Published:Updated:

மாதரே, 'புற்றுநோய்' தவிர்த்திடலாம் வாரீர்! - டாக்டர் எஸ். ராஜசுந்தரம்

புற்றுநோய்
புற்றுநோய்

உங்கள் வீட்டுப் பெண்கள் திடீரென்று கோவில்கள்/வழிபாட்டுத் தளங்களே கதி என்று கிடக்கிறார்களா? பிற குடும்ப உறுப்பினர்கள் தயவு செய்து அவர்களிடம் பேசி, அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கேளுங்கள்.

'புற்றுநோய்' என்னும் பெயரே இக்காலத்திற்கு ஒவ்வாத பிழையான பெயரோ என்ற கேள்விக்குறியுடன் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன். ஏனெனில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன், உடலில் பாம்பு புற்றுபோல் வளர்ந்த செல்களைக் குணப்படுத்த இயலாமல் மனித இனம் மாண்டுபோனபோது இட்ட பெயர் இதுவாகும். தற்காலக் கணினி உலகில், கடந்த 10 ஆண்டுகளாக இந்நோயைப் புற்று போல பார்ப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது. மாற்றமே நிரந்தரம் என அறிந்த நாம் இந்நோயின் பெயரை மாற்றிட முனைய வேண்டும் என இக்கட்டுரையின் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன்.

புற்றுநோய் புதிய நோய் அல்ல, அதை நாம் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவதன் மூலம் சிகிச்சையின் அணுகுமுறையில் புதிய பரிமாற்றங்களும், புரிந்துகொள்ளல்களும் ஏற்பட்டுள்ளன. பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் இந்நேரத்தில், மாதர்க்கு வரும் முக்கிய புற்றுநோய்கள் குறித்து அலசுகிறோம்...

டாக்டர் எஸ். ராஜசுந்தரம்
டாக்டர் எஸ். ராஜசுந்தரம்

1. மார்பகப் புற்றுநோய்

இந்தியாவில், இருபதில் ஒரு பெண்டிரைத் தாக்கும் அளவிற்கு மார்பகப் புற்று நோய் அதிகரித்துள்ளது. ஆனாலும்கூட, காலம் கடந்து முற்றிய நிலையில் வந்தாலொழிய பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அனைத்து மாதரும் 40 வயதிலிருந்து Full field digital mammogram (மேமோகிராம் பரிசோதனையை வருடம் ஒருமுறை) செய்துகொண்டால், இதற்கான சிறப்பு மருத்துவம் படித்த மருத்துவரால் 4-5 மில்லிமீட்டர் ஆரம்ப நிலைக் கேன்சர் கட்டிகளை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதன்பின் சிறியதோர் ஊசிகொண்டு USG Guidance-ல் சதைப்பரிட்சை செய்து கேன்சரை உறுதி செய்து, சிறிய அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சரைக் குணப்படுத்த முடியும்.

இத்தகைய ஆரம்ப நிலைக் கேன்சருக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி, டார்கெட்டட் தெரபி என எதுவுமே தேவையில்லை, செலவும் மிகக்குறைவு! மேலும் மிகச்சிறிய ஆரம்ப நிலை மார்பகப் புற்று நோய்களையும் மிக எளிதாக, மார்பகத்தை முற்றிலும் எடுக்காமலேயே குணப்படுத்த முடியும்.

2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவது மிக ஆறுதலான விஷயமாகும். இந்நோய் ஆரம்பித்து அறிகுறிகள் தெரிய குறைந்தது ஐந்து முதல் பத்து வருடங்கள் ஆகிறது (Preclinical Phase). இந்நிலையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு பெண்டிரும் Pap Smear (பேப் ஸ்மியர்) எனும் எளிய பரிசோதனை செய்துகொண்டால் மிக மிக ஆரம்ப நிலையில் நோயைக் கண்டறியலாம், தடுக்கலாம், மேலும் எளிதாகக் குணப்படுத்தலாம்.

ஆரம்பகால புற்றுநோயைத் தகுந்த நிபுணர் மூலம் லேப்ரோஸ்கோப்பி பயன்படுத்தி வலியின்றி அறுவை சிகிச்சை செய்து முற்றிலும் குணப்படுத்தலாம். சிறிது முற்றிய நிலையில், கதிர்வீச்சு மற்றும் மருந்துகள் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். HPV வைரஸால் இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. தொற்று ஆரம்பகாலத்திலேயே கண்டறியப்பட்டால், இந்தக் கேன்சர் வராமலேயே தடுக்க வாய்ப்புள்ளது!

3. கர்ப்பப்பை (Uterine Body) புற்றுநோய்

இந்நோய் முன்பை விட தற்போது அதிகரித்து வருகிறது. மாதவிடாய் நின்றபின் (Menopause ஆன) பெண்களுக்கு விலக்கு/ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளைச் செய்துகொண்டால் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இதையும் லேப்ரோஸ்கோபி மற்றும் ஓப்பன் மெத்தட் அறுவை சிகிச்சை செய்து முற்றிலும் குணப்படுத்த முடியும். தேவைப்பட்டால் மட்டும் கீமோதெரபி தரவேண்டி வரும். இதுவும் ஆரம்ப நிலையில் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய கேன்சரேயாகும்.

4. சினைப்பைப் புற்றுநோய் (Ovarian Cancer)

இந்நோய் தற்போது அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். மேலும் இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் மிகவும் குறைவு. 60% பெண்டிரை மூன்றாம் நிலையிலேயே கண்டறிகிறோம். ஆனாலும் சிறந்த புற்றுநோய் மையங்களில் (Comprehensive Care Centre) முறையான கீமோதெரபி கொடுத்து கட்டியைச் சுருக்கி பிறகு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும். மேலும், சில முற்றிய நிலை கட்டிகளுக்கும், சிகிச்சைக்குப் பின் வரும் கட்டிகளுக்கும் CRS-HIPEC எனும் நவீன அறுவை சிகிச்சையும், தொடர்ந்து அப்போதே 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இயங்கும் உபகரணம் மூலம், சுமார் 90 நிமிடங்கள் வயிற்றுப் பகுதியில் கீமோதெரபி கொடுப்பதன் மூலம் 50% நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

இத்தகைய சிகிச்சைக்குப்பின் அவ்வப்போது உரிய மருத்துவ ஆலோசனை (check up/follow-up) செய்துகொள்வது மிகவும் அவசியம். ஆக பயமின்றி பரிசோதனை செய்து ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்து, நோய்க்குரிய சிறப்பு மருத்துவரை அணுகினால், பரிபூரணமாக குணமடைந்து வெற்றிகரமாக வாழலாம்...

தாய்மாரே, தயவு செய்து வெளிப்படையாய்ப் பேசுங்கள்!

உங்கள் வீட்டுப் பெண்கள் திடீரென்று கோவில்கள்/வழிபாட்டுத் தளங்களே கதி என்று கிடக்கிறார்களா? பிற குடும்ப உறுப்பினர்கள் தயவு செய்து அவர்களிடம் பேசி, அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கேளுங்கள்... பொதுவாக பெண்கள் தங்களின் உடல் சார்ந்த பிரச்னைகளை பொதுப்படப் பேசுவதில்லை, கணவருக்கும் பிள்ளைகளுக்கும் தொந்தரவும் பண ரீதியான நெருக்கடியும் கொடுக்க அவர்கள் பயப்படுகின்றனர். உங்கள் தாய், மனைவி, அக்கா தங்கைகளுடன் பொறுமையாகப் பேசி அவர்களின் உடல் நலத்தை விசாரியுங்கள்.

உண்மையில் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் காட்டப்படுவது போல கேன்சர் மிக மிகக் கொடிய நோய் அல்ல, அதுவும் சரிசெய்யக் கூடிய, அதிலும் முற்றிலும் சரி செய்யப்படக்கூடிய நோய்தான். சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆறு மாதங்களிலேயே பரிபூரணமாக கேன்சரில் இருந்து விடுபட்டு இன்று மகிழ்ச்சியாய் வாழும் லட்சக்கணக்கானவர்களைப் பார்க்க முடிகிறது!

எனவே தயக்கம் வேண்டாம். தேவையற்ற நோய் எதற்கு? வெளிப்படப் பேசி தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்வோம். தளர்வின்றி வளர்வோம்!

அடுத்த கட்டுரைக்கு