை வேண்டுமானால் வாங்கலாம். ஆனால், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த புதிதில் களத்தில் இறங்கி வேலை செய்த மன்ற நிர்வாகிகளில், தொண்டர்களில் பலர் எப்போதோ கூடாரத்தைக் காலிசெய்துவிட்டு மாற்றுக் கட்சிகளுக்குப் போய்விட்டார்கள். அப்படியே தேடிப்பிடித்து யாரையாவது வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை நம்பி வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை.

- முழுமையான சிறப்புக் கட்டுரையை வாசிக்க > தே.மு.தி.க-வின் தேய்பிறைக்காலம்! https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-vijayakanth-and-dmdk-party-downfall

"பா.ஜ.க-வைச் சம்பந்தப்படுத்தி இழுத்துப் பேசுவது தப்பு!" - ஜி.கே.வாசன்

"அ.தி.மு.க சார்பில், நீங்கள் எம்.பி வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகச் சொல்கிறார்களே?''

"105-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட அ.தி.மு.க-வுக்கு மூன்று எம்.பி-களைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த வகையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆட்சி மன்றக்குழுவினர் யாரை வேண்டுமானாலும் எம்.பி-யாகத் தேர்வு செய்யலாம். முறையாக அ.தி.மு.க தலைமையை அணுகி, 'த.மா.கா-வுக்கு ஒரு எம்.பி பதவி வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துதான் பதவியைப் பெற்றிருக்கிறோம். இதில், பா.ஜ.க-வைச் சம்பந்தப்படுத்தி இழுத்துப் பேசுவது தப்பு!''

விகடன் பைட்ஸ்: ரஜினி Vs பெர்னி, தேயும் தே.மு.தி.க., ஜி.கே.வாசன் கொந்தளிப்பு!

'' 'பா.ஜ.க சிபாரிசினால் எனக்கு எம்.பி பதவி கிடைக்கவில்லை' என்று மறுக்கிறீர்களா?''

''எதற்குத் தேவையில்லாத அந்த முடிச்சைப் போடுகிறீர்கள்? தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எம்.எல்.ஏ-க்களே இல்லாதபோது, அவர்கள் எப்படி எம்.பி ஆக்க முடியும்? எதற்காக ஆக்க வேண்டும்? இங்கே அவர்கள் வளர்ந்துவருகிற கட்சியாக இருக்கும்போது, அவர்கள் கட்சியைச் சார்ந்த ஒருவரை நியமிக்காமல், என்னை ஏன் எம்.பி ஆக்க வேண்டும், அதற்கு என்ன அவசியம்? அவர்களது கட்சியினரே கேட்க மாட்டார்களா?''

''விரைவில் த.மா.கா-வை பா.ஜ.க-வோடு இணைக்கவிருப்பதாகப் பேச்சிருக்கிறதே... உண்மையா?''

"இப்படியொரு வடிகட்டிய பொய்யைச் சொல்வீர்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இருந்தாலும் பதில் சொல்லிவிடுகிறேன். த.மா.கா-வின் வளர்ச்சியைப் பிடிக்காத சில விஷக் கிருமிகள்தான் இப்படியான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற அவதூறுகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அவர்களை எச்சரிக்கிறேன். அடையாளம் கண்டு வழக்கு தொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள்.''

- ஆனந்த விகடன் இதழுக்கு ஜி.கே.வாசன் அளித்த நேர்காணலை முழுமையாக வாசிக்க > "மதவாதமும் தப்பு; மதச்சார்பின்மையும் தப்பு!" https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-g-k-vasan

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு