Published:Updated:

"எல்லாத்துக்கும் மேல அவளைப் பிடிச்சிருந்துச்சு!" மனவளர்ச்சியற்ற மனைவியின் நினைவில் வாழும் முதியவர்

குருசாமி

அருப்புக்கோட்டையை அடுத்த குருந்தமடத்தைச் சேர்ந்த குருசாமி தாத்தா மனவளர்ச்சியற்ற தன் மனைவிமீதான காதலைச் சொன்ன தருணம் அவரின் கண்கள் இரண்டிலும் கண்ணீராய் காதல் பூத்திருந்தது.

"எல்லாத்துக்கும் மேல அவளைப் பிடிச்சிருந்துச்சு!" மனவளர்ச்சியற்ற மனைவியின் நினைவில் வாழும் முதியவர்

அருப்புக்கோட்டையை அடுத்த குருந்தமடத்தைச் சேர்ந்த குருசாமி தாத்தா மனவளர்ச்சியற்ற தன் மனைவிமீதான காதலைச் சொன்ன தருணம் அவரின் கண்கள் இரண்டிலும் கண்ணீராய் காதல் பூத்திருந்தது.

Published:Updated:
குருசாமி
விருதுநகர் மாவட்டம் குருந்தமடத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், பொட்டல்காட்டின் வழி நடந்து வருகையில் எண்சுவடியில் இருக்கும் கால் மற்றும் முக்கால் பின்ன வாய்ப்பாட்டைப் பள்ளி மாணவர்கள் சொல்லச்சொல்லிக் கேட்க, அசந்துபோகும் வேகத்தில் கடகடவெனச் சொல்லும் வீடியோ நமக்குக் கிடைத்தது. "யார் சாமி இவரு" என்று வாய்பிளந்து கேட்கவைத்த அந்த முதியவர் குறித்து விசாரித்தோம்.

அருப்புக்கோட்டையையடுத்த குருந்தமடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியை ஒட்டி தகரஷீட்டால் வேயப்பட்டிருந்த அவரது வீடு வெயிலை உள்ளிருந்து கொப்பளித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 80 வயதைக் கடந்த முதுமையில் வெயிலோடு விளையாடிவிட்டு வீட்டுக்குவந்து கால் அயர படுத்திருந்தவரைத் தட்டி எழுப்பினோம். "ஹலோ... ப்ளீஸ் வெல்கம், யாரு நீங்க" என்று கேட்டவர் வீடியோவில் நாம் பார்த்த அதே குருசாமி தாத்தா. வரவேற்று வினவியவருக்கு, பத்திரிகையிலிருந்து வர்றோம் என பதிலளிக்கும்போதே கால்களைத் தொட்டு அழுதுவிட்டார் குருசாமி தாத்தா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அழுதவரை ஆறுதல்படுத்திப் பேச வைத்தோம். "மை நேம் இஸ் வி.ஆர்.பி.குருசாமி. சிறுவயசுல இ.எஸ்.எஸ்.எல்.சி. அதாவது 1972-ல் எட்டாங் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். அதுக்குப்பின்ன படிக்கல. அப்பதான் எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சையை அறிமுகப்படுத்துறாங்க. அத எழுதுன முதல் செட் நாங்கதான். அந்தப் பரீட்சைல நான் ரெண்டாவது ரேங்கோ, மூணாவது ரேங்கோ வாங்கினேன். சரியா ஞாபகம் இல்ல. ஆனா, அதுக்கு பிரைஸ் குடுத்தாங்க. சிலபேரு காசு கொடுத்தாங்க. காசை வாங்கி வீட்டுக்குச் செலவழிச்சுட்டேன்.

குருசாமி தாத்தா
குருசாமி தாத்தா
மை ஃபாதர், மதர், அங்கிள், ஒய்ஃப் ஆர் புவர். படிச்சி முடிச்சிட்டு ஃபயர் ஆபீஸ்ல கெமிக்கல் பாயிண்ட்ல வேலை பார்த்தேன். அப்பறம் கல்யாணம் கட்டினேன். என்னால முடிஞ்ச வரைக்கும் சம்பாதிச்சுக் காப்பாத்தினேன். ஒருகட்டத்துக்கு மேல வேலை செய்ய முடியாமப்போச்சு, வேலையை விட்டுட்டேன். வேலை பார்த்த வரையிலும் என்னோட சொந்த சம்பாத்தியத்துல மிச்சமானது இந்த வீடு மட்டும்தான்.

என்னோடது காதல் கல்யாணம். என் தங்கச்சியோட நாத்தனாவத்தான் நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என் மனைவிக்கு சரியா வாய் பேச வராது(மனம் மற்றும் உடல் வளர்ச்சி குன்றியவர்)"

சரியா வாய்பேச வராதுன்னா... என்ன சொல்ல வர்றீங்க எனக் கேட்டதற்கு,

"என் மனைவியை நான் கிண்டல் பண்ணிப் பேசமாட்டேன். எனக்கு அவ மேல ரொம்ப பிரியம். அதனால அப்படிப் பேசமாட்டேன் சாரி" எனச்சொல்லிவிட்டு, பேச்சைச் தொடர்ந்தார்.

குருசாமி தாத்தா
குருசாமி தாத்தா

"மத்தவங்கள மாதிரி சோறை பிணைஞ்சி தன் கையால எடுத்து வாய்ல வச்சி அவளுக்கு சாப்பிட தெரியாது. யாராவது சாப்பாடை அவளோட வாய்ல வச்சி அழுத்தி ஊட்டினாதான் சாப்பிடுவா. உடம்புக்கு சரியில்லாததால வலிப்பு வரும். அவளுக்குத் தலையில பெரிய வெட்டுத் தழும்பு இருக்கும். அதெல்லாம் எனக்கு ஒன்னும் பெருசில்ல. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னான்னா... அவளைக் கடைசி வரைக்கும் என்னால நல்லா பாத்துக்க முடியாமப்போச்சு. என் மனைவி இறந்து ரெண்டு வருஷமாகுது. ஆனா எனக்கு இப்பவும் அவ நினைப்பாத்தான் இருக்கு. மவராசி அவ இருந்த வரைக்கும் ஒன்னு ரெண்டா ஏதோ சாப்பாட்டுக்கு வழி கிடைச்சிது. அவ போனா... கூடவே எல்லாமும் போச்சு. இப்போ, சாப்பாட்டுக்கு” எனச் சொன்னவர், கைகளைக் காற்றில் ஏந்திக் காண்பித்தார்.‌ கண்கள் நனைந்திருந்தார். இப்போலாம் பசிக்கிறதே இல்ல. ரொம்பவும் வயித்தக் கிள்ளுற மாதிரியா இருந்தாதான் சாப்பிடப் போவேன். இல்லனா தண்ணியக் குடிச்சிக்கிடுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறிது அமைதிக்குபின், " ’யூ சீ, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.’

’இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி.’ இதன்படிதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். வயசு 80 ஆகிப்போச்சு. இப்ப கண்ணு சரியா தெரியல. எதிர்ல இருக்குற நீங்ககூட உத்தேசமா ஒரு உருவம் மாதிரிதான் தெரியுது. ரொம்பப் பக்கத்துல வந்தாதான் உங்க முகமே எனக்கு லேசா தெளிவோட தெரியும். வாழ்ந்த வரைக்கும் பெருசா எதும் சேர்த்து வைக்கல. அதனால இப்ப நாதியத்து நிக்கையில வயித்துக்காகப் பிச்சை எடுக்குறேன்.

குருசாமி தாத்தா
குருசாமி தாத்தா

வதுவார்ப்பட்டி வரைக்கும் போவேன். அங்க போறவர்ற புண்ணியவாளான்கள் கிட்ட கேட்பேன். இருந்தா தருவாக. தர்றதை வாங்கிட்டு வந்து கடையில நாலு இட்லி வாங்குவேன். அதை இரண்டா பிரிச்சி ஒரு பாதியைப் பகல் பொழுதுக்கும், ஒரு பாதியை நைட்டுக்கும் வச்சிக்கிட்டு ஒரு பொழுது பட்டினி கிடப்பேன். இப்படிதான் என் பாடு கழியுது. இங்க பக்கத்துல இருக்குற அன்னலட்சுமிங்க அவங்ககிட்ட இருந்தா சாப்பாடு குடுப்பாங்க. மறுப்பு சொல்லாம வாங்கிப்பேன். ஆனா, யாருக்கும் தொந்தரவு தர்ற மாதிரி போயி நிக்க மாட்டேன். தட்ஸ் ஆல் மை ஸ்டோரி" என்ற குருசாமி தாத்தாவிடம் நாம் சில கேள்விகள் கேட்டோம்.

திருமணத்துக்கு முன், உங்கள் மனைவி மனவளர்ச்சிகுன்றியவர் எனத் தெரிந்தும் காதலித்ததைப் பற்றிச் சொல்லுங்கள்?

அவ, எனக்கு உறவுக்காரப் பொண்ணுதான். அவள சிறுவயசுல இருந்தே நான் பாத்திருக்கேன். ரொம்ப அப்பிராணி. ரொம்ப நல்வவ. அதுக்கு மேல ஒருமனுஷனுக்கு என்ன வேணும். கல்யாணம் கட்டிக்கிட்டேன். ஒருவேளை நான் அப்படியொரு குறையோட பெண்ணா பொறந்திருந்தா என்னை யாரு கல்யாணம் பண்ணிருப்பாங்க?. அப்படிதான் அந்த இடத்திலிருந்து நான் யோசிச்சுப் பாத்தேன். எல்லாத்துக்கும் மேல எனக்கு அவளைப் பிடிச்சிருந்துச்சு. அதனால வீட்டுல கேட்டு கல்யாணம் கட்டிக்கிட்டேன்.

குருசாமி தாத்தா
குருசாமி தாத்தா

உங்களுக்குக் குழந்தைகள் அல்லது தத்துப்பிள்ளைகள் உண்டா?

”நோ... எங்களுக்குக் குழந்தை கிடையாது. என் மனைவிக்கு உடம்புக்கு சரியில்லாததால அதெல்லாம் எனக்குத் தோணல. அவளுக்கும் உடம்புல அந்த அளவுக்கு சக்தி இருக்காதுங்கறதால குழந்தையைப் பத்தி யோசிக்கவே இல்ல. அவளைத் தொந்திரவு பண்ணக்கூடாதுன்னு நானும் கடைசிவரைக்கும் இப்படியே இருந்துட்டேன். பட், அத பத்திலாம் ஒரு ப்ராபளமும் இல்ல. எனக்கு அவதான் குழந்தை. அவளுக்கு நான்தான் குழந்தை.”

உங்களுக்கு உடன்பிறந்தவர்கள் , சொந்தங்கள் இப்போதும் இருக்கிறார்களா?

”இருக்காங்க. எங்க வீட்ல 4 பிள்ளைங்க. எனக்கு அண்ணன், அக்கா, தங்கச்சி உண்டு. தங்கச்சி மதுரை விளாங்குடியில அவளோட பசங்ககூட இருக்கு. பாவம் அவளோட கணவரும் இறந்துட்டாரு. மாமா, மச்சான் உட்பட மற்ற சொந்தபந்தமும் இருக்காங்க. ஆனா, யாரும் வந்து பார்க்க மாட்டாங்க.”

குருசாமி தாத்தா
குருசாமி தாத்தா

இங்லீஷ்ல வார்த்தைகள போட்டு அப்பப்போ பேசுறீங்களே அதெல்லாம் எப்படிக் கத்துக்கிட்டீங்க?

”இதுக்கு முன்னாடி பேப்பர் படிப்பேன். ஸ்கூல் பசங்ககூட பேசுவேன். அப்பறம் உங்கள போல ஆளுககூட பேசும்போது அவங்க பேசுறத கவனிச்சு கத்துக்கிட்டதுதான் அதெல்லாம்.”

முதியோர் உதவித்தொகை கிடைக்குதா? அது உங்களுக்கு எத்தனை நாள் வரையிலும் கைக்கொடுக்குது?

”ஆமா, 1000 ரூபா தர்றாங்க. அத வச்சு மாசத்துல 10 நாள் செழிப்பா சாப்பிடுவேன். அதுக்குப் பிறகு, ’ஐயா... சாமி’ன்னுதான் கேட்பேன்.”

பண்டிகை நாள் உட்பட எப்போதாவது உங்களை யாரும் தேடி வருவதுண்டா?

”ம்ஹூம்... வரமாட்டாங்க. அப்படி வந்தா வர்றவங்களுக்கு மரியாதைக்காக நான் எதாவது சாப்பிடக் கொடுக்கணும். அப்படிக் கொடுக்க எதும் எங்கிட்ட இல்ல. கொடுத்தாலும் வாங்குறதுக்கு யாரும் தயாரா இல்ல. எங்கிட்ட இருந்து எடுத்துக் கொடுக்குற மாதிரி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைதான் இருக்கு. இந்த வீட்டுக்கு கரன்ட்டு கனெக்சன், தீர்வை போடுறதுக்குக்கூட எங்கிட்ட பணமில்லை. நிதமும் இருட்டுலதான் இருக்கேன்" எனச் சொல்கையில் அதுவரை தீர்க்கமாய் இருந்த அவரது குரல் சற்று தடுமாறியது. வணக்கம் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism