Published:Updated:

சிறப்பு வகுப்பு, மாலை சிற்றுண்டி மட்டுமல்ல; மாணவர்களுக்கு இரவு உணவும் கொடுக்கும் கடலூர் அரசுப் பள்ளி

சி.முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி
சி.முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி

ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன அரசுப் பள்ளிகள். அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான், கடலூர் மாவட்டம், சி.முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி.

தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சியைப் பெற்றுவரும் வேளையில்தான், `மாணவர்கள் வரவில்லை என்ற காரணத்துடன் அரசுப் பள்ளிகளை மூடுவதில் முனைப்புக்காட்டி வருகிறது தமிழக அரசு' என்ற குற்றச்சாட்டும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. அதேநேரம், ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன அரசுப் பள்ளிகள். அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான், கடலூர் மாவட்டம், சி.முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி.

 பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 632 மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். பள்ளி வளாகம் முழுவதும் 11 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மழை நாள்களில் நனையாமல் பள்ளி வருவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் ரூ.300 மதிப்புள்ள குடை வழங்கப்பட்டிருக்கிறது. குப்பையைப் போடுவது, எச்சில் துப்புவது, தவறான வார்த்தைகளை உபயோகிப்பது, செல்போன் பயன்படுத்துவது என அனைத்துக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் மாலை 4.30 மணிக்கு பள்ளி நேரம் முடிந்ததும், தனியார் பள்ளிகளைப் போன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அப்போது, அன்றைக்கு எடுக்கப்பட்ட பாடங்களில் மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்துகிறார்கள் ஆசிரியர்கள். 6,7,8,9 மற்றும் +1 வகுப்புகளுக்கு, 5.45 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேபோல, பொதுத்தேர்வெழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள், பயிற்சித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தலைமை ஆசிரியர் மணிவாசகம்
தலைமை ஆசிரியர் மணிவாசகம்

அந்த மாணவர்கள் சோர்வடைந்துவிடாமல் இருக்க, மாலை நேர சிற்றுண்டியாக கொண்டைக்கடலை, வேர்க்கடலை, சுண்டல், வடை போன்றவை சுடச்சுட வழங்கப்படுகின்றன. அந்த நேரத்தில் தமிழ், வரலாறு, தேசப்பற்றுகொண்ட பழைய சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. அத்துடன், வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, இரவு உணவும் அவர்கள் கையில் கொடுத்தனுப்பப்படுகிறது. தொலைவிலிருந்து வரும் மாணவர்கள், தனியார் பள்ளி பேருந்துகளின் உதவியுடன் அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாக இறக்கிவிடப்படுகின்றனர்.

இவை அனைத்தையும் தனது சுய விருப்பத்திலும், சொந்தப் பணத்திலும் செய்துவரும் தலைமை ஆசிரியர் மணிவாசகத்தை சந்திக்கச் சென்றோம். தலைமை ஆசிரியரின் அறை உடல்நிலை சரியில்லாத மாணவர்களின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டிருந்ததால், மரத்தடியில் அமர்ந்து அலுவல் பணியைப் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் பேசினோம். ``என் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை மாணவர்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் செலவுசெய்கிறேன் அவ்வளவுதான். மாணவர்களின் கல்வி மட்டுமல்ல அவர்களின் எதிர்காலமும் ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. மாணவர்களுக்கு படிக்கத் தெரிந்தால் மட்டும் போதுமென்று நினைக்கிறது கல்வித்துறை.

மாலை நேர வகுப்பில் மாணவர்கள்
மாலை நேர வகுப்பில் மாணவர்கள்

ஆனால், தமிழோ, ஆங்கிலமோ ஆசிரியர்கள் வாயால் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொண்டு எழுதும்போதுதான் அங்கு உண்மையான கற்றல் தொடங்குகிறது. கடந்த 2018-ம் ஆண்டு, இந்தப் பள்ளிக்கு நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றதும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பொதுவான எழுத்துத் தேர்வு ஒன்றை வைத்தேன். அதில் 90% மாணவர்கள் எழுதுவதிலும், படிப்பதிலுமே பின் தங்கியிருந்தனர். அதன் விளைவுதான் இந்தச் சிறப்பு வகுப்புகள். சிறப்பு வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நான் கட்டாயப்படுத்துவதில்லை.

10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு அன்றாடம் தேர்வுகள்தான். அதற்காக என்னை விமர்சிப்பவர்களும் உண்டு. மெக்காலே கல்வி முறையைத்தான் இன்றளவும் நாம் கடைப்பிடிக்கிறோம். அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அனைத்து இடங்களிலும் தேர்வுகள்தானே மாணவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன? அப்படியானால், அந்த நீரோட்டத்தில் நாமும் சென்றுதான் ஆக வேண்டும். பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

எங்கள் மாணவர்களுக்கு நாங்கள் செய்துகொடுக்கும் சலுகைகளைப் பார்த்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் எங்கள் பள்ளியை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார்கள். சரியாகப் படிக்கவில்லை என்று தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நான்கு மாணவர்கள், இப்போது எங்கள் பள்ளியில் 100 மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்” என்றார்.

பிறருக்கு முன்மாதிரியாக விளங்கும் இப்படியான நல்லாசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு