Published:Updated:

பெண்ணாகிய நான்! #MyVikatan

என் பெற்றோர் நடுத்தரக் குடும்பம் என்பது என் பாவமா???

Representational Image
Representational Image

என் தாய்க்கும் தகப்பனுக்கும் இரண்டாவது குழந்தையாகவும் இரண்டாவது பெண் குழந்தையாகவும் பிறந்தவள் நானே. பெண் பிள்ளை என்றாலே கிள்ளி எறிந்துவிடும் சமூகத்தில் சற்று காலம் தள்ளிப் பிறந்தவளென்பதால் மரணம் தப்பிப் பிறந்துள்ளேன்.

Representational Image
Representational Image

ஆயிரம் முத்தங்களோடு என் தந்தை அள்ளி அணைத்திருந்தாலும், பத்து மாதத் தவத்தின் வரமாக எண்ணி என் தாய் என்னைத் தழுவினாலும் என் பிறப்பு முழுமையான மனநிறைவினைத் தரவில்லை என்பதே உண்மை... "இதுவும் பெண்பிள்ளை.. எப்படிக் கரை சேர்க்கப்போகிறோம்" எனும் பயக்குரல் அவர்கள் மனதில் ஒலிக்க, என்னுடைய பிறப்பு ஒருவிதத்தில் அவர்களுக்குத் தோல்வியாகவே அமைந்துள்ளது.

எனக்கு முன் என் சகோதரி பிறந்தது என் பாவமா?? நானும் பெண்ணாகப் பிறந்தது என் பாவமா?? இல்லை.

என் பெற்றோர் நடுத்தரக் குடும்பம் என்பது என் பாவமா???

பிறக்கும் போதே எத்தகு சாதனையும் நிகழ்த்தாமல் பெற்றவர்களின் மனதை வென்ற ஆண் பிள்ளையாகப் பிறந்த என் தம்பிக்கு முன், எத்தகைய பாவமும் செய்யாமல் பெற்றவர்கள் மனதைக் கவராமல் தோற்றுப்போன பெண் பிள்ளையாகப் பிறந்தது சற்று பாரமாகவே கனக்கிறது.

ஆசை என்கிற வார்த்தையை அறியும் முன்னரே அதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் துவங்கும் குழந்தைகளுக்கு நான் விதிவிலக்கல்ல..

என் ஆசைகளை நிறைவேற்றி குட்டி தேவதையாக வளர்த்த என் தந்தையின் பாசம் என் மனதில் கனந்த பாரத்தைக் கரைத்தது..

பள்ளியில் பயிலும்போது 'ஆணும் பெண்ணும் சமம்' என சான்றோர்கள் உரக்கக் கூறியதை அறிந்தேன்..

பள்ளி விடுமுறையில் வீடு தங்காத என் தம்பியைப் பார்க்கிறேன். வீட்டைவிட்டு நகர இயலாத என்னை கண்ணாடியில் பார்க்கிறேன். என் மனம் கேட்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்பது எங்கே? என்று.

என் சக தோழியுடன் தோள் சாய்ந்து உரையாட ஆசையில்லையா?? இல்லை களத்து மேட்டுப் புழுதிகளில் கால் பதித்து விளையாடத்தான் ஆசையில்லையா?? ஏன் இல்லை. எல்லாம் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது ஏக்கங்களாக என் மனதில்...

நட்புக்கு இலக்கணமாய் ஆண்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கையில், நட்புக்கான அடித்தளம் அமைகின்ற வயதினைக் கடந்தும் அதை வளர்க்க முடியாத சூழல் என் போல் பெண்களுக்கு அமையாமல் போனது யார் செய்த பாவம்??

Representational Image
Representational Image

உணர்கிறேன்.. பெண்கள் தோற்கடிக்கப்படவில்லை.. களம் செல்லாமலே முடக்கப்பட்டிருக்கிறார்கள் என்று...

நதிகளுக்கும் தெய்வங்களுக்கும் பெண் பெயரிட்டுப் போற்றும் இச்சமுதாயத்தில்தான் பெண்மைக் குணங்களைக் கூறி இகழும் கெட்ட வார்த்தைகளும் விரவிக்கிடக்கின்றன... அவ்வார்த்தைகளைச் செவி கேட்கையில் பெண் மட்டுமல்ல பெண்ணின் குணங்களும் கொச்சையாக்கப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது..

இதுவரை நான் கண்ட என் கொஞ்ச சுதந்திரமும் பறிபோனது. ஆம், நான் பருவம் கண்ட பெண்ணாகினேன்.. இதுவரை இச்சமுதாயம் சொல்வதைத் தெரிந்துகொண்டிருந்த நான் அதன்படி நடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்..

தலை நிமிர்ந்து வானம்தான் எல்லை என்றிருந்தவள் இனி குனிந்த தலையோடு நடமாடக் கற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டேன்.. இன்னும் கொடுமை ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தருணத்தில் என்னை வீட்டிற்குள் அனுமதிக்காமல் போவது. ஓர் அறை மட்டுமே உள்ள வீட்டில் நான் எங்ஙனம் உறங்குவேன் உலவுவேன்??

இத்தனை கடினங்களைத் தாண்டித்தான் பள்ளி கல்லூரிப் படிப்பினை முடித்து நல்ல வேலையைப் பெற்று எம் பெற்றோர்களிடம் அனுமதி கோரினேன்.

ஆனால் என்னிடம் அவர்கள் கூறும் பதில் "இதுவரை உன் விருப்பப்படி படிக்க வைத்தோம். இனி எங்கள் விருப்பப்படி திருமணம் செய்து குடும்பப் பொறுப்புகளை கவனி" என்பது. இதற்காகவா நான் படித்தேன்? என் பெற்றோருக்காக நான் தோள் கொடுக்கக் கூடாதா? எனக்கு மட்டும் ஆசைகள் கனவாகத்தான் கரைய வேண்டுமா? என்ற அச்சம் எனக்கு பிடிவாத குணம் தந்தது. பெற்றோரிடம் போராடி இரண்டு ஆண்டு அனுமதியோடு எம் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்.

Representational Image
Representational Image

பயின்ற கல்வியின் பலனை அனுபவிக்கும் தருணம்தான் சற்று சுதந்திரக் காற்றை என் மேல் தூவிவிட்டது. ஆனால், அக்காற்றில் சில நச்சுக்களும் இருப்பதை அறியவில்லை. காதல், ஆசை என்ற பெயரில் என்னைச் சுற்றும் சில ஆண்களை எளிதாக என்னால் கடக்க முடியவில்லை.

லட்சியப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய நிலையில் காதல் கொண்டு என்னை விரட்டும் சில ஆண்களில் எனக்கானவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நான் எப்படி கையில் எடுப்பேன்?

ஏன் இந்தச் சுதந்திரக் கற்றைச் சுவாசித்தேன் என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஒருநாள் சாலையில்.. நானோ தனிமையில்..

அப்போது ஆண்மை என்பதின் அர்த்தம் தெரியாத சில ஆண்கள் என்னைச் சூழ நடுநடுங்கிப் போனேன்.

அச்சம் மற்றும் நாணத்தோடு என்னைப் படைத்த இறைவன் வீரத்தை அதிகமாகக் கொடுக்கத் தவறிவிட்டான். ஆண்களுக்கு நிகரான உடல் வலிமையைத் தரத் தவறிவிட்டான். அதுமட்டுமன்றி அந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தர மறந்துவிட்டான்.

என்னைத் தீண்ட வந்த அக்கயவர்களின் தலையை வெட்டி எறியும் எண்ணம் மனதில் தோன்றினாலும் அதைச் செயல்படுத்த உடல்வாகும் உடல் வலிமையும் எனக்கில்லாது போனதே. அப்போது வேடிக்கை பார்த்த ஒருசிலருக்கு மத்தியில் தானாக முன் வந்து என்னைக் காப்பாற்றிய அந்த இளைஞனைக் கரம் கூப்பி வணங்கினேன். என் பாதுகாப்பை உணர்த்திய அவன் மீதான பழக்கத்தில் அவனை மணந்து கொள்ள ஆசைப்பட்ட தறுவாயில் சாதி என்றொரு முட்டுக்கட்டை என் காதலுக்கு அபாயம் தெரிவித்தது. 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பது பள்ளிப் படிப்போடு முடிந்துவிட்டது. நடைமுறைக்குச் சாத்தியமற்ற இக்கூற்று எம் காதல் வெற்றிக்குப் பலனளிக்கவில்லை. ஏதேனும் ஒரு வழியில் நான் சிறைப்பிடிக்கப்பட்டே கிடக்கிறேன்.

Representational Image
Representational Image

இதோ எம் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து குடும்பப் பணியில் சென்றுவிட்டேன். புது இடம், புது மனிதர்கள், புது வாழ்க்கை. இனி என் மீதி நாள்கள் எல்லாம் இங்குதான். இனி என் தந்தை இடத்தில் என் கணவன், தாயினிடத்தில் என் பிள்ளைகள் இருக்க வேண்டுமாம். இது காலத்தின் நியதியாம். என்னை வளர்த்து ஆளாக்கிய குடும்பத்தை முழுமையாக கவனிக்க முடியாத நான் இன்னொரு குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன். சமையலறையும் படுக்கையறையுமே இனிமேல் என் பிரதான உலகம்.

ஓய்வின்றி கடிவாளத்தோடு இந்த வீட்டிற்குள் உலவப் போகிறேன்.

எங்கே என் கனவுகள்?

எங்கே என் திறமைகள்?

எங்கே என் ஆசைகள்?

எங்கே என் காதல்?

எதற்கும் விடையில்லை. அதற்குப் பலனுமில்லை.

நவீனம் என்பது உலகத்திற்கு மட்டும். பெண்ணின் மனதிற்கு அல்ல. உடனே மாற்றிக்கொள்ள.

இங்கே திருநங்கைகளுக்கும் இழிநிலை என்பதால் இங்கு பெண் அல்ல பெண்மைதான் சாகடிக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் உள்ளன.

இப்படிக்கு

பிறந்த வீட்டில் ஒரு வாழ்க்கை; புகுந்த வீட்டில் ஒரு வாழ்க்கை, பெற்றவர்களுக்காக ஒரு வாழ்க்கை, கணவனுக்காக மற்றும் பிள்ளைகளுக்காக் ஒரு வாழ்க்கை என சமுதாயம் சொல்லும் சிறை வாழ்க்கையினை மட்டும் வாழ்ந்து எனக்கான வாழ்க்கையை வாழ முடியாமலும் வாழத் தெரியாமலும் வாழும் பெண்ணாகிய நான்.

- அரவிந்த ராஜா சிவக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/