Published:Updated:

"குடும்பமா சேர்ந்து நாங்க பஞ்சர் ஒட்டுறது எம் புள்ளைய காப்பாத்ததான்"- அஞ்சுகம் பஞ்சர் கடையின் கதை!

தேவசங்கரி
News
தேவசங்கரி

எல்லாரும் எனக்கு எதாவது ஆகிடுமோனு பயப்புடுவாங்க. ஆனா எனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குறதையே யார்க்கிட்டையும் சொல்லமாட்டேன்" என்றபோது தேவசங்கரி குரல் கணக்கத் தொடங்கியது

" 'ஏற்கெனவே உனக்கு ஒரு பொம்பளப் புள்ள இருக்குன்னு சொல்லுற! இந்தப் புள்ளை தேறாது கண்ணா! வச்சிக்கிட்டு ஏன் கஷ்டப்படுற? ரெண்டு நாள்ல வயிறு உப்பி அதுவே செத்துபோய்டும்னு ஆஸ்பத்திரியில இருக்குறவங்க எங்க அப்பாகிட்ட சொன்னாங்க. 'நீ யாரு என் புள்ளை பொழைக்காதுன்னு சொல்றதுக்கு, நான் என் புள்ளைய நடக்க வெச்சுக் காட்டுறேன் பாரு'னு அவங்ககிட்ட சவால் விட்டுவிட்டு வந்தாங்க, எங்க அப்பா. அதே மாதிரி என்ன நடக்கவும் வச்சிட்டாரு. எங்க அப்பாதான் எனக்கு ஹீரோ...'' கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே பேசினார் 'அஞ்சுகம் பஞ்சர் கடை' தேவசங்கரி.

திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் அருகே ஓடம்போக்கி ஆற்றோரம் அமைந்திருக்கிறது 'அஞ்சுகம் பஞ்சர் கடை'. ''இது எங்க அப்பாவோட கடை. எனக்கு 20 வயசாகுது. சைக்கிள்ல பஞ்சர் ஒட்டுறது, சர்வீஸ் பண்ணுறதுன்னு எல்லா வேலையும் செய்வேன். ஒரு பொண்ணா சைக்கிள் வேலையெல்லாம் பார்க்கறது எனக்கு கூச்சமாலாம் இருக்காது. எங்க அப்பாதான் இந்த வேலையெல்லாம் எனக்குக் கத்துக் குடுத்தாங்க. நானும், எங்க அப்பாவும் சேர்ந்துதான் இந்த வேலையெல்லாம் பாப்போம். சில நேரத்துல நான், எங்க அம்மா, என் தங்கச்சி வரைக்கும் எல்லாருமே எங்க சைக்கிள் கடையில வேலை பாப்போம். ஸ்கூல்ல சுமாரா படிப்பேன். பிளஸ் டூல 600 க்கு 435 மார்க் எடுத்தேன். எனக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். ஆனா ஹார்ட் ஆபரேஷன் பண்ணி இருக்கேன்னு என்னை ஸ்போர்ட்ஸ்ல சேத்துக்க மாட்டாங்க. நானும் மத்தவங்க மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுவேன். ஆனா அப்படி இருக்க முடியாது.

அஞ்சுகம் பஞ்சர் கடை
அஞ்சுகம் பஞ்சர் கடை

எல்லாரும் எனக்கு எதாவது ஆகிடுமோனு பயப்புடுவாங்க. ஆனா எனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குறதையே யார்கிட்டயும் சொல்லமாட்டேன்" என்றபோது தேவசங்கரியின் குரல் கணக்கத் தொடங்கியது.

''நான் மூணாவது படிக்கும்போது, எனக்கு ஹார்ட்ல ஓட்டை இருக்கிறது தெரியவந்தது. எங்க அப்பாவும் அம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டு அதை சரி பண்ணி என்னைக் காப்பாத்துனாங்க. ஒரு வருஷம் கழிச்சு ஒரு கிட்னியும் ஃபெயிலியர் ஆயிடுச்சு. இப்பவரைக்கும் ஒரு கிட்னியோடதான் நான் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன். சின்ன வயசுல எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் நிறைய கஷ்டத்தைக் கொடுத்துட்டேன். அதுவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இந்த நேரத்துல போய் 'நான் காலேஜ் போகணும். என்னைப் படிக்க வைங்க' அப்படின்னு எங்க அப்பாகிட்ட என்னால கேக்க முடியல. அதான், நான் காலேஜ் படிக்கல. ஆனா எங்க கடைக்கு கொஞ்ச தூரத்துல தான் கவர்மென்ட் காலேஜ் இருக்கு. ஒரு வாரமாவது காலேஜ் வாழ்க்கை எப்பிடி இருக்கும்னு பாக்கணும். அதுதான் என்னோட ஆசை" என்றார் ஏக்கமாக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மகளின் உடல்நிலையை சரி செய்யவும் முடியாமல், அவரது ஆசையையும் நிறைவேற்ற முடியாமல் கையறு நிலையிலிருந்த கண்ணனிடம் பேசினோம், " எனக்கு மொத்தம் 4 குழந்தைகங்க. பாப்பபாவுக்கு உடம்பு சரியில்லாம போனதும், 'ஏற்கெனவே உனக்கு ஒரு பொம்பளப் புள்ள இருக்குன்னு சொல்லுற! இந்தப் புள்ளை தேறாது கண்ணா! வச்சிக்கிட்டு ஏன் கஷ்டப்படுற? ரெண்டு நாள்ல வயிறு உப்பி அதுவே செத்துப்போய்டும்'னு சொன்னாங்க. ஆனா, நான் விடல. எப்படியாவது என் புள்ளையக் காப்பாத்தணும்னு மாடா உழைச்சேன்.

நானும் என் மனைவியும் வேற வேற சாதி. சொந்தக்காரங்களை எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுனால சொந்தங்களோட ஆதரவும் கிடையாது. நிராதரவா இருந்தாலும், மகளைக் கைவிடல. மொதல்ல ஹார்ட்ல இருக்குற ஓட்டைய சரி பண்ணேன். அடுத்த வருஷமே அவளுக்கு இடது பக்க கிட்னி பிரச்னை ஏற்பட்டது. அப்புறம், அதையும் ஒரு வழியா சரி பண்ணி, ஸ்கூல் வரைக்கும் படிக்க வச்சிட்டேன். இப்போ என் கண்ணு முன்னாடியே என் பொண்ணு நல்லபடியா வளந்து நிக்கிறா. என் பொண்ணு படிக்கணும்னுதான் எனக்கும் ஆசை.ஆனா அடிக்கடி நெஞ்சு வலி வந்துருது அவளுக்கு. அதை சரி பண்ணணும். ஸ்கேன் எடுக்கவே வழியில்லாத அளவுக்கு என் தொழிலோட நிலைமை இருக்கு. வேற வேலையும் எங்களுக்குத் தெரியாது. குடும்பமா சேர்ந்து நாங்க உழைக்கிறது எம் புள்ளைய காப்பாத்ததான். அந்த சாமிதான் ஒரு வழியைக் காட்டணும்" என கடையிலிருந்த சிறுதெய்வத்தின் படத்தைக் கும்பிடும்போது, அவரையும் மீறி அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டது.

''எல்லாம் சரியாகிடும்பா'' எனத் தன் தந்தையின் தோள் சாய்ந்து ஆறுதல் சொல்லி சிரித்தார் தேவசங்கரி. அந்த சிரிப்பில் கலந்திருக்கும் வலி, நம்மை என்னவோ செய்கிறது.