Published:Updated:

போலி எண்ணெய் பிராண்டுகள், உஷார்! #Brand_Imitation_Awareness

சில போலி நிறுவனங்கள் சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெயுடன் அதிகளவு பாமாயிலையோ அல்லது விலை மலிவான/தரம் குறைவான பிற எண்ணெய்களையோ கலந்து 'சமையல் எண்ணெய்' என பொதுவாக பாக்கெட்டுகளில் அச்சிட்டு விற்கின்றன.

எண்ணெய்
எண்ணெய்

'பிராண்ட்' என்பது நம்பிக்கை, பிராண்ட் என்பது அடையாளம், பிராண்ட் என்பது அந்தஸ்து! ஆயிரக் கணக்கான மணித்துளிகளை செலவழித்து, மூளையைக் கசக்கி மக்களின் தேவையை அலசி ஆராய்ந்து, பல படிநிலைகளைக் கடந்த பிறகே கடைசியாக ஒரு பிராண்ட் உருவாகிறது. ஒருமுறை, மிகச்சரியாக தயாரிப்பின் தரத்தை மக்கள் மனதில் பதியவைத்துவிட்டால் போதும், இந்தப் பிராண்டே 'ஜீபூம்பா' போல தொடர்ந்து வாடிக்கையாளர்களை வரவழைத்துவிடும்...

எண்ணெயில் போலி பிராண்டுகள்!

அசல் தயாரிப்புகள் போன்ற வடிவமைப்பு மற்றும் நிறம் கொண்ட பாக்கெட்டுகளில், அதிகபட்சமாக பாமாயிலைக் கலந்து அவற்றை சூரியகாந்தி எண்ணெய் என விற்கும் போலி நிறுவனங்கள் பெருகிவருகின்றன. ஆரஞ்சு நிறத்தில் அசல் தயாரிப்பு போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி எண்ணெய் பாக்கெட்டின் படம் சமீபத்தில் வாட்ஸாப்பில் பகிரப்பட்டு வருவது இதற்கொரு எடுத்துக்காட்டாகும்.

போலி எண்ணெய்களை உட்கொள்வதால் அஜீரணம், நெஞ்செரிச்சல், கல்லீரல் பாதிப்பு, இதயக் கோளாறு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை!

இந்தியாவைப் பொறுத்தவரை சமையல் எண்ணெய்களை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள், அதில் கலக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் விகிதத்தை பாக்கெட்டுகள்/டின்களில் உள்ள லேபிளில் குறிப்பிட வேண்டும். சில போலி நிறுவனங்கள் சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெயுடன் அதிகளவு பாமாயிலையோ அல்லது விலை மலிவான/தரம் குறைவான பிற எண்ணெய்களையோ கலந்து 'சமையல் எண்ணெய்' என பொதுவாக பாக்கெட்டுகளில் அச்சிட்டு விற்கின்றன. பிரபலமான பிராண்டட் எண்ணெய்களைப் போலவே இந்தத் தயாரிப்புகளும் இருப்பதால் பொதுமக்களும் அதைக் கவனிக்காது வாங்கிச் செல்கின்றனர். சில போலி எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாகவே 'இந்த எண்ணெய் வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே' (அதாவது சமையலுக்கு உகந்ததல்ல) எனப் பாக்கெட்டுகளில் அச்சிட்டு விற்பனை செய்கின்றன! இப்படிப்பட்ட போலி எண்ணெய்களை உட்கொள்வதால் அஜீரணம், நெஞ்செரிச்சல், கல்லீரல் பாதிப்பு, இதயக் கோளாறு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புண்டு, கவனம் தேவை!

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்ன கூறகிறது?

உணவு லேபிளில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை என உணவுக்கான தரத்தை நிர்ணயிக்கும் அரசாங்க அமைப்பான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அறிவுறுத்தும் விஷயங்கள்:

எண்ணெய்
எண்ணெய்

பிராண்ட் பெயர்

பாக்கெட்டில் இருக்கும் உணவில் அடங்கியிருக்கும் மூலப் பொருள்கள்

ஊட்டச்சத்து விவரங்கள்

உணவுப் பண்டத்தின் எடை அல்லது நிறை

உணவு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி ஆகும் தேதி

உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர்

பின் கோட் உடன் கூடிய (பதிவுசெய்யப்பட்ட நிறுவன அலுவலக) முகவரி

உணவைப் பயன்படுத்தும் முறை அல்லது செய்முறை விவரம்

பேட்ச் நம்பர் அல்லது கோட் நம்பர் அல்லது லாட் நம்பர் (இது பார் கோட் அகவும் அச்சிடப்படுகிறது)

இறக்குமதி செய்யப்படும் உணவு என்றால், எந்த நாட்டில் இருந்து தருவிக்கப்படுகிறது என்பதற்கான தகவல்

சமையல் எண்ணெய் சந்தை விலையை விட மலிவாகக் கிடைக்கிறது என்றால் நமக்கு சந்தேகம் எழ வேண்டும், 'உயர்வான பிராண்டை குறைந்த செலவில் வாங்குகிறேன்' எனப் போலிகளுக்கு அதரவு அளிக்கக்கூடாது, FSSAI அறிவுறுத்தியுள்ளது போல லேபிளைப் பார்த்துப் பொருள் வாங்க வேண்டும். விழிப்புணர்வுடன் இருப்போம், அசல் தயாரிப்பைப் போன்றே கண்ணுக்குத் தோற்றமளிக்கும் போலி பிராண்டுகளைக் களைவோம்!