Published:Updated:

``மாணவர்களுக்காகத்தான் இந்த தேடல்" - ஆச்சர்யப்படுத்தும் `தூத்துக்குடி அப்துல்கலாம்'!

தனி மனிதர்களின் கலை ஆர்வத்தையும் தாண்டி மத்திய, மாநில அரசுகளும் தொல்லியல் களங்கள் அமைத்து பொக்கிஷ பொருள்களை அருங்காட்சியகத்தில் மக்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறது.

ஒரு பொருள் எவ்வளவு பழைமை வாய்ந்ததோ அப்பொருளின் பின்னணியில் உள்ள வரலாறு அவ்வளவு ஆழமானதாக இருக்கும். பழமையைத் தேடத் தேட வரலாறுகளை தேடிப் படிக்கின்ற ஆர்வமும் ஊற்றெடுக்கும். அதன் மூலம் நமக்கு முன்னால் வாழ்ந்த சந்ததியினர், அவர்தம் வாழ்வு மட்டுமின்றி, பலவும் நம்மால் அறிய முடியும். இன்றைய தேதியிலும் பழைமைக்கு முக்கியத்துவம் தந்து பழங்கால பொருள்களை சேமித்து வைக்கும் ஆர்வம் உடைய எண்ணற்றோரை நாம் பார்க்க முடியும்.

பழம் பொருட்கள்
பழம் பொருட்கள்

அஞ்சல்தலையில் ஆரம்பித்து சங்ககால இலக்கியங்கள், பொற்காசுகள், நெல்மணிகள், வாழ்விடக் கருவிகள், ஆயுதங்கள், முன்னோர் பயன்படுத்திய பொருட்கள், ஓலைச்சுவடிகள், இசைக்கருவிகள், ஒலிநாடாக்கள், மதிப்பிழப்பு செய்யப்பட்ட காசுகள், மன்னர் கால பொருட்கள் என அனைத்தும் இன்று அரிதினும் அரிதான பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தனி மனிதர்களின் கலை ஆர்வத்தையும் தாண்டி மத்திய, மாநில அரசுகளும் தொல்லியல் களங்கள் அமைத்து பொக்கிஷ பொருள்களை அருங்காட்சியகத்தில் மக்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறது. இப்படியாக, தளர்வு வயதிலும் கலை ஆர்வத்தில் தன்னிறைவு காணாத ஒருவர்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் குப்புசாமி. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீது கொண்ட அளவுகடந்த பற்றின் காரணமாக அவரைப் போலவே சிகை அலங்காரம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் குப்புசாமி வாத்தியாரை ’தூத்துக்குடியின் அப்துல்கலாம்’ எனவும் அழைக்கப்படுகிறார்.

பழம் பொருட்கள்
பழம் பொருட்கள்

ஆசிரியர் என்பதைத் தாண்டி இவரை இன்று பல்வேறு ஊரில் உள்ள தன்னார்வலர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் சிறப்பு விருந்தினராக அழைத்து வருகின்றனர். அதற்குக் காரணம் குப்புசாமி வாத்தியாரின் கலை ஆர்வம்தான். குப்புசாமி வாத்தியாரிடம் கல்வி பயின்ற பள்ளி மாணவர்கள் யாரும் வரலாற்று பாடத்தில் தோல்வி அடைந்தது கிடையாது எனத் தூத்துக்குடியில் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் கடின உழைப்புதான் இந்தப் பெயருக்க்கு காரணம். காரணத்திற்கான விடை தேடுகையில்தான் அவரது வீட்டில் கொட்டிக் கிடக்கிறது அந்தப் பொக்கிஷங்கள். பள்ளி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே மாணவர்களுக்கு வரலாறு பற்றிய உண்மைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக பழங்கால பொருட்களை தேட ஆரம்பித்திருக்கிறார்.

கிராம போன்
கிராம போன்

அப்படி தேடி கிடைத்த பொருள்களை கொண்டு வந்து பள்ளி மாணவர்களின் கண் முன்னே வைத்து பாடங்களை விளக்கியும் சொல்லியிருக்கிறார். இப்படி மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்ததன் காரணமாகத்தான் இன்றளவிலும் குப்புசாமி வாத்தியாரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் வரலாறு பாடத்தில் மட்டும் மிக அதிக மதிப்பெண்களை பெற்று வரலாறு சார்ந்த அறிவு புலமையோடு உள்ளனர்.

இதற்கெல்லாம் காரணகர்த்தாவான குப்புசாமி வாத்தியாரிடம் பழங்கால பொருட்கள் சேகரிப்பின் மீதான ஆர்வம் குறித்துப் பேசினோம், ”ஆரம்பத்துல பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும்போது வரலாறு சார்ந்த உண்மையை விளக்க வேண்டும் என்பதற்காகத்தான் பழங்கால பொருட்களைத் தேட ஆரம்பிச்சேன். அப்படி தேடிச்சென்று நான் சேர்த்த பொருட்கள்தான் இவை. என்னிடம் கி-மு, கி-பி காலம் முதல் தற்போது வரையில் எல்லா விதமான பழங்காலப் பொருட்களையும் சேமித்து வச்சிருக்கேன். இவற்றை 1967-ம் ஆண்டு முதலே சேகரிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு பொருளை தேடிச் செல்கையில் அப்பொருளைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்து வச்சுக்கிட்டுதான் போவேன்.

தபால் தலைகள் குறித்து விளக்கும் குப்புசாமி
தபால் தலைகள் குறித்து விளக்கும் குப்புசாமி

உரிய இடத்திற்குச் சென்ற பின்பு அந்தப் பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகும் அதைப் பற்றி பல வரலாற்று ஆய்வாளர்களிடம் விசாரித்த பிறகுதான் பொருட்களைச் சேகரிப்பேன். என்னிடம் உள்ள அனைத்து பொருள்களும் தற்போதும் செயல்படும் வகையில் பராமரிச்சுட்டு வற்றேன்‌. கிராமபோன், ஒலிநாடா போன்றவை போன்றவற்றில் இப்போதும் நான் இசைகளைக் கேட்பதுண்டு. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவம் உண்டு, தனி வரலாறும் உண்டு.

மனிதனின் அறிவுக்கு எட்டாத பல விஷயங்களை வரலாறே நமக்கு உணர்த்தியுள்ளது. ஒருமுறை நான் ஓலைச்சுவடிகளைத் தேடிச் செல்கையில், வயசான பாட்டி ஒருத்தர் வீட்டுல அடுப்பு எரிப்பதற்காக ஓலைச்சுவடிகளை பயன்படுத்திக் கொண்டு இருந்தார். அவரிடம் சென்று அந்த ஓலைச்சுவடிகளை எனக்குத் தருமாறு கேட்டேன். ”இதை எரிச்சுதான் இன்னைக்கு சோறு வடிச்சுச் சாப்பிடணும்யா’’ன்னு சொன்னார்.

பழம் பொருட்கள்
பழம் பொருட்கள்

உடனே அந்தப் பாட்டிக்குத் தேவையான பணத்தை கையில கொடுத்துட்டு ஓலைச்சுவடிகளை வாங்கிட்டு வந்தேன். இப்படி அலட்சியமாக தூக்கி எறியப்பட்ட பொருட்கள், பயன் தெரிமால் மூலையில் போடப்பட்ட பொருட்கள்தான் எனக்குக் கிடைச்சிருக்கு. சில பொருட்களை பழைய இரும்பு கடையில் இருந்தும் வாங்கி இருக்கேன். அவை அனைத்தும் எனது கலை ஆர்வத்திற்கு நன்கு தீனி போட்டன.

இப்படி ஒவ்வொரு பொருளையும் நான் பார்த்து பார்த்து சேமித்து வர்றேன். இதற்காக எனது வருமானத்தில் பெரும் பகுதியை கலைப்பொருட்களை சேகரிப்பதற்காகச் செலவு செஞ்சுட்டு வர்றேன். என்னோட எல்லா விதமான முயற்சிக்கும் என் மனைவி உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்துட்டு வர்றாங்க.

பழம் பொருட்கள்
பழம் பொருட்கள்

இன்றைக்கும் வரலாறு சார்ந்து மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு பள்ளி கல்லூரிகளில் கண்காட்சி நடத்திட்டு வருகிறேன். இதற்காக மாணவர்களிடம் நான் எந்த கட்டணமும் வசூலிப்பது கிடையாது. தமிழகத்தில் நான் செல்லாத பள்ளி, கல்லூரிகளே கிடையாது. இன்னும் பல ஊர்களுக்கு வந்து கண்காட்சியை நடத்த எனக்கு அழைப்புகள் வருகிறது. தொடர்ந்து என்னால முடியும் வரை மாணவர்களுக்கு வரலாறு சம்மந்தமாக கல்வி சேவையைச் செய்வேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு